கழுகார்: `புலம்பும் மாஜி அண்ணனின் விழுதுகள் டு கம்பெனி கொடுத்த அறிக்கை; அச்சத்தில் மாண்புமிகுக்கள்’

‘நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சி வேட்பாளரை, தமிழ்நாட்டிலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்திருக்கிறோம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் கணிசமான ஸ்வீட் பாக்ஸுகளை இறக்கியிருக்கிறோம். எனவே, இழந்த மாண்புமிகு பதவி மீண்டும் நமக்கே கிடைத்துவிடும்’ என்று மிகுந்த நம்பிக்கையில் இருந்தாராம் அந்த மாஜி. ஆனால், சென்னையில் சமீபத்தில் நடந்த தேசியக் கட்சித் தலைவர் கொலையோடு தொடர்புடைய கூலிப்படையினர் மற்றும் அவர்களின் உறவினர் நடத்திய நிகழ்ச்சிகளில் ஏற்கெனவே அந்த மாஜி எடுத்துக்கொண்ட புகைப்படங்களெல்லாம் சமூக வலைதளத்தில் வெளியாகி, சூழலையே மாற்றிப்போட்டுவிட்டது. புகைப்பட விவகாரங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட எதிர்க்கட்சிகள், “கொலைக்கும் ஆளும் தரப்புக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. இதையும் விசாரிக்க வேண்டும்” எனக் களமாடத் தொடங்கிவிட்டன. இதனால், அதிர்ந்துபோன மாஜி, ‘எங்கே தன்னுடைய மாண்புமிகு கனவுக்கும் பாதகம் வந்துவிடுமோ…’ என்ற பயத்தில் இருக்கிறாராம். “அண்ணனின் ஆசையில் இப்படி மண்ணள்ளிப் போட்டுட்டாங்களே…” என்று புலம்புகிறார்கள் விழுதுகள்.

காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கும், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான புகைச்சல் அடுத்தகட்டத்தை எட்டியிருக்கிறது என்கிறார்கள் இரண்டு தரப்பிலும். செல்வப்பெருந்தகை மீதிருக்கும் வழக்குகள் தொடர்பான விவரங்களை தூசுதட்டிச் சேகரித்திருக்கும் பா.ஜ.க தரப்பு, அதை மேலிடத்தில் கொடுத்து, ‘கடுமையான நடவடிக்கைகள் எடுத்து செல்வப்பெருந்தகையின் அரசியல் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போட வேண்டும்’ எனக் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்துவருகிறதாம்.

செல்வப்பெருந்தகை, அண்ணாமலை

இதற்கு பதிலடியாக, ‘அண்ணாமலைமீது பி.சி.ஆர் வழக்கு தொடர்ந்து, அவரது லண்டன் பயணத்துக்கு முட்டுக்கட்டை போட்டு சட்டரீதியில் அவரை முடக்கிவிட வேண்டும்’ என வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனை செய்துவருகிறதாம் செல்வப்பெருந்தகை தரப்பு. “கட்சியை வளர்க்க தலைமைப் பொறுப்புக்குக் கொண்டுவந்தால், தங்களது சொந்தப் பகையைத் தீர்த்துக்கொள்ளப் பதவியைப் பயன்படுத்துகிறார்களே….” என முணுமுணுக்கிறார்கள் சத்தியமூர்த்தி பவன், கமலாலய சீனியர்கள்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து ஆய்வறிக்கை ஒன்றைத் தலைமையிடம் சமர்ப்பித்திருக்கிறதாம் ஆளும் தரப்பு கம்பெனி. அதில், ‘இடைத்தேர்தலுக்கு மொத்தம் இறக்கப்பட்ட 150 ஸ்வீட் பாக்ஸுகளை யார் யார் கொடுத்தார்கள், யார் யார் பதுக்கினார்கள் என்பதும் அடக்கம்’ என்கிறார்கள். இந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து விக்கிரவாண்டிக்கு அருகிலிருக்கும் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மாண்புமிகுக்கள் கிலியில் இருக்கிறார்களாம். இதன் பின்னணியை விசாரித்தால், “தேர்தல் முடிந்ததும், தலைமையுடன் நடந்த ஆலோசனையின்போது தாங்கள்தான் பெரிய அளவில் செலவு செய்ததாக அளந்துவிட்டிருக்கிறார்கள். ஆனால், ‘அவர்கள் இருவரும் கையிலிருந்து எதையும் இறக்கவில்லை. எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் வேலையைப் பிரித்துக் கொடுத்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல… தேர்தலைக் காரணமாகவைத்து மிகப்பெரிய வசூலையும் செய்துவிட்டார்கள்” என கம்பெனியின் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்களாம். எனவேதான், ‘தலைமை என்ன நடவடிக்கை எடுக்குமோ…’ என்ற அச்சத்தில் இருக்கிறார்களாம் சம்பந்தப்பட்ட மாண்புமிகுக்கள்.

தூங்கா நகரின் சீனியர் மாஜிமீது உச்சகட்ட எரிச்சலில் இருக்கிறதாம் கட்சித் தலைமை. ‘ராகுல் காந்தியைப் புகழ்ந்து பேசுவது, நடிகர் விஜய்யை எம்.ஜி.ஆரோடு ஒப்பிட்டுப் பேசுவது, கட்சிக்காரர்களை மிரட்டுவது…’ எனத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் அந்த விஞ்ஞானப் பிரமுகர் நடந்துகொள்வதும், அதைத் தலைமை கண்டிப்பதுமான போக்கு தொடர்கிறது.

சமீபத்தில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில், “சிறுபான்மையினர் எங்களை நம்பவில்லை” என அவர் சொல்ல, “எப்படியாவது சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெறுவோம் என நான் கட்சிக்காரர்களைச் சமாளித்து வைத்திருந்தால், இவர் இப்படிப் பேசி எல்லாவற்றையும் சிதைக்கிறாரே…” எனக் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாராம் எடக்கானவர். இந்த நிலையில், “மாஜி மீதான தலைமையின் எதிர்ப்பு மனநிலையைப் பயன்படுத்திக்கொண்டு, தூங்கா நகரின் மாவட்டப் பொறுப்புக்கு வருவதற்குக் காய்நகர்த்திவருகிறார் பல கட்சிகள் மாறி இலைக் கட்சிக்கு வந்த டாக்டர்” என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!

15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதில், கோட்டையின் முக்கியப் பொறுப்பிலிருந்தவர் மாற்றம்தான் தற்போதைய ஹாட் டாபிக். செனடாப் சாலை சிபாரிசில் அந்த இடத்துக்கு வந்ததால், அந்த அதிகாரியின் ஆட்டமும் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. இது தொடர்பாக ஆட்சி மேலிடத்திடம் பலரும் புகார் செய்துவந்தனர். இந்த நிலையில், ஆட்சி மேலிடத்துக்கே கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் சில அதிரடி உத்தரவுகளை அந்த அதிகாரி பிறப்பிக்க, ஆட்சி மேலிடமும் கடுப்பாகிவிட்டதாம். இதையடுத்து ஆலோசனைக் கூட்டத்தில் அந்த அதிகாரியிடம் கடுகடுத்த மேலிடம், தற்போது அவரை வேறொரு துறைக்கு தூக்கியடித்திருக்கிறது. ‘மற்ற மாற்றங்களைவிட இந்த ஒரு மாற்றம்தான் நிம்மதியைக் கொடுத்திருக்கிறது’ என கிசுகிசுக்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88