மதுரை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் பிரசித்திபெற்ற தலமான கள்ளழகர் திருக்கோயிலில் ஆடித்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் மதுரை சென்று வைகையாற்றில் எழுந்தருளும் விழா சித்திரை மாதத்தில் சீரும் சிறப்புமாக நடைபெறும். அழகர் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமானது இது. அதே உற்சாகத்துடன் கொண்டாடப்படும் திருவிழா ஆடி மாதத்தில் நடைபெறும் திருத்தேரோட்ட விழாவாகும்.
இந்தாண்டுக்கான ஆடிப் பெரும் திருவிழா கடந்த 13-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுந்தரராஜப்பெருமாள் அன்னம், சிம்மம், அனுமார், கருடர், ஆதிசேஷன் மற்றும் யானை வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத்தொடர்ந்து திருத்தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் 9-ம் நாளான நேற்று காலை 6 மணிக்கு அலங்கரிப்பட்ட தேரில் சுந்தரராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். பிறகு பக்தர்கள் வடம் பிடிக்கத் திருத்தேரோட்டம் நடைபெற்றது.
பல்வேறு ஊர்களிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, ‘கோவிந்தா’ கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஏராளமான பக்தர்கள் சந்தனக்குடம் எடுத்துவந்து நேர்த்திக்கடனை முடித்தனர். அதன் பின்பு பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் ஏராளமான பக்தர்கள் அன்னதானம் வழங்கினார்கள்.
தேரோட்டத்தைக் காண மக்கள் திரண்டு வந்ததால் ஆங்காங்கு பெரிய டிஜிட்டல் திரைகளில் தேரோட்ட விழாவை ஒளிபரப்பினர்.
மாலை நடந்த விழாவில் பதினெட்டாம்படி கருப்பணசாமியின் திருநிலைக் கதவுகள் திறக்கப்பட்டு படிகளுக்குச் சந்தனம் சாத்தும் பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு பூப்பல்லக்கில் சுந்தரராஜப்பெருமாள் தேவியர்களுடன் எழுந்தருளி மக்களுக்கு அருள்பாலித்தார். 22–ம் தேதி இரவு புஷ்ப சப்பரமும், 23-ம் தேதி உற்சவ சாந்தியும் நடைபெறும்.