பின்வாங்கிய ஜோ பைடன்: `கமலா ஹாரிஸ் டு விட்மர்’ – அதிபர் வேட்பாளர் ரேஸில் முன்னணியில் யார் யார்?!

நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறுவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. அதைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜோ பைடனை எதிர்த்து தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுவந்தார். அதைத் தொடர்ந்து, ஜோ பைடனின் வயது மூப்பும், அவருடைய சில பொருத்தமற்ற பேச்சுகளாலும் அவர் அங்கம் வகிக்கும் ஜனநாயகக் கட்சியிலிருந்த அவருக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்ப வழிவகுத்தது. அதைத் தொடர்ந்து, அவருடைய உடல், மனநிலை குறித்து பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

கமலா ஹாரிஸ் – ஜோ பைடன்

ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஜோ பைடன் தேர்தலிலிருந்து விலக வேண்டும் என வெளிப்படையாக பேசத் தொடங்கினர். இந்த நிலையில், அதிபர் தேர்தலிலிருந்து பின்வாங்குவதாக ஜோ பைடன் அறிவித்திருக்கிறார். மேலும், துணை அதிபராக செயல்பட்ட கமலா ஹாரிஸை தான் ஆதரிப்பதாகவும் அறிவித்திருக்கிறார். இன்னும் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், யாரெல்லாம் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருக்கிறது என்பது குறித்த அனுமானம் றெக்க கட்ட பறக்க ஆரம்பித்துள்ளது…

கமலா ஹாரிஸ்:

ஜோ பைடன் பின்வாங்குவதற்கு முன்பே வெளிப்படையாக கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அறிவிக்கலாம் என பேசப்பட்டது. தற்போது ஜோ பைடனும் கமலா ஹாரிஸை ஆதரிப்பதால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்படலாம் என எதிர்ப்பார்ப்பு எகிறியிருக்கிறது. ஜோ பைடன் ஜனவரி 2021 பதவியேற்றதிலிருந்து அமெரிக்கத் துணை அதிபராக தன் செயல்பாடுகளால் பெரிதும் கவனம் ஈர்த்தவர் கமலா ஹாரிஸ்.

கமலா ஹாரிஸ்

இவருடைய தந்தை ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய தாய் இந்தியாவைச் சேர்ந்தவர். கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றிய முதல் பெண் மட்டுமல்ல முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் என்ற பெருமைக்குறியவர். தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் அமெரிக்க செனட்டர் என்ற புகழும் உண்டு. தடகள வீரரான கமலா ஹாரிஸ், ஒரு வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மிகவும் கண்டிப்பானவர் என்ற பெயரையும் குற்றங்கள், அத்துமீறிய குடியேற்றம் ஆகிய சிக்கல்களில் தனி கவனம் செலுத்துபவர் என்ற பார்வையும் மக்களுக்கு இவர் மீது இருக்கிறது.

ஆனால் முற்போக்கு ஜனநாயகவாதிகள் சிலர் அவரின் நடவடிக்கைகள் சிறுபான்மையினரை கடுமையாக பாதிக்கும் என விமர்சிப்பதோடு, கமலா ஹாரிஸுக்கு மாற்றாக வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனற வாதத்தையும் முன்வைக்கிறார்கள்.

கவின் நியூசோம்

கவின் நியூசோம்

அமெரிக்க அதிபர் வேட்பாளர் பட்டியலில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் மற்றொரு பெயர், கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம். அமெரிக்காவை புரட்டிப்போட்ட கருக்கலைப்பு விவகாரத்தின் முக்கிய அங்கமாக விளங்கிய சான் பிரான்சிஸ்கோவின், முன்னாள் மேயரான இவர், தொடர்ந்து ஜோ பைடனை ஆதரித்து வந்தார். அதே நேரம் அவர் தேர்தலிலிருந்து விலகினால், தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்பதாக வெளிப்படையாகவே பேசி வந்தார்.

சமீப காலமாக அவர் தனது சர்வதேசப் பயணத்தை அதிகரித்தது, தனது சாதனையைப் பற்றி பல விளம்பரங்களை வெளியிட்டது, அரசியல் தொடர்பான நடவடிக்கைக் குழுவில் மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்தது என பல்வேறு செயல்பாடுகளை அதற்காக முன்னெடுத்தார். 2028-ம் ஆண்டுக்கான அதிபர் தேர்தலை நோக்கி கவின் நியூசோம் திட்டமிட்டு செயல்படுகிறார் என ஊடங்கங்களும் இதை கவனித்து செய்தி வெளியிட்டது குறிப்பிடதக்கது. ஆனால், தற்போதே அதிபர் வேட்பாளர் இடம் வெற்றிடமாக இருப்பதால், அதில் தன்னை பொருத்திப்பார்த்துக்கொள்ள முயல்வதில் எந்த தவறும் இல்லை என அவர் கருதக்கூடும். எனவே அதற்கான முன்னெடுப்புகளை அவர் மேற்கொள்வார்.

கிரெட்சென் விட்மர்

கிரெட்சென் விட்மர்

அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் மூன்றாவதாக முக்கியமானவராக மெக்சிகன் கவர்னர் கிரெட்சென் விட்மர் கவனம் பெறுகிறார். ஜோ பைடனுக்கு அடுத்து அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பால் அதிகம் விமர்சிக்கப்பட்டவர்களில் ஒருவரான இவர், தொழிலாள வர்க்க மக்களின் பெரிய ஆதரவை பெற்றவர். ஆப்ரிக்க அமெரிக்க இன மக்கள், அரபு சமூக மக்களின் நம்பிக்கைக்குறியவராக கருதப்படும் இவரை, தீவிர வலதுசாரி போராளிக் குழு கடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்த விவகாரம் வெளியானதால் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானார். இந்த அதிபர் தேர்தலில் கவனம் பெறும் மாநிலங்களில் ஒன்று மெக்சிகன். எனவே, அந்தப் பகுதியில் வலுவான ஆதரவை கொண்டிருக்கும் கிரெட்சென் விட்மரை தேர்வு செய்வதற்கு சாத்தியங்கள் உண்டு எனவும் பேசப்படுகிறது.

ஜோஷ் ஷாபிரோ

பென்சில்வேனியாவை வழிநடத்தும் கவர்னரான ஜோஷ் ஷாபிரோவும் அதிபர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். 2022-ம் ஆண்டு நடந்த கவர்னர் தேர்தலில், தீவிர வலதுசாரி கட்சியான குடியரசுக் கட்சியுடன் போட்டியிட்டு, பெருவாரியான ஆதரவில் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்பு இரண்டு முறை மாநில அட்டர்னி ஜெனரலாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். திறமையான பேச்சாளரான இவர், ஆயிரக்கணக்கான குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த கத்தோலிக்க பாதிரியார்களுக்கு எதிராக நின்றது, ஓபியாய்டு வலி நிவாரணி OxyContin தயாரிப்பாளரான பர்டூ பார்மாவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது போன்ற தன் செயல்பாடுகளால் மக்களால் பெரிதும் கவனிக்கப்பட்டவர். இவரும் அதிபர் தேர்தல் வேட்பாளர் ரேஸில் முன்னணியில் இருக்கிறார்.

ஜோஷ் ஷாபிரோ

இவர்கள் தவிர, இல்லினாய்ஸ் கவர்னர் ஜேபி பிரிட்ஸ்கர், மேரிலாந்து கவர்னர் வெஸ் மூர், கென்டக்கி கவர்னர் ஆண்டி பெஷியர், ஆகியோரின் பெயர்களும் அடிபடுகிறது என்றாலும், இவர்களுக்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன எனவும் பேசப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88