“இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு!” – அமெரிக்காவில் படிக்க ஸ்காலர்ஷிப் பெற்ற சலவைத்தொழிலாளியின் மகள்

அமெரிக்க வெளியுறவு துறை நிதி உதவியுடன் அந்நாட்டில் மேற்படிப்பைப் பயிலும் வாய்ப்பைப் பெறுள்ளார் லக்னோவைச் சேர்ந்த சலவைத் தொழிலாளியின் மகளான தீபாளி கனோஜ்யா.

16 வயதான தீபாளி கனோஜ்யா லக்னோவைச் சேர்ந்தவர். 10-ம் வகுப்பு படிக்கும் தீபாளியின் அப்பா ஒரு சலவைத் தொழிலாளி. ஆனால் அவளது தந்தை உடல்நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் தீபாளிதான் வீட்டில் டியூசன் நடத்தி தனது அம்மாவிற்கு உதவி செய்து வந்திருக்கிறார்.

தீபாளி – நண்பர்களுடன்

நலிந்த பொருளாதார பின்னணியைச் சேர்ந்த பெண்களுக்கு கல்வி வழங்கும் ஸ்டடி ஹால் கல்வி அறக்கட்டளையின் ஒரு பிரிவான பிரேர்னா பெண்கள் பள்ளியில் தீபாலி சேர்ந்து படித்து வந்தார். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு துறை நிதி உதவியுடன் அந்நாட்டில் மேற்படிப்பைப் பயிலும் வாய்ப்பை இந்தியாவில் இருந்து 30 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

அந்த 30 மாணவர்களில் 10-ம் வகுப்பு படிக்கும் தீபாளியும் ஒருவர். இது குறித்துப் பேசியிருக்கும் தீபாளி, “இந்தியா முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மாணவர்களில் நானும் ஒருவர் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பல்வேறு கலாசாரங்களைப் பற்றி அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது ஆசிரியர்களிடமிருந்து அமெரிக்காவைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. அதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்வேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

தீபாளி கனோஜ்யா

“முதல் முறை அவளைத் தனியாக அனுப்புவதற்குச் சற்று பதற்றமாக இருந்தாலும் நான் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்” என்று தீபாளியின் அம்மா கூறியிருக்கிறார். ஆகஸ்ட் 19-ம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கும் தீபாளி கனோஜ்யாவிற்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.