காவிரி நீர் விவகாரம்: தமிழ்நாடு அரசின் செயல்பாடு போதுமானதா?!

`காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டபடியெல்லாம் தமிழ்நாட்டுக்கு தண்ணீரை கொடுக்க முடியாது’ என கர்நாடக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாகக் கூறியிருக்கும் நிலையில், அதற்கு எதிராக, `கர்நாடக அரசு நீர்தர மறுத்தால் சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்’ என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டிய அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஸ்டாலின்

காவிரி நீர் ஒழுங்காற்று குழு, `தமிழ்நாட்டுக்கு நாளொன்றுக்கு 1 டி.எம்.சி நீரை விடுவிக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருந்த நிலையில் அதை ஏற்காமல் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, `தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து 1 டி.எம்.சி நீர் தரமுடியாது; வேண்டுமானால் நாளொன்றுக்கு 8,000 கன அடி நீர் திறந்துவிடலாம்’ எனக் கூறியிருந்தார். இது தமிழக மக்கள், விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பல்வேறு தமிழக விவசாய அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் சாலை மறியல், ரயில் மறியல், கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்திவருகின்றன.

இந்தநிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சிகளின் சட்டமன்றத் தலைவர்களும் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையினையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினையும் பின்பற்ற மறுத்து, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையின்படி நமக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த அளவு தண்ணீரைக் கூட கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது. இதனை முறியடித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி பல ஆக்கபூர்வமான கருத்துக்களை இங்கு நீங்கள் தெரிவித்து இருக்கின்றீர்கள். அதற்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்

தமிழ்நாட்டுக்கு சட்டபூர்வமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, கிடைக்க வேண்டிய நீரினைச் சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தை நாடித் தான் நீரைப் பெற்றோம். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையிலும், கர்நாடகா அரசு இவ்வாறு நடந்து கொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது” எனத் தெரிவித்தார்.

அதையடுத்து, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில், ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை 3 தீர்மானங்களாக பட்டியலிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வாசித்தார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. காவிரி நடுவர் மன்றம் 05-02-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் 16-02-2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசிற்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

2. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.

3. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடியாகப் பெறுவதற்கு, தேவைப்படின், உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இக்கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.

பி.ஆர் பாண்டியன்

இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனிடம் கேட்டபோது, “காவிரி விவகாரத்தில் கடந்த ஆண்டுவரை, `காவிரி மேலாண்மை ஆணைய தலைவருக்கு கடிதம் எழுதமுடியாது, ப்ரோட்டோகால் இல்லை!’ எனக்கூறி தட்டிக்கழித்து வந்த தமிழ்நாடு அரசு இந்த முறை காவிரி மேலாண்மை ஆணையருக்கு கடிதம் எழுதியிருக்கிறது. ஆணையத்திடம் முறையிடாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தையே நாடிவந்த தமிழ்நாடு அரசு இந்த முறை ஆணையத்திடமும் முறையிட்டிருக்கிறது. மேலும், இந்த விவகாரத்தில் கர்நாடக அரசோ, ஆணையமோ தண்ணீர் பெற்றுத்தர மறுத்தால் அவர்கள்மீது வழக்குத் தொடர்வோம் என்றும் கூறியிருக்கிறது. ஆக, தமிழ்நாடு அரசின் இந்த முன்னெடுப்பையும், தீர்மானத்தை வரவேற்கிறோம். அதன்படியே நாங்கள் அறிவித்த முழு கடையடைப்பு போராட்டத்தையும் வாபஸ் பெற்றிருக்கிறோம். அதேசமயம் இந்த நடவடிக்கைகளை திருப்தி என்றெல்லாம் சொல்ல முடியாது. கர்நாடக அரசின் தீர்மானத்துக்கு ஓர் எதிர்வினையாகவே கருத முடியும்!’ என்றார்.

`தமிழ்நாடு அரசின் செயல்பாடு குறித்த உங்களின் கருத்துகளை கமெண்டில் தெரிவிக்கலாம்..!’

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88