கன்னடர் இட ஒதுக்கீடு: `மாநில அரசின் மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது!’ – காங்கிரஸ் எம்.பி சசி தரூர்

கர்நாடக முதல்வர் சித்தராமையா, அனைத்து தனியார் நிறுவனங்களிலும் ‘சி மற்றும் டி’ கிரேடு பணிகளில் கன்னடர்களுக்கு 100 சதவிகித இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் மசோதாவுக்கு அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்திருப்பதாகச் செவ்வாயன்று ட்வீட் செய்திருந்தார். அதற்கடுத்த நாளே, முன்னணி தொழில்நிறுவனங்கள் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பவே, அந்த ட்வீட்டை சித்தராமையா நீக்கிவிட்டார்.

டெல்லி போராட்டத்தில் சித்தராமையா

அதையடுத்து, தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு நிர்வாகப் பணிகளில் 50 சதவிகிதமும், நிர்வாகம் அல்லாத பணிகளில் 70 சதவிகிதமும் இட ஒதுக்கீடு என மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார். இன்னும் பிற அமைச்சர்கள், ஆலோசனைக்குப் பிறகு நிலையிலான முடிவெடுக்கப்படும், தொழில் நிறுவனங்கள் பதட்டமடைய வேண்டாம் என கூறிவந்தனர். பின்னர், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்ட, கர்நாடகா மாநிலத் தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் வேட்பாளர்களுக்கான வேலைவாய்ப்பு மசோதா, 2024-ஐ நேற்று தாக்கல் செய்யாமல் அரசு பின்வாங்கியது.

இந்த நிலையில், கர்நாடக இவ்வாறு மசோதா கொண்டுவருவது அரசியலமைப்புக்கு எதிரானது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்திருக்கிறார்.

கர்நாடக அரசின் மசோதா குறித்த பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு இன்று பதிலளித்த திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், “கர்நாடகா எந்த அடிப்படையில் இதைப் பற்றி நினைக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை… இத்தகைய சட்டம் அமல்படுத்தப்பட்டால், நிறுவனங்கள் தங்கள் வணிகங்களை தமிழ்நாடு, கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கு மாற்றக்கூடும்.

சசி தரூர்

எனவே, இந்த மசோதா புத்திசாலித்தனமான முடிவு அல்ல. ஒவ்வொரு மாநிலமும் இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தால், அது அரசியலமைப்புக்கு எதிரானதாக இருக்கும். நாட்டின் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக வாழவும், வேலை செய்யவும், பயணம் செய்யவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளிக்கிறது. ஏற்கெனவே, ஹரியானாவில் பா.ஜ.க கூட்டணி அரசு இதேபோன்ற மசோதாவை அறிமுகப்படுத்த முயன்றபோது பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்தது” என்று கூறினார்.