Union Budget: `வரிகொடா இயக்கத்தை முன்னெடுப்பதைத் தவிர தமிழக மக்களுக்கு வேறுவழியில்லை!’ – சீமான்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில், பா.ஜ.க அரசு தனது கூட்டணியின் முக்கிய கட்சிகளின் ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் பயனளிக்கும் வகையில் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.

நிர்மலா சீதாராமன் – Union Budget

இவ்வாறிருக்க, இந்த பட்ஜெட் ஒட்டுமொத்த இந்தியாவிற்கானதா, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மட்டுமானதா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இது குறித்த அறிக்கையில், “மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் 2024-25 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டணிக் கட்சிகளைச் சமாதானப்படுத்தும் சலுகை அறிவிப்புகளாக மட்டுமே அமைந்திருப்பது வெட்கக்கேடானது. விவசாயம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு போதிய நிதியை ஒதுக்காதது நாட்டு மக்களின் நலன்மீதான பா.ஜ.க அரசின் அக்கறையின்மையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறது.

தங்கம், வெள்ளி, அலைபேசி உள்ளிட்ட விலை உயர் ஆடம்பர பொருள்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம்கூட அன்றாடம் மக்களின் பசியைப்போக்கும் வேளாண்மைக்கு அளிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. வேளாண்மையை முழுதாக அழித்துவிட்டு ‘2 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவோம்’ என்ற அறிவிப்பு வேடிக்கையானதாகும். வருமானவரி செலுத்துவதற்கான உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோடிக்கான நடுத்தர மக்களின் நீண்டகாலக் கோரிக்கையும் ஏற்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

சீமான்

பா.ஜ.க அரசின் முதன்மை கூட்டணிக் கட்சிகள் ஆளும் பீகாருக்கு ரூ. 26,000 கோடியும், ஆந்திராவுக்கு ரூ. 15,000 கோடியும் ஒதுக்கியுள்ள இந்த பட்ஜெட் மூலம், இந்தியாவின் இதர மாநில மக்களைத் தெருக்கோடியில் நிறுத்தியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பீகார், ஆந்திரா என்ற இரண்டு மாநிலங்கள் மட்டும்தான் இந்தியாவில் உள்ளனவா… இதர மாநில மக்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கவில்லையா அல்லது வரி செலுத்தவில்லையா… நாட்டிலேயே ஆந்திராவில் மட்டும்தான் பின்தங்கிய மாவட்டங்கள் உள்ளதா… தமிழ்நாட்டில் இல்லையா…

இந்தியாவிலேயே அதிகம் வரிச்செலுத்துவதில் முதன்மையான இடத்திலுள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்துக்கு எந்தவித சிறப்புத் திட்டத்தையும் கடந்த 11 ஆண்டுகால பட்ஜெட்டில் ஒருமுறைகூட பா.ஜ.க அரசு அறிவிக்காதது ஏன்… தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கவில்லை என்பதால் தொடர்ச்சியாகப் பழிவாங்குவதைப்போலவே ஒவ்வொரு பா.ஜ.க ஆட்சியின் பட்ஜெட்டும் அமைந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களை இரண்டாந்தர குடிமக்களாகக் கருதி, வளர்ச்சிக்கான எந்தத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தாததைக் கண்டித்து ‘வரிகொடா’ இயக்கத்தை முன்னெடுப்பதைத் தவிர தமிழ்நாட்டு மக்களுக்கு வேறுவழியில்லை எனும் பரிதாப நிலைக்குத் தள்ளியுள்ளது பா.ஜ.க அரசு.

மோடி – நிதிஷ் குமார் – சந்திரபாபு நாயுடு

ஒட்டுமொத்தமாக பா.ஜ.க அரசின் இந்த பட்ஜெட் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி புரிந்தும் நடைமுறைப்படுத்த முடியாத கவர்ச்சிகர அறிவிப்புகளைக் கொண்ட கற்பனை அறிக்கையாகும். தமிழ்நாடு உள்ளிட்ட இதர மாநிலங்களை முழுதாகப் புறக்கணித்து, கூட்டணி ஆட்சியைத் தக்க வைப்பதையே குறிக்கோளாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள, இந்த பட்ஜெட்டிலிருந்து இந்தியா முழுமைக்குமான பா.ஜ.க-வின் வீழ்ச்சி உறுதியாய் தொடங்கும்” என்றும் சீமான் குறிப்பிட்டிருக்கிறார்.