இந்தியக் குடும்பங்களின் கடன்கள் அதிகரித்து வருகின்றன. அதே சமயம், இந்தியக் குடும்பங்களின் நிதிச் சொத்துகளும் அதிகரித்து வருவதாக ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது.
ரிசர்வ் வங்கியின் பொருளாதாரக் கொள்கை ஆராய்ச்சிப் பிரிவு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியக் குடும்பங்களின் நிதிநிலை பற்றிய சுவாரஸ்ய புள்ளிவிவரங்கள் தெரியவந்துள்ளன.
இந்தியக் குடும்பங்களிடம் உள்ள நிதிச் சொத்துகளின் மொத்த மதிப்பு 363.8 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தில் 135 சதவிகிதமாக உள்ளது.
மறுபக்கம், இந்தியக் குடும்பங்களின் மொத்த கடன்கள் 101.8 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தில் 37.8 சதவிகிதம் ஆகும்.
நிகர மதிப்பில் பார்த்தால், இந்தியக் குடும்பங்களின் நிகர நிதிச் சொத்துகள் 262 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தில் 97.2 சதவிகிதம் ஆகும்.
இந்தியக் குடும்பங்களின் கடன்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனால், இந்தியக் குடும்பங்களின் நிதிச் சொத்துகளும் அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா காலத்துக்கு முன்பிருந்ததைவிட தற்போது இந்தியக் குடும்பங்களின் செல்வம், இந்தியப் பொருளாதாரத்தில் அதிக விகிதத்திலேயே இருந்து வருகிறது.
குடும்பங்களின் கடன்களும், நிதிச் சொத்துகளும் உயர்ந்து வருகின்றன. இதில் சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், குடும்பக் கடன்களுக்கும், குடும்ப நிதிச் சொத்துகளுக்கும் இடையேயான விகிதம் 2011-12 நிதியாண்டு முதல் பெரும்பாலும் பெரிய ஏற்ற, இறக்கங்கள் இல்லாமல் ஒரே அளவிலேயேதான் இருந்து வருகிறது என்பதையும் ரிசர்வ் வங்கி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.