NEET: `வினாத்தாள் கசிவு, ஊழலுக்கு காங்கிரஸ்தான் தந்தை’ – கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் காட்டம்!

நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு ஆகியவை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “தற்போதைய சூழலில் நீட் மறு தேர்வு என்பதை ஏற்க முடியாது. அதேபோன்று நடந்து முடிந்த நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யும் அளவிற்கான போதுமான தேவைப்படும் விவரங்கள் எதுவும் இல்லை. மேலும் நீட் தேர்வின் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் மீறும் விஷயங்கள் நடந்துள்ளது என்பதற்குத் தேவையான மற்றும் போதுமான ஆதாரங்கள் தற்போது வரையில் இல்லை.

NEET – உச்ச நீதிமன்றம்

இதைத் தவிர நீட் தேர்வு குளறுபடிகளைச் சரி செய்வதற்காக ஏழு பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதனை ஏற்கிறோம். தற்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ள சிக்கல்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்கச் செயல்முறைகளை வலுப்படுத்த வேண்டும். மேலும் 1,563 மாணவர்களுக்குச் சிறப்புத் தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை அதற்காக என்ன வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியதோ அதையே தொடர அனுமதிக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டு, NEET-UG 2024 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்தார்.

இந்த தீர்ப்பு குறித்துப் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “நீட்-யுஜி தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாணவர்களுக்கான பின்னடைவல்ல, மாறாகக் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பற்ற அணுகுமுறை, அற்ப அரசியலின் தோல்வி. வினாத்தாள் கசிவுக்கும், ஊழலுக்கும் காங்கிரஸே தந்தை. காங்கிரஸ் கட்சி மத்திய அரசையும் நம்பவில்லை, உச்ச நீதிமன்றத்தையும் நம்பவில்லை.

ராகுல் காந்தி – காங்கிரஸ்

இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாகக் காங்கிரஸை நிராகரித்துள்ளதால், தோல்வியை ஏற்கக் காங்கிரஸ் போராடி வருகிறது. அரசியல் லாபத்துக்கும், குறைந்து வரும் அரசியல் ஆதிக்கத்தைக் காப்பாற்றவும் காங்கிரஸ் பொய்களையும், அராஜகங்களையும் நாடுகிறது. கார்கே… நீங்களோ, உங்கள் தலைவர் ராகுல் காந்தியோ அல்லது உங்கள் கட்சியோ மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. உங்கள் எதிர்காலம் மற்றும் ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே நீங்கள் கவலைப்படுகிறீர்கள்.” எனக் குறிப்பிட்டார்.