`கனிம வள நிலங்கள்… வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம்’ – உச்ச நீதிமன்ற தீர்ப்பும் பின்னணியும்

கனிமங்கள், சுரங்கங்கள் மீது மத்திய அரசு வரிகளை விதித்து வருவாயை ஈட்டிவருகிறது. இந்த நிலையில், கனிம வளங்கள், கனிம வளம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

தலைமைச்செயலகம்

வழக்கின் பின்னணி..!

தமிழக அரசுக்கும், இந்தியா சிமென்ட் நிறுவனத்துக்கும் இடையேயான வழக்கில் உச்ச நீதிமன்றம் முதலில் இந்த தீர்ப்பை வழங்கியது.

தமிழகத்தில் சுரங்கம் குத்தகைக்கு எடுத்திருந்த இந்திய சிமென்ட்ஸ் நிறுவனம், அதற்கான உரிமைத் தொகையை தமிழ்நாடு அரசுக்கு செலுத்திவந்தது. இந்த நிலையில், உரிமத் தொகையுடன், செஸ் வரியை கூடுதலாக தமிழக அரசு விதித்தது. அதை எதிர்த்து இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது.

இந்தியா சிமெண்ட்ஸ்

இந்த வழக்கை 1989-ம் ஆண்டு ஏழு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அந்த அமர்வு வழங்கிய தீர்ப்பில், ‘சுரங்கங்கள், கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் – 1957-ன் கீழ் மத்திய அரசுக்கே முதன்மையான அதிகாரம் இருக்கிறது. இந்தச் சட்டத்தின் கீழ் மாநில அரசு உரிமைத் தொகையை மட்டுமே வலிக்க முடியும். கூடுதல் வரி எதையும் மாநில அரசால் விதிக்க முடியாது. உரிமத்தொகை என்பது வரிதான்’ என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.

ஆனால், இதற்கு மாறுபாடான ஒரு தீர்ப்பை வேறொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதாவது, நிலம் மற்றும சுரங்க நடவடிக்கைகள் மீது செஸ் வரி விதிப்பது தொடர்பாக மேற்கு வங்க அரசுக்கும், கெசோரம் தொழில் நிறுவனத்துக்கும் இடையேயான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

உச்ச நீதிமன்றம்

அந்த வழக்கில், 2004-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ‘1989-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வாங்கிய தீர்ப்பில், உரிமத் தொகை என்பது வரிதான் என்று குறிப்பிடப்பட்டது தட்டச்சில் ஏற்பட்ட தவறாகும். அதை, உரிமத்தொகை மீது விதிக்கப்படும் செஸ் ஒரு வரி என்றுதான் வாசிக்க வேண்டும். எனவே, 1989-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பும், உரிமத்தொகை என்பது வரி அல்ல என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன் பிறகு, இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

தலைமை நீதிபதி சந்திரசூட்

இந்த வழக்கில், இரண்டு மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உள்பட எட்டு நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர். அந்த அமர்வில் இடம்பெற்ற நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

தலைமை நீதிபதி சந்திரசூட் 200 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வாசித்தார். அந்தத் தீர்ப்பில், ‘உரிமத்தொகை என்பது சுரங்கத்தைக் குத்தகைக்கு எடுப்பதால் குத்தகைதாரரால் மாநில அரசுக்கு வழங்கப்படும் ஒப்பந்தத்துக்கான தொகையாகும். அதை வரி விதிப்பாகக் கருத முடியாது. உரிமத்தொகை, வாடகையை வரியாகக் கருத முடியாது.

உச்ச நீதிமன்றம்

உரிமத்தொகையும் வரிதான் என்று 1989-ம ஆண்டு இந்தியா சிமென்ட்ஸ் தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்படப்பட்டது தவறு. சுரங்கங்கள், கனிமங்கள், கனிம வளம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நீதிபதி நாகரத்னா அளித்த தீர்ப்பில், ‘சுரங்கங்கள், கனிமங்களைக் கொண்ட நிலங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுக்கு உரிமை கிடையாது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘கனிம வளங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கு உரிமை இருக்கிறதா, இல்லையா?’ என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88