2024-25 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சியினர் கடும் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், `மத்திய அரசுக்கு மலக்குழி மரணங்களைத் தடுத்து நிறுத்தும் எண்ணம், துளியும் இல்லை’ என சஃபை கர்மச்சாரி அந்தோலன் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான பெஸ்வாடா வில்சன், பட்ஜெட்டில் SRMS (Self-Employment Scheme For Rehabilitation of Manual Scavengers) நிறுத்தப்பட்டிருப்பது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிவிப்பு குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பெஸ்வாடா வில்சன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தூய்மைப் பணியாளர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட SRMS திட்டம் நிறுத்தப்பட்டிருப்பது, துரதிஷ்டவசமானது. மத்திய பட்ஜெட்டில் மலக்குழி மரணங்கள் பற்றி ஒரு குறிப்புகூட இல்லை. உ.பி, பீகார், ம.பி, ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளில் அப்பட்டமாக இத்தகைய அநீதிகள் தொடர்கின்றன.
இதை ஒழிக்க பட்ஜெட் ஒதுக்காத மத்திய அரசின் நிலைப்பாடுதான் என்ன… இந்தக் கொடூர வழக்கத்தை ஒழிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லையா… அவர்களை (தூய்மைப் பணியாளர்கள்) மனிதர்களாக மதிக்கக்கூட மறுத்து விட்டது. இந்த அரசில் மனித மாண்புக்கும், உயிருக்கும் மரியாதை இல்லை போல!
இந்தியாவில், கடந்த 6 மாதங்களில் மட்டும் 43 மலக்குழி மரணங்கள் நடந்துள்ளது. ஆனால் பட்ஜெட்டில் இது குறித்த பேச்சே இல்லாமல், மௌனமாகவே இருந்தார்கள்.
`மனித மலத்தை மனிதனே அள்ளும் கொடூர வழக்கம் இந்தியாவில் இல்லை’ என மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே கூறுவது, குருட்டுக் கண் வழியாகப் பார்க்கும் பார்வையே. அவர் கூறும் பேச்சு ஜோடித்த பொய் என்பதற்கு, நிதி ஆயோக் எடுத்த சர்வேதான் சாட்சி. அந்த துறைசார் அமைச்சரே இவ்வாறு மனசாட்சி இன்றி மனிதநேயமற்ற முறையில் பொய் கூறுகிறார். இந்த பட்ஜெட்டில் அந்தத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியையும் பிடுங்கிவிட்டனர்.
ஆனால், உண்மையில் நிலைமை இங்கு தலைகீழாக இருக்கிறது. தூய்மைப் பணியாளர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த அஞ்சுகிறார்கள். மாநில அரசுகள் காவல்துறை மூலம் தூய்மைப் பணியாளர்களைக் கைதுசெய்து விடுவதாக மிரட்டுகின்றன.
அதனால், அவர்கள் அடையாள ‘Identity’ அச்சத்தால், வெளியே வருவதே இல்லை. மேலும், கடந்த பத்து ஆண்டுகளாகத் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுக்கு மேற்கொண்ட நடவடிக்கை குறித்த வெள்ளை அறிக்கையைப் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும்.” என மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறார்.