`அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் கல்வராயன் மலைப்பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலினோ, அமைச்சர் உதயநிதியோ நேரில் சென்று பார்வையிட்டால் அப்பகுதி மக்களுக்கு ஏதாவது நன்மை ஏற்படும்’ என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதையொட்டிய விசாரணையில், பல தசாப்பதங்களாகவே கல்வராயன் மலைப்பகுதிதான் சட்டவிரோத கள்ளச்சாராய காய்ச்சுவதற்கும், விற்பனை செய்வதற்குமான முக்கியப் புகலிடமாக இருப்பது என்பது மீண்டும் உறுதியானது. இதையடுத்து, கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராய புழக்கத்தை தடுத்த நிறுத்தவேண்டும் என்றால், அந்தப் பகுதியை மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலமாக மாற்றவேண்டும், அப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் வகையில் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக ஆர்வலர்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை எழுப்பினர்.
அதேபோல சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி என்பவர் `கல்வராயன் மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கின்றனர். அவர்களின் கிராமங்களுக்கு மருத்துவமனை, சாலை வசதிகள் என எந்த அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை’ என சமூக ஊடகங்களுக்கு பேட்டியளித்துவந்தார். அந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை மேற்கொண்டது. அப்போது நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி, கல்வராயன் மலைப்பகுதியை ஒட்டிய கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். கல்வராயன் மலைப்பகுதியச் சேர்ந்த பல குக்கிராமங்கள் 1976-ம் ஆண்டில்தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. அதுவரையில் அந்த மக்களுக்கு அரசின் எந்தவொரு சலுகையும் கிடைக்கவில்லை. பின்னர் 1996-ம் ஆண்டில்தான் அவர்கள் தங்களின் வாக்குரிமையையே பதிவு செய்திருக்கின்றனர். இந்த செய்திகளெல்லாம் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
இதனால்தான் அப்பகுதி மக்களின் கல்வி, வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியாகி, தங்களின் வாழ்வாதாரத்துக்காக கள்ளச்சாரய விவகாரங்களில் வாழ்க்கையை திசைமாற்றியிருக்கின்றனர். எனவே, அரசாங்கம் இந்தப் பழங்குடி மக்களின் மறுவாழ்வுக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும் தேவையான அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்யவேண்டும். இதை கவனிப்பது அரசின் அரசியலமைப்புச் சட்ட கடமை. ஆகவே, கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்களின் தற்போதைய நிலை என்ன? அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன? அவர்களுக்கு அரசின் சலுகைகள் சென்றடைந்திருக்கின்றனவா? என்பவை குறித்து ஜூலை 24-ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என அரசுத் தலைமை வழக்கறிஞரிடம் தெரிவித்து, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த அறிக்கை சம்மந்தமான உண்மைத் தன்மையை உறுதிசெய்ய நீதிமன்றத்துக்கு உதவியாக வழக்கறிஞர் தமிழ்மணியை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், நேற்று முந்தினம் (ஜூலை 24) இந்த வழக்கு விசாரணை மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் விசாரணைக்கு ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் வரும் ஜூலை 26-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அப்போது பேசிய மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி, `கல்வராயன் மலைப்பகுதி கிராமங்களில் வளர்ச்சிட்டங்கள், அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றால் முதலமைச்சரோ, அமைச்சர்களோ நேரில் வந்து ஆய்வு செய்யவேண்டும். அப்போதுதான் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள்’ என்று கருத்து தெரிவித்தார்.
அதை ஆமோதித்த நீதிபதிகள், “கல்வராயன் மலைப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்தியாவசியத் தேவைகளான கல்வி, மருத்துவம், சாலைப் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும். மேலும், கல்வராயன் மலைப் பகுதியாக இருப்பதால் அங்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். நீதிபதிகளாகிய நாங்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்வதைவிட, தமிழ்நாடு முதலமைச்சர் சென்று பார்வையிட்டால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். அவர் செல்லமுடியாத பட்சத்தில் சமூகநலத்துறை அமைச்சரோ, விளையாட்டுத்துறை அமைச்சரோ நேரில் சென்று பார்வையிட்டால் அப்பகுதி மக்களுக்கு ஏதாவது நன்மைகள் ஏற்படும்!” என கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் தமிழ்மணியைத் தொடர்புகொண்டு பேசினோம். “கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் எல்லையில்தான் கல்வராயன் மலை அமைந்திருக்கிறது. குறிப்பாக, ஆத்தூர், சங்கராபுரம், ஏற்காடு ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட கல்வராயன் பகுதிகளில்தான் 95% பழங்குடி மக்கள் வசித்துவருகின்றனர். இங்கிருக்கும் பெரும்பாலான பழங்குடி கிராமங்களில் சாலை வசதிகள், மருத்துவமனை வசதிகள் கிடையாது. குறிப்பாக, வெள்ளிமலை, சின்னத்திருப்பதி ஆகிய பகுதிகளில் 28 கி.மீ அளவுக்கு சாலைகளே இல்லை. கடந்த தேர்தல் வரையிலும் ஓட்டுக் கேட்டுவரும் வேட்பாளர்கள்கூட சாலை வசதிகள் இல்லாததால் கிராமங்களுக்கு வராமல், தங்கள் சொந்த செலவில் டிராக்டர் போன்ற வாகனங்களை கிராமங்களுக்கு அனுப்பி அங்கிருக்கும் பழங்குடி மக்களை நகர்ப்புறங்களுக்கு அழைத்துவந்து, அங்கு கூட்டம்கூட்டி வாக்கு கேட்கிறார்கள். இது எவ்வளவு பெரிய ஜனநாயகக் கேலிக்கூத்து.
இது ஒருபுறமிருக்க கல்வராயன் மலைப்பகுதியில் வசித்துவரும் மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வசதியும் கேள்விக்குறியாக உள்ளது. இந்தப் பகுதிகளில் இருக்கும் பள்ளிக்கூடங்கள், விடுதிகளில் முறையான கழிப்பிட வசதிகளே இல்லை. மாணவர்கள் மட்டுமல்லாமல் மாணவிகளும் வேறுவழியின்றி திறந்தவெளியை பயன்படுத்தும் தர்மசங்கடமான நிலையில் இருந்துவருகிறார்கள். பழங்குடியினத்தைச் சேர்ந்த செல்வக்குமார் என்ற இளைஞர் முதுகலை இரட்டை பட்டப்படிப்பு படித்தும் வழிகாட்டுதல் வேலைவாய்ப்பு இல்லாமல் மாடுமேய்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். படிப்பை பாதியிலேயே நிறுத்துவிட்டு குடும்பத்துடன் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்லும் அவலமும் அரங்கேறிவருகிறது. பொதுமக்களுக்கு பட்டாவும் கிடைப்பதில்லை. அனைத்துவகையில் அடுக்கடுக்கான பிரச்னைகளை இப்பகுதி மக்கள் காலங்காலமாக எதிர்கொண்டு வருகின்றனர். சரிசெய்யப்படாத இந்தப் பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும் என்றால் முதலமைச்சர் ஸ்டாலின் இந்தப் பகுதிகளை நேரில்வந்து பார்வையிட வேண்டும். மக்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். `உங்கள் தொகுதியில் முதல்வன்’ திட்டத்தின்படியே வந்தாலே போதுமானது. அவர் வருகிறார் என்று தெரிந்தாலே அரசு அதிகாரிகள் போட்டிப்போட்டுக்கொண்டு அனைத்து அடிப்படை வசதிகளையும் இப்பகுதி மக்களுக்கு செய்துகொடுத்து விடுவார்கள்.
அதேபோல, பழங்குடி மக்களின் வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தை மேம்படுத்த கல்வராயன் மலைப்பகுதியை மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலமாக மாற்றவேண்டும். இங்கிருக்கும் 6 அருவிகளையும் மேம்படுத்தவேண்டும். பசுமை உயிரியல் பூங்காக்கள் அமைத்துதர வேண்டும். ட்ரெக்கிங் மலைப்பாதை மையங்களை உருவாக்கித்தர வேண்டும். இவற்றையெல்லாம் செய்யும் போது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்தத் திட்டங்களில் உள்ளூர்மக்களைப் பயன்படுத்திக்கொள்ளும்போது வேலைவாய்ப்பு கிடைக்கும். சாதாரணமாக சுண்டல், கொய்யா, பழங்களை விற்பனை செய்தே பழங்குடி மக்களால் நல்ல வருமானம் ஈட்டமுடியும். இவற்றை முறையாக செய்தாலே கல்வராயன் மலை பழங்குடி மக்களின் பொருளாதாரமும் வாழ்வாதாரம் மேம்படும்!” என வலியுறுத்தி பேசினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88