விவசாயி இறப்புக்கு இரங்கல் தெரிவித்த குடியரசு தலைவர்… யார் இந்த கமலா புஜாரி?

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பத்மஶ்ரீ விருது பெற்றவரும் பாரம்பர்ய விதை சேகரிப்பளருமான கமலா பூஜாரி, காய்ச்சல் மற்றும் வயது மூப்பு காரணமாக, ஒடிசாவின் கோராபுட் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை 20-ம் தேதி கமலா புஜாரி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது.

கமலா புஜாரி சிகிச்சையின் போது

கோராபுட் மாவட்டம், பத்ராபுத் கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த பழங்குடி இனத்தவரான கமலா புஜாரி, இயற்கைவழி வேளாண்மையை ஊக்குவித்து வந்தார். அவருக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் மீது பெரும் ஆர்வம் இருந்தது.

பாரம்பரிய நெல் வகைகள் மீது பேரார்வம்

1994-ம் ஆண்டில் கோராபுட்டில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தால் தொடங்கப்பட்ட பங்கேற்பு ஆராய்ச்சி திட்டத்தின் தலைவராக கமலா பூஜாரி இருந்தார். இதன் மூலம் நூற்றுக்கணக்கான பாரம்பர்ய நெல் ரகங்களை தேடி கண்டுபிடித்து பாதுகாத்தார். மச்சகந்தா, புலா, திலி, கனாட்டியா போன்ற அழியும் நிலையிலிருந்த நெல் ரகங்களை பாதுகாத்த பெருமை கமலா புஜாரிக்கு உண்டு.

நெல் – மாதிரி புகைப்படம்

விவசாயமே உயிர் மூச்சு என்று வாழ்ந்திருந்த கமலா புஜாரி, வெறுங்கால்களுடன் பல கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு இயற்கை விவசாயம், இயற்கை உரங்களின் பயன்பாடுகளை சொல்லிக் கொடுத்து அவர்களை இயற்கை வழி விவசாயத்துக்கு மாற்றினார்.

இயற்கை விவசாயமே உயிர்மூச்சு!

கமலாவின் சேவைகளை பாராட்டி, கடந்த 2019-ம் ஆண்டில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 2002 ஆம் ஆண்டில் ஈக்வேட்டர் இனிஷியேட்டிவ் விருது கமலா புஜாரிக்கு வழங்கப்பட்டது.

Padma Shri Kamala Pujari

கமலா புஜாரியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்டு குறிப்பில், “ஒடிசாவின் அரிய வகை நெல் ரகங்களை சேமித்தது மட்டுமல்லாமல், ஒடிசாவின் பாரம்பர்ய மஞ்சள், கருஞ்சீரகம் உள்ளிட்ட பல பாரம்பர்ய விதைகளை சேகரித்து பாதுகாத்தவர். இன்று ஒடிசாவில் பாதுகாத்து பயிர் செய்யப்படும் பாரம்பர்ய விதைகளுக்கு இவருடைய சேகரிப்பே முக்கிய காரணம். இவர் சேகரித்தவை அனைத்தும் அழியும் நிலையிலிருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இதை போற்றும் வகையில் அவருக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. இயற்கை விவசாயத்திலும், பெண்கள் முன்னேற்றத்திலும் பங்காற்றியவர்” என்று தெரிவித்துள்ளார்.

உடலால் கமலா புஜாரி மறைந்தாலும் அவர் பாதுகாத்த எண்ணற்ற பாரம்பர்ய நெல் ரகங்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது சந்தேகமில்லை.