`மேக்கேதாட்டூ அணையால் தமிழகத்துக்கு அதிக நன்மையா?’ – கர்நாடக அரசின் புதிய ஸ்டேட்மென்ட் சொல்வது என்ன?

மேக்கேதாட்டூவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடகா மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது. அதற்கு, தமிழக அரசு கடும் ஆட்சேபனை தெரிவித்துவருவதால், கர்நாடகாவால் மேக்கேதாட்டூவில் அணையைக் கட்ட முடியாத நிலை இருந்துவருகிறது.

சித்தராமையா

இந்த நிலையில், மேக்கேதாட்டூ அணையால் தமிழகத்துக்கு நன்மைகள் கிடைக்கும் என்று கர்நாடகா மாநில அரசியல்வாதிகள் பேசிவருகிறார்கள்.

கர்நாடகாவில் பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் என எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மேக்கேதாட்டூவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது என்ற கர்நாடகாவின் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றன.

டி.கே.சிவக்குமார்

ஏற்கெனவே தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் நீண்டகாலமாக சிக்கல் நிலவிவரும் சூழலில், மேக்கேதாட்டூ விவகாரம் இன்னொரு சிக்கலாக உருவெடுத்திருக்கிறது.

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த ஆண்டு பதவியேற்றது. அங்கு, துணை முதல்வரான டி.கே.சிவக்குமார், கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். மேக்கேதாட்டூ அணை, காவிரி நீர்ப் பங்கீடு ஆகிய இரு விவகாரங்களில் தமிழகத்துடன் இணக்கமான போக்கை டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட கர்நாடகா அரசு தரப்பு கடைப்பிடிக்கவில்லை. அதனால், இந்த விவகாரங்களால் இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவு பாதிக்கப்படும் அபாயம் அவ்வப்போது ஏற்படுகிறது.

குமாரசாமி

காவிரியில் தமிழ்நாட்டுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்ட அளவுப்படி, காவிரி நீரை கர்நாடகா வழங்குவதே இல்லை. ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி, உரிய பங்கீட்டை கர்நாடகா வழங்குவதில்லை. இந்த நிலையில், மேக்கேதாட்டூவில் அணை கட்டிவிட்டால், தமிழ்நாட்டுக்கு வந்துகொண்டிருக்கும் கொஞ்சநஞ்ச காவிரி நீரும் சுத்தமாக நின்றுவிடும் என்பதுதான் தமிழ்நாட்டின் கவலையாக இருக்கிறது. அதனால்தான், மேக்கேதாட்டூ அணையை தமிழ்நாடு கடுமையாக எதிர்த்துவருகிறது.

மேக்கேதாட்டூ அணையை அனுமதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் தமிழ்நாடு உறுதியாக இருக்கிறது. தமிழ்நாட்டின் அனுமதியின்றி கர்நாடகாவால் காவிரியாற்றின் குறுக்கே அணையைக் கட்டிவிட முடியாது. ஆகவேதான், மேக்கேதாட்டூ அணையால் கர்நாடகாவைவிட தமிழ்நாட்டுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று கர்நாடகா ஆட்சியாளர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

‘மேக்கேதாட்டூ அணை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசுடன் பேசத் தயாராக இருக்கிறேன்’ என்று கூறியிருக்கும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, ‘மேக்கேதாட்டூ அணையில் 65 டி.எம்.சி தண்ணீரைச் சேமிக்க முடியும். அதிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். மேலும், பெங்களூருவுக்கு குடிநீர் வழங்க முடியும். அணையில் சேமிக்கப்படும் தண்ணீரை, பற்றாக்குறை காலத்தில் தமிழகத்துக்குத் திறந்துவிட முடியும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

காவிரி ஆறு

மேக்கேதாட்டூ அணையால் தமிழ்நாட்டுக்கு நன்மைகள் கிடைக்கும் என்ற கருத்தை கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான குமாரசாமியும் கூறியிருந்தார். தற்போது, அதே கருத்தை துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரும் கூறியிருக்கிறார்.

‘மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது கர்நாடகாவைவிட தமிழ்நாட்டுக்கு அதிக உதவியாக இருக்கும். மேக்கேதாட்டூ அணையில் தண்ணீரைத் தேக்கிவைப்பதன் மூலமாக, தமிழ்நாட்டுக்கு சரியான நேரத்தில் தமிழ்நாட்டுக்கு சரியான நேரத்தில் தண்ணீரைத் திறந்துவிட முடியும். பெங்களூருவில் இருக்கும் கன்னடர்கள், தமிழர்கள், தெலுங்கர்கள் என அனைவரும் இந்தத் திட்டத்தின் மூலம் குடிநீர் பெற்று பயனடைவார்கள்.

காவிரி நீர்

எனவே, அவர்கள் அனைவரும் மேக்கேதாட்டூ அணை திட்டத்துக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். காவிரி விவகாரம் குறித்து நாங்கள் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டியதைப் போல, தமிழ்நாட்டிலும் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. அவர்கள் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், மேக்கேதாட்டூ அணை தமிழ்நாட்டுக்கு பயனளிக்கும் என்பதால், அதற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

இதே சிவக்குமார்தான், கடந்த மக்களவைத் தேர்தலின்போது, பெங்களூரு புறநகர் தொகுதியில் போட்டியிட்ட தன்னுடைய சகோதரர் டி.கே.சுரேஷுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தபோது, ‘நாங்கள் உங்களுடன் டீல் பேச வந்திருக்கிறேன். நீங்கள் என் சகோதரரை வெற்றிபெறச் செய்தால், அவர் உங்களுக்கு காவிரியிலிருந்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வார்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

டி.கே.சிவக்குமார்

அது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘நல்ல வழியிலோ, மோசடியாகவோ மேக்கேதாட்டூ அணையைக் கட்டி, அங்கிருந்து பெங்களூரு நகருக்கு குடிநீர் கொண்டுவருவோம் என்பதை தேர்தல் பிரசாரத்தில் மக்களுக்கு தெரிவிக்கவே அவ்வாறு கூறினேன்’ என விளக்கம் தந்தார் டி.கே.சிவக்குமார். ‘மேக்கேதாட்டூ அணையால் கர்நாடகாவைவிட தமிழகத்துக்குத்தான் அதிக நன்மை கிடைக்கும்’ என்று டி.கே.சிவக்குமார் இப்போது கூறுவதன் சூட்சுமம் இதுதானா?!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88