குடிபோதையில் தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம்; அண்ணனைக் கொன்றுவிட்டு, தாயுடன் சிக்கிய தம்பி!

திருச்சி மாநகரம், பீமநகரைச் சேர்ந்தவர் தமீமுன் அன்சாரி (வயது: 33). இவர், ஆட்டோ டிரைவராகவும், டீ மாஸ்டர் ஆகவும் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் ஆனது. ஆனால், ஒரே வருடத்தில் மனைவியைப் பிரிந்துள்ளார். அவருக்கு 5 வயதில் மகனும் உள்ளார். இந்த நிலையில், தன்னுடைய தாய் பர்வின்பானு மற்றும் தம்பி சையது அபுதாகிர் ஆகியோருடன் பீமநகர்ப் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், தமீமுன் அன்சாரி மது போதைக்கு அடிமையானார். அவர் அவ்வப்போது தனது வீட்டில் அடிக்கடி பிரச்னை செய்து தனது தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். பணம் தர மறுத்தால் தன்னுடைய தாயை அடிக்கவும் செய்துள்ளார். இத்தகைய சூழலில், வழக்கம்போல் தன்னுடைய தாயிடம் குடிபோதையில் பிரச்னை செய்து அவரை அடித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவரின் தம்பி சையது அபுதாஹிர், தமீமுன் அன்சாரி உறங்கிக் கொண்டிருந்தபோது அவருடைய தலையில் அரிவாளால் வெட்டியிருக்கிறார். இதனால் அலறியபடி எழுந்த தமீமும் அன்சாரியின் கழுத்தை மின்சார ஒயரால் இறுக்கி கொலை செய்துள்ளார்.

இறந்தவர் உடல்

இரவு நேரத்தில் ஆட்டோவில் தன்னுடைய தாயுடன் சேர்ந்து, தமீமுன் அன்சாரி உடலை எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பாலத்தில் உடலை போட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் உடல் கிடப்பதை அறிந்த ஸ்ரீரங்கம் போலீஸார் இது குறித்து விசாரணை செய்ததில் கொலைசெய்தது இறந்தவரின் சகோதரர் என்பதும், அதற்கு அவருடைய தாய் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இருவரையும் கைதுசெய்த ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸார், அவர்களை சிறையில் அடைத்தனர். அதோடு, இறந்தவர் உடலை மீட்டு உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுபோதையில் தனது தாயிடம் தகராறு செய்த தனது சகோதரை இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.