நமக்குள்ளே… ஹத்ராஸ் கூட்ட நெரிசல்: பலி கொடுக்கப்பட்ட 121 உயிர்கள்… பாடம் படிப்போமா தோழிகளே!

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் சாமியார் போலே பாபாவின் ஆன்மிக நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 121 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், இந்தியாவுக்கு, மற்றுமொரு கறுப்பு தினம்.

இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளே. அவர்கள்தான் எப்போதும் பாதிப்புக்கு அதிக வாய்ப்புள்ளவர்களாக இருக்கின்றனர். எனவே, அதற்கான தீர்வுகளை யோசிக்க வேண்டிய தேவை பற்றித்தான் இப்போது அழுத்தமாக விவாதிக்க வேண்டும்.

ஆரம்பத்தில், ‘இது சதிச் செயல்’ என்பதுபோல திசைத் திருப்பப் பார்த்த மாநில அரசு நிர்வாகம், வேறு வழியில்லாமல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த நிர்வாகிகளின் பொறுப்பின்மையை ஒப்புக்கொண்டிருக்கிறது. அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த பிரச்னைக்கும் காரணமான சாமியார் மீது துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை. புகழ் வந்தால் தன் தலையில் மட்டுமே ஏற்றிக்கொள்ளும் தலைமை… குறை எனும்போது தொண்டர்களைக் கைகாட்டி ஒதுங்கிக்கொள்ளும் பொதுவான கிரிமினல் புத்தியே இங்கேயும் வெளிப்பட்டிருக்கிறது.

‘80,000 பேர் கூடுவார்கள்’ என்று அனுமதி பெறப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் கூடியதை கண்காணிக்கத் தவறியது, அரசு நிர்வாகத்தின் தோல்வியே. சாமியாரின் காலடி மண்ணை எடுப்பதற்காக ஏற்பட்ட தள்ளுமுள்ளுகள்தான் உயிர்ப்பலிகளுக்குக் காரணம்.

வழக்கம்போல விசாரணைக் குழு, வழக்கு என எல்லாமும் ஆரம்பமாகிவிட்டன. ஆனால், விசாரணைகளும், அறிக்கைகளும் சம்பிரதாயமாகிவிட்ட சூழலில், அதைத் தாண்டிய செயல்பாடுகளே இப்போது அவசியம். எந்த மதம் சார்ந்ததாக இருந்தாலும், ஆன்மிகம் என்கிற பெயரால் நடத்தப்படும் கூட்டங்களில் பெண்கள் அதிக அளவில் கலந்துகொள்வதில் உள்ள உளவியல், சமுதாய சிக்கல்கள் மற்றும் விழிப்பு உணர்வின்மை பற்றி அரசுகள் கவனத்தில்கொண்டு, தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

கூட்டத்தில் எதிர்பாராமல் ஏற்படும் தள்ளுமுள்ளுவில் இருந்து… போக்குவரத்து நெரிசல் வரை அனைத்தும் நிர்வாகக் குறைபாட்டால் ஏற்படும் தவறுகளே. ஆனால், எல்லா கூட்டங்களிலும் தவறாமல் நடைபெறும் குற்றம்… கும்பல் மனப்பான்மை தரும் தைரியத்தால், பெண்கள் மீது ஆண்கள் நடத்தும் பாலியல் வன்முறைகள்தான். புத்தாண்டு இரவுக் கொண்டாட்டங்கள், ஹேப்பி ஸ்ட்ரீட் போன்ற மகிழ்வு நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல… அரசியல், கலை, இலக்கியம், கல்வி என எந்தக் கூட்டமாக இருந்தாலும் இந்த வக்கிரத்துக்கு விதிவிலக்கில்லை.

எந்த ஒரு கூட்டத்திலும் பதற்றம், ஆபத்து வெடிக்கும் புள்ளி… நாம் கணிக்க முடியாததுதானே தோழிகளே. எனவே, நம் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத கூட்டங்களைக் கையாள இயன்றவரைக் கற்போம். சாத்தியமில்லாத சூழலில், அத்தகையக் கூட்டங்களை அறவே தவிர்ப்போம்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்