Budget: 80C, வருமான வரி உச்சவரம்பு; இன்னும் என்னென்ன சலுகைகளை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்?

வரும் ஜூலை 23-ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தாலும், வருமான வரி சார்ந்த அறிவிப்புகள்தான் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க தனிப்பெரும்பான்மை இழந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. எனவே, வரும் பட்ஜெட்டில் பாப்புலிஸ்ட் அம்சங்கள் இருக்கும் என்பதே பிரதான எதிர்பார்ப்பு. அதிலும், வருமான வரிச் சலுகைகள்தான் ஹைலைட்டாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழலில் மத்திய பட்ஜெட்டில் என்னென்ன வருமான வரிச் சலுகைகளை எதிர்பார்க்கலாம்?

வருமான வரி

நிலைக் கழிவு:

2018-ம் ஆண்டு பட்ஜெட்டில் முதல்முறையாக நிலைக் கழிவு (standard deduction) அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது 40,000 ரூபாய் நிலைக் கழிவு கொண்டுவரப்பட்டது.

2019-ம் ஆண்டு பட்ஜெட்டில் நிலைக் கழிவு 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதற்குப் பிறகு நிலைக் கழிவு மாற்றப்படாமலேயே உள்ளது.

எனவே, இந்த பட்ஜெட்டில் நிலைக் கழிவு 60,000 ரூபாய் அல்லது 70,000 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிவு 80சி:

வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி (Section 80C) கீழ் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி சலுகை வழங்கப்படுகிறது. 2014-ம் ஆண்டுக்குப் பின் இந்த 1.5 லட்சம் ரூபாய் வரம்பு உயர்த்தபடவே இல்லை.

ஆனால், இடைப்பட்ட காலகட்டத்தில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துவிட்டது. எனவே, 80சி பிரிவின் கீழ் வழங்கப்படும் 1.5 லட்சம் ரூபாய் வருமான வரி சலுகை மேலும் உயர்த்தபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரி

வருமான வரி உச்சவரம்பு:

தற்போது வருமான வரி உச்சவரம்பு 3 லட்சம் ரூபாயாக உள்ளது. வரும் பட்ஜெட்டில், உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரிச் சலுகை உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என பல தரப்பினரும் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

5 லட்சம் ரூபாய் வருமான வரி உச்சவரம்பு அமல்படுத்தப்பட்டால், ஆண்டுக்கு 8.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்த வேண்டியதில்லை என்ற நிலை உருவாகும்.

தேசிய ஓய்வூதியத் திட்டம்:

என்.பி.எஸ் (NPS) எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளிகளுக்கு Section 80CCD 1B கீழ் கூடுதலாக 50,000 ரூபாய் வரை வருமான வரி சலுகை வழங்கப்படுகிறது. இந்த வரம்பு பட்ஜெட்டில் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டு வாடகைப் படி:

நகர்ப்புறங்களில் வீட்டு வாடகை செலவுகள் தாறுமாறாக அதிகரித்து வரும் நிலையில், வீட்டு வாடகைப் படித் தொகைக்கு (HRA) வழங்கப்படும் வரி சலுகையை உயர்த்த வேண்டும் என்பதும் வரி செலுத்துவோர் மத்தியில் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

HRA – House Rent Allowance – வீட்டு வாடகைப் படி

மருத்துவக் காப்பீடு:

மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் காலகட்டத்தில், Section 80D கீழ் மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்துக்கு வழங்கப்படும் வருமான வரி சலுகையை உயர்த்த வேண்டும் என்பதும் பிரதான எதிர்பார்ப்புகளில் ஒன்று.

தற்போது, தனிநபர்களுக்கு 25,000 ரூபாய் வரையிலும், சீனியர் சிட்டிசன்களுக்கு 50,000 ரூபாய் வரையிலும் வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இந்த வரம்பை தனிநபர்களுக்கு 50,000 ரூபாயாகவும், சீனியர் சிட்டிசன்களுக்கு 75,000 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும் என்பது வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்பு.

இந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் எந்தளவுக்கு நிறைவேறும் என்பது வரும் செவ்வாய்க்கிழமை அன்று தெரிந்துவிடும்!