வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை என்ற கருத்திற்கு, ஓலா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் மீண்டும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஆனால், இத்தகைய பணிச்சுமை அகால மரணத்திற்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, கடந்தாண்டு தெரிவித்த ஒரு கருத்து, பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது. அதாவது, வயது குறைந்த பணியாளர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். நாராயண மூர்த்தியின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன.
நாராயணமூர்த்தியின் கருத்தை ஆதரிக்கும் வகையில் ஓலா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி பவிஷ் அகர்வால், வாரத்திற்கு 70 மணி நேரம் என்ற கருத்தை ஆதரிப்பதாகக் குறிப்பிட்டார்.
இதுகுறித்து பவிஷ் அகர்வால் கூறும்போது, “தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு இத்தகைய தீவிரமான வேலை நேரம் அவசியம். வாரம் 70 மணி நேரம் பணி செய்ய வேண்டுமென்று நாராயணமூர்த்தி கூறியபோது, நான் அதற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்திருந்தேன்.
எனது இந்தக் கருத்திற்காக சமூக வலைதளங்களில் நான் ட்ரோல் செய்யப்பட்டிருந்தேன். ஆனால், அதுபற்றி நான் கவலைப்படவில்லை. ஏனென்றால், ஒரு தலைமுறையாவது இத்தகைய தவம் செய்ய வேண்டும் என்று வலுவாக நம்புகிறேன். இதன்மூலம், உலகின் நம்பர் 1 பொருளாதார நாடாக நாம் உருவாக முடியும்.
வேலை- வாழ்க்கை சமநிலை என்ற கருத்தை நான் ஏற்கவில்லை, ஏனென்றால் வேலையை ஒருவர் அனுபவித்துச் செய்தால் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியைக் காணமுடியும்” என்றார்.
அதே நேரம், வாரத்திற்கு 70 மணி நேரம் என்ற கருத்தை மருத்துவ உலகம் திட்டவட்டமாக நிராகரிக்கிறது. நீண்ட நேரம் வேலை செய்வது பல தீவிர நோய்கள் மற்றும் அகால மரணத்துடன் தொடர்புடையது என்று டாக்டர் குமார் தனது சமூகவலைதளப்பதில் குறிப்பிட்டுள்ளார்.
அவர், ” ஒவ்வோர் ஆண்டும், 8 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளுக்கு, வாரத்திற்கு 55 மணி நேரத்திற்கு அதிகப்படியான வேலை நேரம் காரணமாகிறது. இது தீவிரமான சுகாதார தாக்கங்களை ஏற்படுத்துகிறது. உடல் பருமன், டைப் 2 நீரிழிவு போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கிறது. நிறுவனங்கள் தங்களது லாபத்தை அதிகரிப்பதற்காக, ஊழியர்களின் நல்வாழ்க்கையோடு விளையாட நினைக்கும் போக்கு கவலைக்குரியது” என்றார்.
சிறந்த வேலை மற்றும் வாழ்க்கை சமநிலைக்கு, பணியாளர்கள் மீது அக்கறையுள்ள மற்றும் நியாயமான வேலை நேரத்தைப் பரிந்துரைக்கும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதே நமது நலனுக்கு உகந்தது என்று டாக்டர் குமார் மேலும் தெரிவிக்கிறார்.
வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை என்ற யோசனையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இதில் உள்ள நன்மை, தீமை என்று எதைக் கருதுகிறீர்கள்? கமென்டில் பதிவிடலாமே!