ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணை கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், “தமிழக மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்குமான பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜுன் இரண்டாம் வாரத்தில் கோட்டைபட்டினம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அடுத்து ஜுன் 23-ம் தேதி 22 மீனவர்களையும், கடந்த ஜூலை முதல் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 25 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் குற்றவாளிகளை போல் கைது செய்வதோடு, மீனவர்கள் மீது கிருமி நாசினியை தெளித்து மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2021-ல் குஜராத்தை சேர்ந்த மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் தாக்கப்பட்ட போது மத்திய அரசு பாகிஸ்தான் கடற்படையினருக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்தது.
ஆனால் தமிழக மீனவர்கள் கைதின்போது அது போன்ற நடவடிக்கை மத்திய அரசால் எடுக்கப்படுவதில்லை. எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்திரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு, ”தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே. அவர்களின் பாதுகாப்பு என்பது முக்கியமானது” என கருத்து தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்து தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த பிரச்சனை மற்றொரு நாட்டுடன் தொடர்புடையது. ஆகவே தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு விரைவாக எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது என குறிப்பிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.