`சரத் பவார் மிகப்பெரிய ஊழல்வாதி; உத்தவ் தாக்கரே ஔரங்கசீப் ரசிகர் மன்றத் தலைவர்!’ – அமித் ஷா தாக்கு

மகாராஷ்டிராவில் வரும் அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக, புனேயில் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றினார். இதில் பேசிய அமித் ஷா, “மகாராஷ்டிரா எதிர்க்கட்சிக் கூட்டணியான மகாவிகாஷ் அகாடி, ஒளரங்கசீப் ரசிகர் மன்றமாகும். அந்த ரசிகர் மன்றத்தின் தலைவர் உத்தவ் தாக்கரே. பால் தாக்கரேயின் வாரிசு என்று சொல்லிக்கொள்ளும் உத்தவ் தாக்கரே, தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்தவர்களுடன் கூட்டணி வைத்திருக்கிறார். இதற்காக உத்தவ் தாக்கரே வெட்கப்படவேண்டும். எதிர்க்கட்சிகள் எங்களை ஊழல்வாதிகள் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்திய அரசியல் வரலாற்றில் சரத் பவார்தான் மிகப்பெரிய ஊழல்வாதி. நாட்டின் எந்த அரசிலும் எந்த அரசியல்வாதியாவது ஊழலை நிறுவனமயமாக்கியிருந்தால், அது சரத் பவார்தான்.

சரத் பவார்

சரத் பவார் மத்திய அமைச்சராக இருந்தபோது ஒதுக்கப்பட்ட நிதியை விட, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் மகாராஷ்டிராவுக்கு அதிக நிதி ஒதுக்கியிருக்கிறது. மொத்தம் 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மத்தியில் இருந்தபோது மகாராஷ்டிராவுக்கு 1.9 லட்சம் கோடி ரூபாய் மட்டும்தான் ஒதுக்கப்பட்டது. சரத் பவார் அதிகாரத்தில் இருந்தபோது நாட்டுக்கும், மகாராஷ்டிராவுக்கும் எதுவும் செய்யவில்லை. மகாராஷ்டிராவில் மராத்தா இன மக்களுக்கு பா.ஜ.க தலைமையிலான அரசுதான் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது. ஆனால் மகாவிகாஷ் அகாடி ஆட்சிக்கு வந்தபோது இட ஒதுக்கீடு விலக்கிக் கொள்ளப்பட்டது. மக்களவைத் தேர்தல் தோல்வியை நினைத்து பா.ஜ.க தொண்டர்கள் கவலைப்படக் கூடாது.

உத்தவ் தாக்கரே

சட்டமன்றத் தேர்தலில் அதனை மீட்டெடுத்துவிட முடியும். மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும்” என்று குறிப்பிட்டார்.

அமித் ஷாவின் கருத்து குறித்து தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) செய்தித் தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ, “நாட்டில் ஊழலை சட்டபூர்வமாக்கியது பா.ஜ.க-தான். அரசியல்வாதிகளை பா.ஜ.க-வினர் ஊழல்வாதிகள் என்று சொல்வார்கள். அதே தலைவர்கள் பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டால், அவர்களுக்கு நற்சான்று கொடுக்கப்பட்டுவிடுகிறது. பா.ஜ.க ஒரு வாஷிங் மெஷின்” என்றார்.

இது குறித்து சரத் பவார் மகள் சுப்ரியா சுலே, ”இதே பா.ஜ.க-தான் பாராமதியில் சரத் பவாரைப் பாராட்டிப் பேசியது” என்று தெரிவித்தார்.