2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தார். ஆனால், அதில் தமிழ்நாடு பெயர் உட்பட தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் எதுவும் இடம்பெறாதது தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், மத்திய அரசின் இந்த பட்ஜெட் மைனாரிட்டி பாஜக-வை மெஜாரிட்டியாக்கிய கட்சிகளின் மாநிலங்களைத் திருப்திப்படுத்துகிற பட்ஜெட் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.
மத்திய அரசின் பட்ஜெட் குறித்து அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கின்ற சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை விடுவிக்க வேண்டும். கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கின்ற ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை எடுத்து வைத்திருந்தேன்.
ஆனால், இதை எதையுமே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. மைனாரிட்டி பா.ஜ.க-வை மெஜாரிட்டி பா.ஜ.க-வாக்கிய ஒரு சில மாநில கட்சிகளைத் திருப்திப்படுத்துகிற வகையில் ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். அதையும் நிறைவேற்றுவார்களா என்பது சந்தேகம்தான்.
இதுதான் தமிழ்நாட்டு மக்களை பா.ஜ.க மதிப்பதா… தமிழ்நாட்டுக்கான எந்த சிறப்புத் திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. நம்முடைய கோரிக்கைகள் எதுவும் இதில் நிறைவேற்றப்படவில்லை. புதிய ரயில்வே திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. ஒன்றிய பா.ஜ.க ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கின்ற மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களையும் நிதியமைச்சர் மறந்துவிட்டார். தமிழ்நாடு என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை. அதையும் விட ஒன்றிய பா.ஜ.க ஆட்சியாளர்களின் சிந்தனையிலும், செயலிலும் தமிழ்நாடு இல்லை. பாரபட்சமும், ஏமாற்றமும் தான் இந்த அறிக்கையில் இருக்கிறது. ஒரு நாட்டின் பட்ஜெட் என்பது அந்த நாட்டின் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அந்த வகையில் இதில் நீதி இல்லை. அநீதி தான் அதிகமாக இருக்கிறது.
அரசியலைத் தேர்தல் களத்தில் பார்த்துக் கொள்ளலாம், இப்போது அனைவரும் இணைந்து நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் நேற்றுதான் சொல்லியிருந்தார். ஆனால், இன்று அதற்கு எதிராக அவருடைய அரசின் பட்ஜெட் அமைந்திருக்கிறது. ஜூலை 27-ம் தேதி பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் நானும் பங்கேற்கத் திட்டமிட்டு அதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால், தற்போது பட்ஜெட்டில் தமிழ்நாடு ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் அந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதுதான் சரியானது என்று நினைக்கிறேன். நாளை நம்முடைய எம்.பி-க்கள் டெல்லியில் போராட்டம் நடத்தப் போகிறார்கள்.” என்றார்.