தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் 25-வது ஆண்டு நினைவஞ்சலி நெல்லை தாமிரபரணி நதியில் அனுசரிக்கப்பட்டது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஊர்வலமாக வந்த கிருஷ்ணசாமி, தாமிரபரணி நதியில் இறங்கி மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீதிமன்றத்தில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வழக்கு இன்னும் முடிவு பெறவில்லை.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குறித்து நீதிமன்றத்தின் அடுத்த விசாரணை வரும் ஜூலை 30-ம் தேதி நடைபெறுகிறது. அரசின் பார்வையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குறித்த கோளாறு இருக்கிறது. இன்னமும் சரியான புரிதல் தமிழக அரசுக்கு இல்லை. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு புலியை வளர்ப்பது ஏன்? எலியை வளர்ப்பது ஏன்? மக்களின் வாழ்வுரிமையை பறித்து விட்டு வனத்துறை அமைச்சர், சுற்றுலாவை வளர்ப்பது ஏன்?
மாநில அரசின் செயல்பாடு மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை பொறுத்தவரை நேர்மையாக இல்லை. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் அறிக்கையில் சமூக நீதி இல்லை. வேலை செய்து வரும் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வேலையை பறித்துவிட்டு அவர்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பை கொடுப்பதா?
மாஞ்சோலைக்கு சுற்றுலா வருபவர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதார பாதிப்பினை கருத்தில் கொண்டு அந்த சுற்றுலாவை தவிர்க்க வேண்டும். வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 99 வருட குத்தகைக்கு தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகமான பிபிடிசி-க்கு கொடுத்த குத்தகையை ஏற்கனவே நிறுத்தி வைத்திருக்கலாமே? இந்த விவகாரத்தில் அரசு மிகவும் நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் ஏனோ தானோ என்று முடிவு எடுக்கக் கூடாது.” என்றார்.