“இந்தத் தப்பெல்லாம் செய்யாம இருந்தா, நீங்க தப்பிக்கலாம்…” எச்சரித்த `ஜோஹோ’ குமார் வேம்பு…

மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள எம்.எஸ்.எம்.இ தொழில்முனைவோர்களை ஒன்றிணைத்து, அவர்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுவரும் வரும் மடீட்சியா (MADITSSIA) அமைப்பு தொடங்கப்பட்டு 50 ஆண்டு பொன் விழா இந்த ஆண்டு கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில், இந்த அமைப்பு `மடீட்கான்’ என்கிற பெயரில் மதுரை மற்றும் மதுரையைச் சுற்றி தொழில்முனைவோர்கள் கலந்துகொள்ளும் மாநாடு ஒன்றை, கடந்த 14-ம் அன்று கள்ளந்திரியில் உள்ள எ.கே.என்.கே பேலஸ் அரங்கில் நடத்தியது. 300-க்கும் அதிகமான தொழில்முனைவோர்கள் இந்த மாநாட்டில் ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டனர்.

மடீட்சியா கருத்தரங்கம்

இந்த மாநாட்டில் திண்டுக்கல்லில் இருந்து செயல்படும் நாகா லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் செளந்தர் கண்ணன், ‘கோ ஃப்ரூகல்’ டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நிறுவனரும், சி.இ.ஒ-வுமான குமார் வேம்பு, பிராண்ட் கன்சல்டன்ட் நிபுணர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, ஆடிட்டரும் ஜி.எஸ்.டி நிபுணருமான கோவையைச் சேர்ந்த ஜி.கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

இந்த மாநாட்டில் ‘கோ ஃப்ரூகல்’ டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நிறுவனரும், சி.இ.ஒ-வுமான குமார் வேம்பு ‘பிசினஸில் டெக்னாலஜியின் முக்கியத்துவம்’ என்கிற தலைப்பில் பேசியது குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது. அவர் பேசியதன் சுருக்கமான தொகுப்பு இனி…

தொழில்நுட்பத்தை வெறுக்காதீர்கள்…

“பிசினஸில் நாம் சந்திக்கும் பல்வேறு சவால்கள் நமக்குத் தெரியாதவையாகவே உள்ளன. அதே போல, தொழில்நுட்பத்திலும் நாம் சந்திக்கும் பல்வேறு விஷயங்கள் நமக்குத் தெரியாதவையாகவே உள்ளன. தெரியாது என்பதால், நாம் பிசினஸ் செய்யாமல் இருப்பதில்லை. அதே போல, தெரியாது என்கிற காரணத்தினால் நம் பிசினஸில் நாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமல் இருக்கக் கூடாது.

தொழில்நுட்பங்கள் என்பவை ஒரு கருவி (tool) மட்டுமே. இந்தக் கருவியை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் எனில், உங்கள் பிசினஸுக்கான தேவை என்ன என்பதை நன்கு ஆராயுங்கள். உங்கள் தேவை என்ன என்பதை நன்கு யோசித்து எழுதிப் பாருங்கள். உங்கள் தேவை என்ன என்பதை தெளிவாக அறிந்தபிறகு, உங்கள் பிசினஸ் வளர்ச்சிக்கு அடுத்த 10, 15 ஆண்டுகளுக்கு உறுதுணையாக இருக்கும்படியான தொழில்நுட்பத்தைத் தேர்வு செய்யுங்கள்.

பிசினஸ் வளர்ச்சி

உங்கள் போட்டியாளர்கள் உள்ளூர் அளவிலும், பிராந்திய அளவிலும், தேசிய மற்றும் உலக அளவிலும் எப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வளர்ச்சி கண்டுவருகிறார்கள் என்று பாருங்கள். அவர்களைப் பின்பற்றுவதன் மூலம் உங்களுக்கான இலக்குகளை எளிதாக நிர்ணயம் செய்து, அதை அடைவதற்கான திட்டமிடலை செய்து, சிறப்பான எதிர்காலத்திற்குத் தயாராக முடியும். அந்த நிலையில், உங்களுக்கு என்ன மாதிரியான தொழில்நுட்பம் வேண்டும் என்பது குறித்து நீங்கள் தெளிவாக முடிவு செய்ய முடியும்.

இன்றைக்கு குறு மற்றும் சிறு தொழில்முனைவோர்கள் தங்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை எப்படித் தேர்வு செய்கிறார்கள் தெரியுமா? உறவுக்காரர் சொல்கிறார் அல்லது நண்பர் பரிந்துரைக்கிறார் என்பதற்காக தொழில்நுட்பங்களை வாங்குகிறார்கள். இப்படி வாங்கும் தொழில்நுட்பம் சில சமயங்களில் தேவை இல்லாததாக இருக்கிறது. இந்தத் தவறை எல்லாம் செய்யாமல் இருக்கவேண்டும் எனில், தேவையை நன்கு உணர்ந்தபின்பே தொழில்நுட்பத்தை வாங்க வேண்டும்.

அவசியம் கேட்கவேண்டிய மூன்று கேள்விகள்…

1995-ஆம் ஆண்டு ஜோஹோ நிறுவனத்தைத் தொடங்கினோம். அன்றிலிருந்து இன்று வரை ஜோஹோ நிறுவனம் எவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த வளர்ச்சி தானாக வந்துவிடவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் மூன்று முக்கியமான கேள்விகளைக் கேட்டதன் மூலமாகவே வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். அந்த மூன்றுகள் என்னென்ன தெரியுமா?

1. பிசினஸ் ஆரம்பித்து நாம் எந்தளவுக்கு வளர்ச்சி கண்டிருக்கிறோம்?

2. இந்த வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

3. நாம் இன்னும் எந்தளவுக்கு வளர்ச்சி காணவேண்டும்?

இந்த மூன்று கேள்விகளை நாம் அடிக்கடி கேட்டு, அதற்கான சரியான பதில்களைப் பெறுவதன் மூலம் நாம் அடுத்த கட்ட நோக்கி முன்னேறிக்கொண்டே இருக்கலாம்.

குமார் வேம்புவுக்குப் பாராட்டு

கவனம், கவனம், கவனம்…

ஒரு பிசினஸ்மேனுக்கு மிகவும் அடிப்படையாக இருக்கவேண்டிய குணம், கவனம் ஆகும். கவனம் என்றால், கவனித்துப் பார்ப்பது மட்டுமல்ல; ஐம்புலன்களையும் பயன்படுத்தி கவனிக்க வேண்டும். அப்படி கவனித்து எடுக்கும் பிசினஸ் முடிவு எப்போதும் தோல்வி அடையாது.

பிசினஸில் முடிவு எடுக்கும்போது ‘ஒப்பன் மைண்ட்’வுடன் அணுகி ஆராய வேண்டும். அப்படித் திறந்த மனதுடன் பிசினஸ் முடிவை அணுகி, ஆராய்ந்து எடுக்கும்போது, அதில் உள்ள பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் அம்சங்களை சிறப்பாக அலசி ஆராய்ந்து, மாற்றங்களைச் செய்யுங்கள்.

எல்லாம் எனக்குத் தெரியும் என்கிற ஆட்டிடியூட் பிசினஸ்மேன்களிடம் எப்போதும் இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட எண்ணத்துடன் இருப்பவர்கள், அதற்கான பாடத்தைக் கற்றே தீருவார்கள்.

எந்த பிசினஸாக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் மிகவும் முக்கியம். அவர்களுடன் பேசும்போது அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனித்துக் கேளுங்கள். அவர்கள் சொல்லும் குறைகளுக்கு உடனுக்குடன் விளக்கம் தராதீர்கள். அவர்கள் சொல்வதை எல்லாம் பொறுமையாகக் கேட்டபிறகு, நீங்கள் சொல்லவரும் விஷயத்தைக் கேள்விகளாகக் கேளுங்கள். இப்படிக் கேட்பதன்மூலம் வாடிக்கையாளர்களை யோசிக்க வைக்க முடியும். அதன் மூலம் நம்மைப் பற்றி, நம் புராடக்ட்டுகளைப் பற்றி நன்கு புரிந்துகொண்டு செயல்படுபவர்களாக மாறுவார்கள். இது மாதிரியான வாடிக்கையாளர்கள் எப்போது நம்முடன் இருப்பார்கள்.

ரிஸ்க்

கடைசியாக எப்போது ரிஸ்க் எடுத்தீர்கள்?

ஒரு தொழில்முனைவோராக நீங்கள் கடைசியாக எப்போது ரிஸ்க் எடுத்தீர்கள் என்கிற கேள்வியைக் கேட்டால், பலரும் பதில் சொல்ல முடியாமல் தவிப்பார்கள். நீங்கள் பிசினஸ் ஆரம்பித்த காலத்தில் நீங்களே விருப்பப்பட்டு ரிஸ்க் எடுத்திருப்பீர்கள். அதன்பிறகு….? ரிஸ்க் எடுக்க பயந்து ஒதுங்கிவிடும் பிசினஸ்மேன்கள் இங்கு ஏராளம். அல்லது, என்ன ரிஸ்க் எடுப்பது என்று தெரியாமல் கடைசியில் ஏதோ ஒரு ரிஸ்க்கை எடுப்பதும் இன்றைக்குப் பலருக்கும் பழக்கமான விஷயமாக மாறிவிட்டது. இன்றைக்குப் பலரும் ஏற்கெனவே இருக்கும் பிசினஸைத் தக்கவைத்துக்கொள்ளவே நினைக்கிறார்களே தவிர, நன்கு உணர்ந்து, விரும்பி ரிஸ்க் எடுப்பவர்களாக இல்லை. இந்த அணுகுமுறை இருக்கிற பிசினஸை அப்படியே வைத்திருக்க உதவுமே தவிர, மேற்கொண்டு வளர்ச்சி காண்பதற்கு உதவாது.

குமார் வேம்பு

பேமிலி பிசினஸ்மேன்களுக்கு ஒரு வேண்டுகோள்…

இன்றைய இளைஞர்களில் சிலர் பேமிலி பிசினஸை செய்துவருபவர்களாக இருக்கிறீர்கள். உங்கள் பிசினஸில் உங்கள் அப்பா எடுத்த ரிஸ்க் பற்றி உங்களுக்குத் தெரியுமா, பிசினஸை வளர்ப்பதற்கு அவர் எந்தளவுக்குக் கஷ்டப்பட்டிருக்கிறார் என்று தெரியுமா என்று பாருங்கள். இப்போது நீங்கள் அந்த பிசினஸை செய்துவரும் நிலையில், கால்குலேட்டட்-ஆக ரிஸ்க் எடுத்து, உங்கள் பிசினஸை அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்ல என்ன செய்யவேண்டும் என்று யோசியுங்கள். பிசினஸில் நீங்கள் வெற்றி அடையவேண்டும் எனில், உங்கள் குறிக்கோளில் உறுதியாக இருக்க வேண்டும். பிசினஸை ஜெயிக்க வைக்கவேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்குள் தீவிரமாக இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களால் சாதிக்க முடியும்.

பர்சனல் பணம் வேறு; பிசினஸ் பணம் வேறு…

பிசினஸ் செய்யும்போது பலரும் செய்யும் தவறு, பர்சனல் பணத்தையும் கம்பெனி பணத்தை பிரித்து வைக்காமல், ஒன்றோடு ஒன்றைப் போட்டுக் குழப்பிக் கொள்வது. பிசினஸில் இருந்து வரும் வருமானத்தில் உங்களுக்கான சம்பளத்தை எடுத்தது போக, மீதமுள்ள பணம் எல்லாம் கம்பெனியின் பணம்; அது உங்கள் பணம் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

பிசினஸ்

கம்பெனியின் பேலன்ஸ்ஷீட்டை அடிப்படையாக நீங்கள் ரிஸ்க் எடுக்கலாம். தொழிலை நடத்தும் பிசினஸ்மேனுக்கு வயது ஆகஆக, தனிப்பட்ட முறையில் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால், நிறுவனத்தின் பேலன்ஸ்ஷீட் மேலும் மேலும் உறுதியாக இருக்கும்பட்சத்தில், பிசினஸில் பெரிய பெரிய ரிஸ்க்குகளை எடுக்கலாம். அப்போது நிறுவனத்தை நடத்துபவரின் பர்சனல் ஃபைனான்ஸ் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருக்கும்.

இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். பிசினஸுக்காக நிறுவனத்தின் சார்பில் கடன் வாங்கும்போது, பர்சனல் சொத்துகளை கியாரண்டியாகத் தராதீர்கள். பிசினஸின் ஆரம்ப நிலையில் நீங்கள் அப்படி செய்திருக்கலாம். ஆனால், நிறுவனம் நன்கு வளர்ந்தபிறகு நீங்கள் அப்படி செய்ய வேண்டியதில்லை. பிசினஸை வளர்ப்பதற்கு ரிஸ்க் எடுக்குங்கள். அதை பிசினஸ் ரிஸ்க்-ஆக எடுக்கலாமே தவிர, பர்சனல் ரிஸ்க்-ஆக எடுக்கக்கூடாது!

மடீட்சியா நிர்வாகிகளுக்கு ஒரு கோரிக்கை…

உங்கள் பிசினஸை நீங்கள் நன்றாக செய்கிறீர்களா என்று கேட்டால், ஏதோ செய்கிறேன் என்றுதான் சொல்வீர்கள். நீங்கள் எந்தளவுக்கு வளர்ந்திருக்கிறீர்கள் அல்லது உங்கள் பிசினஸ் எந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பது தெரியாததால்தான் பொத்தாம் பொதுவான ஒரு பதிலை நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், உங்கள் பிசினஸ் எந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது, உங்கள் நெட்வொர்த் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தால், உங்களால் இன்னும் உற்சாகமாக பிசினஸை செய்ய முடியும்.

மடீட்சியா கருத்தரங்கம்

இந்தக் கட்டத்தில் மடீட்சியா அமைப்பு நிர்வாகிகளிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். உங்கள் அமைப்பில் உறுப்பினராக இருக்கும் தொழில்முனைவோர்களில் எத்தனை பேருடைய நெட்வொர்த் அதிகரித்திருக்கிறது என்று பாருங்கள். அதாவது, உங்கள் அமைப்பில் உள்ள பிசினஸ்மேன்கள் எத்தனை பேர் குறுந்தொழில் (tiny) என்கிற நிலையில் இருந்து சிறு தொழில் (micro) என்கிற நிலைக்கு முன்னேறி இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவர்கள் வளர்ந்த விதம் பற்றிய தகவல்களை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுங்கள். இப்படிப்பட்ட புள்ளிவிவரங்களை நீங்கள் வெளியிடுவதன் மூலம் மற்ற பிசினஸ்மேன்களும் உற்சாகமடைவார்கள். இப்படி வளர்ந்துவரும் பிசினஸ்மேன்களை ஒரு குழுவாக மாற்றி, அவர்களைக் கொண்டு மற்றவர்களுக்கு வழிகாட்ட வைக்க முடியும். தொழில் நிறுவனங்கள் இப்படி வளர்ச்சி கண்டுவருவதை ஆண்டுதோறும் அறிவிப்பதன் மூலம் ஆரோக்கியமான போட்டி உருவாகி, அனைவரும் சுறுசுறுப்பாக பிசினஸ் செய்வார்கள்’’ என்று ஒரு கோரிக்கை வைக்க, மடீட்சியா அமைப்பின் நிர்வாகிகள் அடுத்த ஆண்டு முதலே இதை செய்வதாக அறிவித்தார்கள்.

இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த தொழில்முனைவோர்கள் பலர் குமார் வேம்பு பேசியதைக் கவனமாகக் கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது!