மதுரை பள்ளி மாணவன் கடத்தல் வழக்கு: பின்னணியில் பெண்? பொய் புகாரால் தற்கொலையா?! – நடந்தது என்ன?

மதுரை எஸ்.எஸ் காலனி பகுதியில் வசித்து வந்த மைதிலி ராஜலெட்சுமி என்பவரின் 7-ம் வகுப்பு பயிலும் மகன், கடந்த 11-ஆம் தேதி ஆட்டோவில் பள்ளிக்கு சென்றபோது ஒரு கும்பல் ஆட்டோ டிரைவர் பால்பாண்டியுடன் சேர்த்து கடத்தி, மைதிலி ராஜலெட்சுமிக்கு போன் செய்து, ‘ரூ.2 கோடி பணம் தரவேண்டும், தராவிட்டாலோ, போலீஸுக்கு சென்றாலோ பையனை கொலை செய்து விடுவதாக’ மிரட்ட,  இது குறித்து எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் மைதிலி ராஜலட்சுமி புகார் அளித்தார்.

ஆள் கடத்தல்

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த  இன்ஸ்பெக்டர் காசி தலைமையிலான தனிப்படையினர், சிறுவன் இருக்கும் இடத்தை ட்ரேஸ் செய்து கடத்தல் கும்பலை விரட்டிசென்றனர். இதனை அறிந்த கடத்தல் கும்பல், சிறுவனையும், ஆட்டோ டிரைவரையும் மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இறக்கிவிட்டு தப்பிச்சென்றது. இதனையடுத்து 3 மணி நேரத்தில் சிறுவனை மீட்ட  காவல்துறையினர் தப்பிச்சென்ற கடத்தல் கும்பலை தீவிரமாக தேடிவந்தனர்.

தொடர் விசாரணை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் செந்தில்குமார் என்பவரை தேனி மாவட்டத்தில் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் கடத்தப்பட்ட சிறுவனின் தாயார் மைதிலி ராஜலெட்சுமிக்கு விளாத்திகுளத்தை சேர்ந்த சூர்யா என்ற பெண்ணுக்கும் இடையே கடன் வாங்கியது தொடர்பாக பிரச்னை இருந்ததாகவும், அதில் அப்பெண்ணின் சொத்தை ராஜலட்சுமி தன் பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும் அதன் காரணமாக அந்தப்பெண் தூண்டுதலின் பெயரில் தூத்துக்குடியை சேர்ந்த ரௌடி தலைமையிலான கும்பல் இந்த கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்க, அத்தகவலின் அடிப்படையில் தென்காசியை சேர்ந்த வீரமணி, காளிராஜ், நெல்லையைச் சேர்ந்த அப்துல் காதர் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி என்று போலீஸாரால் சொல்லப்பட்ட மதுரையைச் சேர்ந்த மகராஜாவையும், விளாத்திகுளத்தை சேர்ந்த பெண் சூர்யாவையும் தனிப்படையினர் தேடி வந்தனர். இதில் சூர்யா, குஜராத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி என்று சொல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சூர்யா

இந்த நிலையில்தான் போலீஸாரால் தேடப்பட்டதாக சொல்லப்பட்ட சூர்யா, குஜராத்திலுள்ள வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் தாயார் உமா, மதுரை காவல்துறையில் புகார் கொடுத்தவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, “குஜராத்தில் பணியாற்றும் ரஞ்சித்குமார் ஐ.ஏ.எஸ்-ஸை மணந்துகொண்ட என் மகள் சூர்யாவுக்கும் மதுரையிலுள்ள மைதிலி என்ற ராஜலட்சுமிக்கும் பிரச்னை இருந்தது. அதில் என் மகளின் பணம், சொத்துகளை மோசடி செய்து அபகரித்துக் கொண்டனர்.

அது மட்டுமின்றி, அவரின் மகனைக் கடத்தினார் என்று போலீஸில் பொய்யான புகார் கொடுத்து ஊடகத்தில் செய்தி வெளியிட்டு அசிங்கப்படுத்தினார்கள். அந்த மன உளைச்சலில் சூர்யா தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்ததற்கு காரணமான மைதிலி ராஜலட்சுமி, கிஷோர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

உமா

சூர்யாவின் தாயாரின் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மைதிலி ராஜலட்சுமியின் மகன் கடத்தப்பட்ட வழக்கில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அது மட்டுமின்றி சூர்யா குஜராத் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரஞ்சித் குமார் மனைவி என்று சொல்லப்பட்டாலும் இருவரும் பிரிந்து வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சூர்யா குஜராத்திலுள்ள வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக அவர் தாயாரின் குற்றச்சாட்டு குறித்து மதுரை மாநகர போலீஸார் விரைவில் விளக்கம் அளிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

தற்கொலைத் தடுப்பு மையம்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88