புது டெல்லி மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி-யின் தேர்தல் வெற்றிக்கு எதிராக ஆம் ஆத்மி வேட்பாளர் தாக்கல் செய்த மனுவில் எக்கச்சக்க பிழைகள் இருப்பதாக ஏற்க மறுத்த டெல்லி நீதிமன்றம், மனுதாரரிடம் மனுவைத் திருத்தி மீண்டும் தாக்கல்செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறது. முன்னதாக, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புது டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜும், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியிலிருந்து சோம்நாத் பார்தியும் வேட்பாளர்களாகக் களமிறங்கினர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-07/c375cd2c-45e1-435b-a044-62c5209efa5c/GridArt_20240722_180029025.jpg)
இதில், பன்சூரி ஸ்வராஜ் 4,53,185 வாக்குகள் பெற்று 78,370 வாக்குகள் வித்தியாசத்தில் சோம்நாத் பார்தியை (3,74,815) வீழ்த்தி எம்.பி-யாக வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து, பன்சூரி ஸ்வராஜ், அவரின் தேர்தல் முகவர்கள் உள்ளிட்ட பலர் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக, பன்சூரி ஸ்வராஜுக்கு எதிராக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவுகள் 80, 81-ன் கீழ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் சோம்நாத் பார்தி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், `டெல்லி ஆம் ஆத்மி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ராஜ் குமார் ஆனந்த் ஏப்ரல் 9-ம் தேதிவரை சோம்நாத் பார்திக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர், ஏப்ரல் 10-ம் தேதி திடீரென கட்சியிலிருந்து விலகி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக இதே தொகுதியில் போட்டியிட்டு ஆம் ஆத்மி வாக்குகளைப் பிரித்து பாஜக வேட்பாளரின் வெற்றிக்கு உதவினார். அதோடு, ஜூலை 10-ம் தேதி பாஜக-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-07/f9aa84c9-0e8c-4159-8af0-e4e157ea7a4f/GridArt_20240722_175955627.jpg)
மேலும், வாக்குப்பதிவு அன்று சோம்நாத் பார்தி வாக்குச்சாவடி மையங்களைப் பார்வையிடச் சென்றபோது, அங்கு பன்சூரி ஸ்வராஜின் பூத் ஏஜெண்டுகள் அவரின் புகைப்படம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அவரின் எண், சின்னம், பிரதமர் மோடியின் படம் ஆகியவற்றை வைத்துக்கொண்டும், வரிசையில் நின்றுகொண்டிருந்த வாக்காளர்களிடம் தங்கள் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தனர்.
இத்தகைய செயல் நிச்சயமாக தேர்தல் முறைகேட்டுக்குச் சமமானது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இறுதியில் அதுவும் வீணானது’ என்று குறிப்பிட்டு, எதிர் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சோம்நாத் பார்தியின் மனு நீதிபதி மன்மீத் பி.எஸ்.அரோரா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2020-02/39bba522-9740-4f7f-ae9a-05fc1bfc5d8a/78196_gtrdzebrrv_1582720131.jpg)
அப்போது நீதிபதி மன்மீத் பி.எஸ்.அரோரா, “மனுவில் நிறைய தவறுகள் இருக்கின்றன. முதலில் அவற்றைத் திருத்துங்கள். என்னால், இப்படியே நோட்டீஸ் அனுப்ப முடியாது. அதனால், இப்போதைக்கு ஒத்திவைக்கிறேன். தயவுசெய்து திருத்தும் செய்யப்பட்ட மனுவைத் தாக்கல் செய்யுங்கள்” என்று உத்தரவிட்டார். அதற்கு 10 நாள்கள் அவகாசம் அளித்த நீதிமன்றம் வழக்கை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு பட்டியலிட்டது.