காய்கறிகளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. அதோடு பூச்சிக் கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் பயன்பாட்டால் சந்தையில் கிடைக்கும் காய்கறிகளும் விலை உயர்ந்து நஞ்சுடையதாகவே இருந்து வருகிறது. இதற்கு ஆறுதலாக இருந்து வருவது இயற்கை முறையிலான மாடித்தோட்டங்களே.
மாடித்தோட்டத்துககான பொருள்கள் பல இடங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதேசமயம் தமிழக அரசும் மாடித்தோட்டங்களுக்கான செடி வளர்ப்பு பைகள், தென்னை நார்க் கழிவு, விதைகள், உயிர் உரங்களை நகர்புற காய்கறி உற்பத்தி திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கி வருகிறது.
இதன் அடிப்படையில்
-
செடி வளர்ப்பு பைகள்-6
-
6 கிலோ எடையுள்ள தென்னை நார்கழிவு கட்டிகள்-2
-
6 வகையான காய்கறி விதைகள் (அதிக மகசூல் தரும் வீரிய ஒட்டு ரகம் மற்றும் பாரம்பரிய வகைகள்) (அரசு நிறுவனம் மூலம்)- 6 விதை பொட்டலங்கள்(ரூ.10/பொட்டலம்)
-
அசோஸ்பைரில்லம் (அரசு நிறுவனம் மூலம்)-300 கிராம்
-
பாஸ்போ பாக்டீரியா (அரசு நிறுவனம் மூலம்)-300 கிராம்
-
ட்ரைக்கோடெர்மா விரிடி (அரசு நிறுவனம் மூலம்)-200 கிராம்
-
வேப்பெண்ணெய்-100 மி.லி
-
மாடித்தோட்ட காய்கறி வளர்ப்பு முறைக்கான கையேடு
ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மொத்த விலை ரூ.900 ரூபாய். மானிய விலையில் 450 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது. மாடித்தோட்ட தொகுப்பு வாங்குபவர்கள் 450 ரூபாயை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 2 தொகுப்புகள் வரை வாங்கிக் கொள்ளலாம் என்று தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.
https://www.tnhorticulture.tn.gov.in/kit/ என்ற தோட்டக்கலை இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்தும் பெற்றுக் கொள்ளலாம்.
இதனிடையே தோட்டக்கலைத்துறை வழங்கும் மானிய விலை மாடித்தோட்ட கிட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு விட்டது; சரிவர கிடைப்பதில்லை என்ற புகார்கள் கிளம்பவே தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன் ஐ.ஏ.எஸ்ஸிடம் பேசினோம்.
அவர், “மானிய விலை மாடித்தோட்ட தொகுப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மானிய விலை மாடித்தோட்ட தொகுப்புகள் ஆண்டுதோறும் இவ்வளவு வழங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து தோட்டக்கலைத்துறை செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டுக்கான மாடித்தோட்ட தொகுப்புகள் வழங்குவதற்கான அனுமதியை அரசு வழங்கியுள்ளது. அடுத்த மாதம் ஆகஸ்ட்டிலிருந்து மானிய விலை மாடித்தோட்ட தொகுப்பு பயனாளிகளுக்கு வழங்கப்படும். தற்போது மானிய விலை மாடித்தோட்ட தொகுப்பு கிடைக்க பெறாதவர்கள் சென்னையிலுள்ள தோட்டக்கலைத்துறையை அணுகினால் வழிகாட்டப்படும்” என்றார்.