`தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநர் பதவி கிடைக்காதது வருத்தம்!’ – சொல்கிறார் கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டடம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“ஒன்றிய அரசுக்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மேலோட்டமாக எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் வைக்கும் குற்றச்சாட்டு. எந்த திட்டத்தில், எந்த தருணத்தில் தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுக்கு ஒத்துழைக்கவில்லை என்று பட்டியலிட வேண்டும். தேர்தல் நேரத்தில் கூட மோடி பிரசாரத்திற்கு வரும்பொழுது, ‘தமிழ்நாடு அரசு எங்களுடன் ஒத்துழைக்கவில்லை’ என்று மேலோட்டமாக கூறினார். எந்த திட்டத்தில் ஒத்துழைக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஜவுளி பூங்காவுக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறினால் ஜவுளி பூங்காவிற்கு நிதி ஒதுக்கி உள்ளார்களா?. நிதி ஒதுக்கி எந்த வகையில் முட்டுக்கட்டை போட்டார்கள் என்பதை தெளிவாக கூற வேண்டும். அவ்வாறு சொன்னார்கள் என்றால் தமிழ்நாடு அரசு பதில் சொல்லும். தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தேர்தலுக்கு முன்னால் ஒன்று கூறுகிறார்… தேர்தலுக்கு பின்னால் ஒன்று கூறுகிறார். அதனால், அவர் கூறுவது எனக்கு தெரியவில்லை… புரியவில்லை.

கார்த்தி சிதம்பரம்

கல்வி கடன் வாங்கியவர்கள் கொரோனா காலத்தில் அந்த கடனை கட்ட முடியாமல் தவித்தார்கள். அதனால், அந்தக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டு இருந்தோம். அந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. மதிய உணவு திட்டத்திற்கும், காலை உணவுத் திட்டத்திற்கும் நிதி கேட்டிருந்தோம். பட்டினி பட்டியலில் 110- வது இடத்தில் இந்தியா உள்ளது. அதனால், பள்ளிக்கூடம் மூலமாக உணவு உண்ணும் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதை குறைத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு தருணத்திலும் சாதாரண மக்களுக்கு விரோதமான திட்டத்தினை செய்திருக்கிறார்கள். சாதாரண மக்கள் பயன்படக்கூடிய திட்டங்களுக்கு நிதியை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். கட்சியை விட நாடு தான் முக்கியம் என்பதை எப்போதும் நான் ஏற்றுக்கொள்கிறேன். தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநர் பதவி கிடைக்கவில்லை என்ற செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். சௌகர்யமாக தெலங்கானாவின் ஆளுநராக இருந்தர் அண்ணாமலையின் சித்து விளையாட்டால் பலிகடாவாக்கப்பட்டார். இன்று மீண்டும் ஆளுநர் அறிவிப்பின் போது தமிழிசை சௌந்தரராஜன் பெயர் இல்லாததைக் கண்டு வருத்தம் அடைகிறேன். யாரை அமைச்சராக்க வேண்டும்… யாருக்கு பதவி உயர்வு தர வேண்டும்… யாரை நீக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் முழு உரிமை. மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம்… யாரை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அதேபோல், தான் பிரதமருக்கும் அந்த உரிமை உள்ளது. தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநர் பதவி கிடைக்காதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது” என்றார்.