`6 மாதங்களில் 595 கொலைகள்… தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை!’ – எடப்பாடி பழனிசாமி காட்டம்

தூத்துக்குடி அ.தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூவின் தந்தை ஓய்வுபெற்ற ஆசிரியர் செல்லையா, வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் கடந்த சில நாள்களுக்கு முன்பு காலமானார். அவரின் உருவப் படத்திற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்திட தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை பாலியல் கொடுமை அன்றாட நிகழ்வாக நடந்து வருகிறது. கொலை நடக்காத நாளே கிடையாது. கடந்த ஜனவரி 1 முதல் தற்போது வரை 595 கொலைகள் நடந்துள்ளது.

இன்று தமிழகம் கொலை மாநிலம் ஆக மாறி உள்ளது. அன்றாட சம்பவமாக கொலைகள் இன்று நடந்து வருகிறது. இந்த அரசு காவல்துறையை ஏவல் துறையாக வைத்துள்ளது.

காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்காத அரசாக உள்ளது. இனியாவது முதலமைச்சர் காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். ஆடுகளை வெட்டுவதுபோல மனிதர்களை வெட்டுகின்ற நிலை மாற வேண்டும். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா… கஞ்சா போதையில் கொலை அதிகரித்து வருகிறது. தி.மு.க அரசு இரும்புக்கரம் கொண்டு இதை அடக்க வேண்டும்.

வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா தமிழகத்திற்கு வருவதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு திறமை இல்லாத அரசாங்கமாக இந்த தி.மு.க அரசைப் பார்க்க முடிகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். போதைப்பொருளால் இளைஞர்கள், மாணவர்கள் சீரழியக்கூடிய காட்சி தொடர்கிறது.

இந்த போதையால் பல கொலைகள் தமிழகத்தில் நடந்த வண்ணம் உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலைசெய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலைசெய்யப்பட்டுள்ளார். இதில் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் கொலைசெய்யப்படுவதும் சர்வ சாதாரணமாக தமிழகத்தில் நடந்து வருகிறது, இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

பொதுமக்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை. அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை, இந்த நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது.

தி.மு.க நேற்று ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மத்திய அரசு மாநிலத்திற்கு தேவையான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

பா.ஜ.க., ஆட்சியிலும் காங்கிரஸ் ஆட்சியிலும் தி.மு.க-வினர் மத்தியில் மந்திரி சபையில் இருந்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் நிதியமைச்சராக இருந்தார். அப்போது எவ்வளவு பெரிய திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தனர்…

எவ்வளவு பெரிய திட்டத்தை துவக்கினர்… இதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று தமிழகத்தில் தி.மு.க மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. இதை மறைக்க தி.மு.க நேற்று போராட்டத்தை நடத்தி உள்ளது. இதுதான் உண்மை. 13 ஆண்டுக்காலம் மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது மக்களை பற்றிச் சிந்திக்கவில்லை.

எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி ஸ்டாலின் பேசி வருகிறார். அ.தி.மு.க ஆட்சியில் விவசாயிகளுக்கு அற்புதமான திட்டம் சேலத்தில் கால்நடைகளுக்கு என்று பிரத்யோகமான பூங்கா ஆயிரம் கோடி மதிப்பில் கட்டப்பட்டது, அதை இன்னும் ஸ்டாலின் திறக்கவில்லை.

கட்டப்படாத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முதல்வர் குரல் கொடுத்து வருகிறார். 1,500 ஏக்கரில் கட்டப்பட்ட கால்நடை பூங்காவை முதல்வர் ஏன் திறக்கவில்லை… இந்தப் பூங்கா தொடங்கி வைக்கப்பட்டிருந்தால் கால்நடை மருத்துவம் படிக்கும் மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பார்கள். அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக முடக்கப்பட்டுள்ளது. கட்டப்படாத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கலைத் தூக்கிக் கொண்டு பேசுகிறார்… பல லட்சம் செங்கல்களால் கட்டி முடிக்கப்பட்ட கால்நடை பூங்காவைத் திறக்கவில்லை. உண்மையிலேயே ஒரு விவசாயி என்கிற முறையில் வேதனைப்படுகிறேன்.” என்றார்.