“இந்திய ஏற்றுமதி 5.40% அதிகரிக்கும்…” மத்திய அரசின் மதிப்பீடு சொல்வதென்ன?

கடந்த 2024 ஜூன் மாதத்தில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 5.40 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. இதில், மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி 16.91% அதிகரித்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நடப்பாண்டின் ஜூன் மாதத்தில், நாட்டின் மொத்த ஏற்றுமதி 65.47 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த 2023ஆம் ஆண்டின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.40 சதவீதம் அதிகமாகும்.

ஏற்றுமதி – இறக்குமதி

ஏற்றுமதி – இறக்குமதி நிலவரம்

அதேபோல் நமது நாட்டின் மொத்த இறக்குமதியானது, நடப்பு 2024 ஜூன் மாதத்தில் 73.47 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 6.29 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 2024ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 35.20 பில்லியன் டாலராக இருந்துள்ளது. இது 2023ஆம் ஆண்டின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 2.55 சதவீதம் அதிகம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மின்னணு சாதனங்கள் ஏற்றுமதி எவ்வளவு?

ஏற்றுமதியை பொருத்தமட்டில், பிரிவு வாரியாகப் பார்த்தோம் எனில், பெட்ரோலியம் அல்லாத, மணிக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி 2024ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 27.43 பில்லியன் டாலராக இருந்தது.

மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி 2024ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 2.8 பில்லியன் டாலராக இருந்தது. இது 2023ஆம் ஆண்டின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 16.91 சதவீதம் அதிகமாகும். பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 2023ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தைவிட 10.27 சதவீதம் அதிகரித்து 2024 ஜூன் மாதத்தில் 9.39 பில்லியன் டாலராக இருந்துள்ளது.

மருந்து பொருட்கள் ஏற்றுமதி

மருந்து பொருட்கள் ஏற்றுமதி

இயற்கை மற்றும் செயற்கை ரசாயனப் பொருட்களின் ஏற்றுமதி, நடப்பு ஆண்டின் ஜூன் மாதத்தில் 2.29 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த 2023ஆம் ஆண்டின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, 3.32 சதவீதம் அதிகரிப்பாகும். மருந்துகள் ஏற்றுமதி 2023ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தை விட 9.93 சதவீதம் அதிகரித்து 2024ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 2.47 பில்லியன் டாலராக இருந்தது.

நமது நாட்டில் இருந்து காபி ஏற்றுமதி கடந்தாண்டின் ஜூன் மாதத்தை விட, 2024 ஆம் ஆண்டும் ஜூனில் 70.02 சதவீதம் அதிகரித்து 0.20 பில்லியன் டாலராக இருக்கும் என மத்திய அரசின் புள்ளி விவரங்கள் மதிப்பீடு செய்துள்ளன.