அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்நாட்டின்மீது கடந்த 2022 பிப்ரவரி முதல் இரண்டாண்டுகளுக்கு மேலாகப் போர் நடத்திவருகிறது. அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் போரை நிறுத்துமாறு ரஷ்யா மீது பொருளாதாரத் தடைவிதித்தபோதும் புதின் தன் முடிவிலிருந்து பின்வாங்குவதாக இல்லை.
இதில், அமெரிக்கா உக்ரைனுக்குத் தொடர்ந்து நிதியுதவி, ஆயுத உதவி போன்றவற்றைச் செய்துவருகிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபரும், குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை செல்போனில் தொடர்புகொண்டு, போரை முடிவுக்கு கொண்டுவருவதாக உறுதியளித்திருக்கிறார்.
இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் (Truth) சமூக வளைதளப் பக்கத்தில், “ஜெலன்ஸ்கியை பாராட்டுகிறேன். அமெரிக்காவின் அடுத்த அதிபராக உலகில் நான் அமைதியைக் கொண்டு வருவேன். அதோடு, எண்ணற்ற அப்பாவி குடும்பங்களை அழித்த போரை முடிவுக்குக் கொண்டுவருவேன். இரு தரப்பினரும் ஒன்றிணைந்து, வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை நடத்த முடியும்” என்று பதிவிட்டிருந்தார்.
அவரைத் தொடர்ந்து, ஜெலன்ஸ்கி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “குடியரசு கட்சி வேட்பாளரான ட்ரம்பை வாழ்த்தவும், பென்சில்வேனியாவில் நடந்த அதிர்ச்சியூட்டும் படுகொலை முயற்சியைக் கண்டிக்கவும் அவருடன் பேசினேன். எதிர்காலத்தில் அவருக்கு வலிமை, முழுமையான பாதுகாப்பு கிடைக்க விரும்புகிறேன். எங்கள் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின் ஆதரவை அவரிடம் குறிப்பிட்டேன்.
ரஷ்ய பயங்கரவாதத்தை எதிர்க்கும் எங்களின் திறனை வலுப்படுத்த அமெரிக்கா அளித்த உதவிக்கு உக்ரைன் எப்போதும் நன்றியுடன் இருக்கும். எங்கள் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீதான ரஷ்ய தாக்குதல்கள் ஒவ்வொரு நாளும் தொடர்கின்றன. சமாதானத்தை நியாயமானதாகவும், உண்மையிலேயே நீடித்ததாகவும் மாற்றுவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்பதை இருவரும் தனிப்பட்ட சந்திப்பில் விவாதிக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88