நெல்லை: ஜெயக்குமார் மரண வழக்கு; குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீஸார் மீண்டும் விசாரணை!

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கரைசுத்துப்புதூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தார். இவர், கடந்த மே மாதம் 4-ம் தேதி அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கினை விசாரிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அடுத்த சில நாள்களில் மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.

ஜெயக்குமார்

இதில் ஜெயக்குமார் அவரது கைப்பட எழுதியதாக கிடைத்த கடிதத்தில் சில அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததால், அது குறித்து விசாரணை நடத்தினர். எனினும் ஜெயக்குமாரின் மரணம் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. ஜெயக்குமாரின் கடிதத்தில் குறிப்பிட்டவர்கள் மற்றும் குடும்பத்தினர், நண்பர்களிடம் விசாரணை  நடத்திட கடந்த மாதம் 32 பேருக்கு சம்மன் அனுப்பினர். தினமும் 4 பேர் என்ற அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

விசாரணையில் அவர்களின் வாக்குமூலத்தை வீடியோவில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். விசாரணையில் தொடக்கத்தில் ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி, மூத்த மகன் கருத்தையா ஜெப்ரின், இளைய மகன் மார்ட்டின், உறவினர்கள் மற்றும் வேலையாட்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், அரசியல் பிரமுகர்கள், அவரின் ஆதரவாளர்கள் என விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டது. ஜெயக்குமாரின் செல்போனுக்கு வந்த இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் போன் கால்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிபிசிஐடி போலீஸார் குழு

இந்த நிலையில், ஜெயக்குமாரின் மனைவி, மகன்களிடம் சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் உலகராணி தலைமையிலான  குழுவினர் ஜெயக்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று சுமார் 7 மணி நேரம் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர். ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் விசாரணை நடத்தப்பட்டிருப்பது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஜெயக்குமாரின் மரணச் சம்பவம் நடந்து 75 நாள்களுக்கு மேல் ஆகியும் போலீஸார் இன்னனும் துப்பு துலக்க முடியாமல் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.