“மனைவியிடம் அனுமதி வாங்கிவிட்டு பேச வந்துள்ளேன்!” கூட்டத்தில் உண்மையைப் போட்டு உடைத்த தொழிலதிபர்!

மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்களை ஒன்றிணைத்து, அவர்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுவரும் அமைப்புதான் மடீட்சியா (MADITSSIA). இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 50 ஆண்டு பொன் விழா இந்த ஆண்டு கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில், இந்த அமைப்பு ‘மடீட்கான்’ என்கிற பெயரில் மதுரை மற்றும் மதுரையைச் சுற்றி தொழில்முனைவோர்கள் கலந்துகொள்ளும் மாநாடு ஒன்றைக் கடந்த 14-ஆம் அன்று கள்ளந்திரியில் உள்ள எ.கே.என்.கே பேலஸ் அரங்கில் நடத்தியது. முன்னூறுக்கும் அதிகமான தொழில்முனைவோர்கள் இந்த மாநாட்டில் ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் திண்டுக்கல்லில் இருந்து செயல்படும் நாகா லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் செளந்தர் கண்ணன், கோ ஃப்ரூகல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நிறுவனரும், சி.இ.ஒ-வுமான குமார் வேம்பு, பிராண்ட் கன்சல்டன்ட் நிபுணர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, ஆடிட்டரும் ஜி.எஸ்.டி நிபுருமான கோவையைச் சேர்ந்த ஜி.கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

இந்த மாநாட்டில் முதலில் பேசிய நாகா லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் செளந்தர் கண்ணன் பேசியது குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது. அவர் பேசியதன் சுருக்கமான தொகுப்பு இனி…

செளந்தர் கண்ணன்

ஆன்ட்ரபிரினர் என்பவர் யார்?

‘‘நம்மில் பலரும் பிசினஸ் என்றாலே பதறுகிறார்கள். பிசினஸில் தவறு செய்தால் வாழ்க்கையே போய்விடும் என்று பயப்படுகிறார்கள். ஒரு ஆன்ட்ரபிரினர் அதாவது, தொழில்முனைவோர் என்பவர் பிசினஸ் செய்யும்போது ரிஸ்க் எடுக்கத் தயங்க மாட்டார். ரிஸ்க் எடுக்காமல் எந்த பிசினஸும் செய்ய முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதே போல, அவர் செய்யும் பிசினஸில் சில தவறுகளை செய்யத் தயங்க மாட்டார். ஆனால், செய்த தவறை உணர்ந்து, அதிலிருந்து பாடத்தைக் கற்று, மீண்டும் அதே தவறை செய்யாமல் இருப்பார். ஆக, ரிஸ்க் எடுக்கத் தயங்குபவரும், தவறு செய்யத் தயங்குபவரும் பிசினஸில் ஜெயிக்க முடியாது என்பதை தொழில்முனைவோர்கள் அனைவரும் முதலில் அறிவது அவசியம்’’.

ஏழு ‘M’-கள் என்னென்ன?

அடுத்து, அவர் பேசும்போது ஏழு ‘M’-கள் பற்றி பேசினார். அந்த ஏழு ‘M’-கள் என்னென்ன?

1. MADITSSIA, 2. Madurai, 3. MSME, 4. Model of MSME, 5. Money, 6. Mentor, 7. Marriage life balance என்று ஏழு ‘M’-கள் பற்றி விவரித்தவர், அதைப் பற்றி விளக்கமாக பேசவும் செய்தார்.

மதுரை

மடீட்சியாவைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்…

‘‘மதுரை மற்றும் மதுரையைச் சுற்றி இருக்கும் தொழில்முனைவோர்கள் அருமையாகத் தொழில் செய்ய வேண்டும், அவர்களுக்கு ஏதாவது பிரச்னை வந்தால், அதை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று, அந்தப் பிரச்னைக்கு உரிய தீர்வைத் தரும் வேலையை செய்து வருகிறது. இது போன்ற அமைப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் தொழில்முனைவோர்கள் மிகப் பெரிய அளவில் வெற்றி காண்கிறார்கள்.’’

நெகட்டிவ்-ஆகப் பேசி உற்சாகத்தைக் குறைக்காதீர்கள்…

‘‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மதுரை நகரம் தென் மாவட்டங்களுக்கு வாசலாக விளங்குகிறது. ஆனால், இது மாதிரியான நகரங்களுக்கு உள்ள சாபக்கேடு என்னவெனில், இன்னும் கடந்த காலத்திலேயே இருப்பதுதான். இங்குள்ள பெரியவர்களிடம், ‘‘அய்யா, பிசினஸ் எப்படி போகிறது’’ என்று கேட்டுப் பாருங்கள். ‘‘அய்யோ, அதைப் பத்தி பேசாதீங்க. சுத்த மோசம்’’ என்றுதான் சொல்வார்கள். இவர்கள் கடந்த காலத்திலேயே வாழ்பவர்கள்.

பார்வையாளர்கள்

நீங்கள் செய்யும் பிசினஸ் பற்றி நீங்கள் எப்போதும் நெகட்டிவ்-ஆக பேசிக் கொண்டே இருந்தால், உங்கள் மகனோ அல்லது மகளோ எப்படி உங்கள் பிசினஸுக்குள் வருவார்கள்? யாரோ ஒருவரிடம் கொடுத்துவிட்டுப் போவதற்காக நீங்கள் பிசினஸைத் தொடங்கி நடத்தினீர்கள். எனவே, உங்கள் பிசினஸைப் பற்றி உங்கள் வீட்டில் நெகட்டிவ்-ஆகப் பேசி, உங்கள் குடும்பத்தினர் உற்சாகம் இழக்கிற மாதிரி நடப்பதை முதலில் நிறுத்துங்கள். சந்தையைப் பாருங்கள், நிறைய வாய்ப்புகள் அங்கே கொட்டிக் கிடக்கும். இந்த வாய்ப்பில் எதில் நீங்கள் இறங்கலாம் என்று யோசிக்க வேண்டுமே தவிர, எப்போதும் நெகட்டிவ்-ஆக பேசிக்கொண்டே இருக்கக்கூடாது!’’

உங்கள் பிசினஸ் மாடல் என்ன?

‘‘நீங்கள் ஒரு தொழிலை செய்கிறீர்கள் அதை என்ன விதமான மாடலில் செய்கிறீர்கள் என்பதைப் பாருங்கள். இதற்கு மூன்று கேள்விகளை நீங்கள் உங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

1. நான் செய்யும் பிசினஸ் என்னை மட்டுமே நம்பியுள்ளதா…?

2. நான் செய்யும் தொழில் என்னை நம்பியில்லை. புராசஸை நம்பி இருக்கிறதா?

3. நான் செய்யும் தொழில் என்னையும், புராசஸையும் நம்பியுள்ளதா?

செளந்தர் கண்ணன்

நீங்கள் செய்யும் தொழில் உங்களை மட்டுமே நம்பியிருப்பது சரியானதல்ல. அப்படி இருந்தால், எல்லா விஷயங்கள் பற்றியும் உங்களிடமே வந்து கேட்பார்கள். அப்போது நீங்கள் மற்றவர்களிடம் இப்படி செய்யுங்கள், அப்படி செய்யுங்கள் என்று சொல்லவே உங்கள் சக்தி போய்விடும். எனவே, உங்கள் நிறுவனத்தில் புராசஸை உருவாக்குங்கள். அப்படி உருவாக்கினால், உங்கள் பணியாளர்களும் வேலை பார்ப்பார்கள். வேலையும் நடக்கும். நீங்கள் உங்கள் வேலையை செய்துகொண்டிருக்கலாம். என்ன புராசஸ் உருவாக்கினாலும் புதுப்புது பிரச்னைகள் வந்துகொண்டே இருக்கும். அப்போது அவர்களுக்கு வழிகாட்டித்தான் ஆகவேண்டும். எனவே, புராசஸ் சரியாக வைத்திருக்க வேண்டிய அதே நேரத்தில், நீங்களும் உங்கள் ஊழியர்களுக்கு சரியாக வழிகாட்டினால் பிசினஸில் நிச்சயம் ஜெயிப்பீர்கள். இந்த மாடலில் உங்கள் நிறுவனத்தை உருவாக்கி வைத்துக்கொள்ளுங்கள்.’’

அடுத்த தலைமுறையைக் கொண்டு வாருங்கள்…

‘‘இன்றைய தலைமுறையினரில் 50% முதல் 55% பேர் மட்டுமே பேமிலி பிசினஸுக்குள் விரும்பி வருகிறார்கள். மற்றவர்கள் வேறு வழி இல்லாமல்தான் வருகிறார்கள். ஆர்வம் இல்லாமல் அவர்கள் பேமிலி பிசினஸுக்குள் வரும்போது, அவர்களால் குடும்பத் தொழிலை வெற்றிகரமாக அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்ல முடிவதில்லை. இதற்குக் காரணம், அடுத்த தலைமுறையினரை சொல்ல முடியாது. காரணம், இன்றைக்கு பிசினஸ் செய்யும் பலரும், ‘‘பிசினஸில் நான் படும் கஷ்டம் என்னோடு போய்விடட்டும். என் குழந்தைகள் அந்தக் கஷ்டத்தைப் படக்கூடாது’’ என்றே பேசிகிறார்கள்.

செளந்தர் கண்ணனுக்குப் பாராட்டு

பிசினஸில் நான் இப்படிக் கஷ்டப்பட்டேன், அப்படிக் கஷ்டப்பட்டேன் என்று வீட்டில் போய் பேசும்போது, அடுத்தத் தலைமுறைனருக்கு என்ன எண்ணம் வருகிறது? பிசினஸ் செய்யப் போனால் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும் போல! எனவே, பிசினஸை விட்டுவிடுவோம் என்றே அவர்கள் நினைக்கிறார்கள். இப்படி இல்லாமல், பிசினஸில் இன்றைக்கு இப்படி ஒரு விஷயத்தை வெற்றிகரமாக செய்தேன், இப்படி ஒரு புதிய பிசினஸ் வந்தால், நமக்கு இவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று பிசினஸில் நடக்கும் பாசிட்டிவ்-ஆன விஷயங்களைப் பேசினால், அவர்களுக்கும் பிசினஸ் செய்ய ஆர்வம் வரும். அடுத்த தலைமுறையினரும் ஆர்வத்துடன் உள்ளே வந்து செய்வார்கள். ஆக, பிசினஸ் செய்வது எப்படி என்பதை எடுத்துச் சொல்லும் முதல் மென்ட்டாராக நாம்தான் இருக்க வேண்டும்.

அதே போல, பிசினஸை இளம் தலைமுறையினர் செய்யும்போது அவர் செய்யும் தவறுகளைப் பெரிது படுத்தாதீர்கள். அவர்கள் செய்யும் தவறுகளை எடுத்துச் சொல்லச் சொல்ல, அவர்களுக்கு பிசினஸில் இருக்கும் ஆர்வம் குறையும். அதற்கு பதிலாக, அவர்கள் செய்த தவறுகளை அவர்களே உணரும்படி செய்தால், அந்தத் தவறை அவர்கள் செய்யாமல் இருப்பார்கள். உண்மையைச் சொன்னால், நாம் செய்யாத தவறுகளா? அந்தத் தவறுகளை எல்லாம் நம் பெரியவர்கள் பொறுத்துக் கொண்ட மாதிரி, நாமும் நம் குழந்தைகளுக்கு நல்ல வழி காட்ட வேண்டும்.’’

ஞாயிற்றுக்கிழமை குடும்பத்திற்கான நாள்…

‘‘என்னைப் பொருத்தவரை, வாரத்தின் ஆறு நாள்கள் தொழில் வளர்ச்சிக்காக நான் பாடுபட்டாலும், ஞாயிற்றுக்கிழமையைக் குடும்பத்திற்கான நாளாக ஒதுக்கிவிட்டேன். அன்றைக்கு குடும்ப உறுப்பினர்களுடன் இருப்பதே முக்கியமான விஷயமாக நினைத்து செய்கிறேன். இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தக் கூட்டம் நடப்பதால், இதில் பேசுவதற்கு என் மனைவியிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் பேச வந்திருக்கிறேன். ‘‘முன்னூறுக்கும் மேற்பட்ட பிசினஸ்மேன்கள் மத்தியில் நான் பேசப் போகிறேன். அதன்மூலம் அவர்களின் வாழ்க்கையில் சிறு இம்பாக்ட்டை ஏற்படுத்தப் போகிறேன்’’ என்று சொன்னபின், ‘‘நல்ல விஷயம்’’ என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.

வாரத்தின் ஒரு நாளையாவது நாம் குடும்பத்துடன் செலவு செய்ய வேண்டும். அப்போதுதான் நம் பிசினஸில் நாம் படும் கஷ்டங்களை எளிதாகக் கடந்து வரத் தேவையான சக்தி நமக்குக் கிடைக்கும்!

உங்கள் குடும்பத்தினரை முடிந்தவரை உங்கள் பிசினஸில் சேர்த்துக் கொள்ளுங்கள். என் குடும்பத்தின் முக்கியமான அனைவரும் எங்கள் பிசினஸில் இருக்கிறார். அவர்களுக்கு என்ன பொறுப்பு என்பது குறித்து நாங்கள் ஏற்கெனவே தெளிவாக பேசி முடித்துவிடுவதால், எங்களுக்குள் எந்தக் குழப்பமும் வரவதில்லை. எல்லோரும் மகிழ்ச்சியாக பிசினஸ் செய்துகொண்டு இருக்கிறோம்’’ என்று பேசி முடித்தார் செளந்தர் கண்ணன்.

இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் செளந்தர் கண்ணனின் பேச்சை ரசித்துக் கேட்டனர்!