“ஆட்சிக்கு வந்தால் அதானிக்கு வழங்கப்பட்ட தாராவி குடிசை புனரமைப்பு திட்டம் ரத்து” – உத்தவ் தாக்கரே

சிவசேனா நிறுவன தலைவர் பால் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, இரண்டாக உடைந்த பிறகு கட்சியின் பெயர் மற்றும் சின்னம் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு சென்றுவிட்டது. தற்போது புதிய சின்னத்துடன் உத்தவ் தாக்கரே தேர்தலை எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ”அதானி நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள தாராவி குடிசை புனரமைப்பு திட்டத்தை தங்களது அரசு பதவிக்கு வந்த பிறகு ரத்து செய்வோம். தாராவியில் வசிக்கும் மக்களையும், அங்குள்ள தொழில்களும் வேறு இடத்திற்கு மாற்ற எங்களது கட்சி அனுமதிக்காது. தாராவியில் வசிக்கும் மக்களுக்கு 500 சதுர அடி வீடு கொடுக்கப்படவேண்டும். எங்களது அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அதானி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட தாராவி குடிசை புனரமைப்பு திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய டெண்டர் விடப்படும். மும்பையை அதானி நகரமாக்க விடமாட்டோம்.

தாராவியை மேம்படுத்த அவர்களது திட்டம் என்ன? மும்பை மற்றும் தாராவியை அதானியிடம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். தாராவியில் கிடைக்கும் டி.டி.ஆர்.எனப்படும் மேம்பாட்டு உரிமையை மும்பை முழுவதும் சுதந்திரமாக விற்பனை செய்ய அனுமதி கொடுக்க இருக்கின்றனர். தாராவியில் 590 ஏக்கர் நிலத்தை மேம்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களுக்கு மும்பை முழுவதும் நிலம் வேண்டும்” என்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாராவி குடிசைபுனரமைப்புதிட்டம் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

அதானி நிறுவனம் 20 ஆயிரம் கோடியில் தாராவி குடிசையை புனரமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே தாராவியில் உள்ள குடிசைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. தாராவியில் இலவச வீடு பெற தகுதியில்லாதவர்களை தாராவிக்கு வெளியில் புதிய தாராவியை உருவாக்கி அங்கு குடியேற்ற அதானி நிறுவனம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88