பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடவைத்து, அடிமைப்படுத்தியதற்காகப் பிரேசிலின் முன்னாள் மாடலும், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட உடல் ஆரோக்கிய இன்ஃப்ளுயன்ஸருமான கேட் டோரஸ் (Kat Torres) என்பவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 2022-ல் கேட் டோரஸிடம் வேலைக்குச் சென்ற இரண்டு பெண்கள் காணாமல் போன வழக்கில் அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்பான FBI மேற்கொண்ட விசாரணை மூலம், மனித கடத்தல், பெண்களை அடிமைப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் போன்ற சட்டவிரோத செயல்களை கேட் டோரஸ் செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.
ஒரு காலகட்டத்தில் ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவுடன் (Leonardo DiCaprio) டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்பட்டவர் கேட் டோரஸ். அதோடு, பிரேசிலின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி வந்ததன் மூலம் பிரபலமடைந்த கேட் டோரஸ், தனக்கு ஆன்மிக சக்திகள் இருப்பதாக இவரே பல இடங்களில் கூறியிருக்கிறார். கேட் டோரஸின் குடியிருப்புவாசிகள் அவரை பற்றி கூறிய தகவல்களின்படி, அவரின் ஹாலிவுட் நண்பர்கள் ஒரு வகை மயக்க மருந்தை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதைப் பயன்படுத்தி தன்னை வாழ்க்கை முறை பயிற்சியாளராகவும், ஹிப்னாடிஸ்டாகவும் (hypnotist) காட்டிக்கொண்ட கேட் டோரஸ், உடல்நல ஆரோக்கிய வலைதளப் பக்கத்தை உருவாக்கி, அதற்கு சந்தா சேவையையும் உருவாக்கி தனது வாடிக்கையாளர்களிடம் அன்பு, பணம், தன்னம்பிக்கை வளர்ப்பதாகக் கூறியிருக்கிறார்.
பின்னர், இது தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் வீடியோக்களைத் தயாரித்து, ஒரு வீடியோ ஆலோசனைக்கு 150 டாலர் என ஒவ்வொருவரிடமும் வசூலித்திருக்கிறார். இவற்றையெல்லாம் நம்பி ஏமாந்த அனா (Ana) என்ற பெண், 2019-ல் கேட் டோரஸின் நேரடி உதவியாளராக வேலை செய்ய நியூயார்க்கிற்குச் சென்றிருக்கிறார். குழந்தைப் பருவத்தில் தனக்கு நேர்ந்த வன்முறைகள் மற்றும் மோசடியான ரிலேஷன்ஷிப் போன்றவற்றிலிருந்து வெளிவர வேண்டும் என்ற நம்பிக்கையில் கேட் டோரஸிடம் வேலைக்குச் சேர்ந்த அனாவுக்கு அவர் எதிர்பார்ப்புக்கு மாறாகவே நடந்தது. சில மணிநேர உறக்கம், சம்பளம் தராமல் கொடுமைப்படுத்துதல் போன்றவைகளை அனா சந்தித்தார்.
பின்னர், எப்படியோ கேட் டோரஸிடமிருந்து தப்பித்த அனா, அவரைப் பற்றிய உண்மைகள் வெளிவந்த நிலையில் தான் சிக்கியது குறித்து தனியார் ஊடகத்திடம், “பத்திரிகைகளின் அட்டைப்படத்தில் கேட் டோரஸ் காணப்பட்டார். லியோனார்டோ டிகாப்ரியோ போன்ற பிரபலங்களுடனும் அவர் காணப்பட்டார். நான் பார்த்த இவையனைத்தும் எனக்கு நம்பத்தகுந்ததாகத் தோன்றியது. அவரிடம் எனக்கு நேர்ந்ததைப் பார்க்கையில் அவர் என்னை அடிமைப்படுத்தியிருந்தார் என்று புரிகிறது” என்று கூறினார். அனா அங்கிருந்து வெளியேறிய பிறகு, டிசைர் (Desirre) மற்றும் லெட்டிசியா (Leticia) ஆகிய இருவரை கேட் டோரஸ் பணியமர்த்த அவர்களுடன் டெக்சாஸிலுள்ள ஒரு வீட்டுக்கு குடிபெயர்ந்தார்.
அங்கு சென்ற சில வாரங்களில், டிசைர் அங்குள்ள ஸ்ட்ரிப் கிளப் (strip club) ஒன்றில் ஆபாச நடனமாட கேட் டோரஸால் கட்டாயப்படுத்தப்பட்டார். அந்தப் பெண்கள் தங்களுக்குள் பேச அனுமதி மறுக்கப்பட்டது. குளியலறைக்குச் செல்வது, தங்கள் அறைகள் விட்டு வெளியேறுவது என அனைத்துக்கும் அனுமதி கேட்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். ஒருகட்டத்தில், பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு டிசைரை கேட் டோரஸ் கட்டாயப்படுத்தினார். இவ்வாறிருக்க, கடந்த செப்டம்பரில் இந்த இரு பெண்களின் நண்பர்களும் குடும்பத்தினரும் அவர்களைக் கண்டுபிடிக்க சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாகப் பதிவிடத் தொடங்கினர்.
இதையறிந்த கேட் டோரஸ், ஊடகங்களின் கவனத்திலிருந்து தப்பிக்க அந்தப் பெண்களுடன் டெக்சாஸிலிருந்து மைனேக்கு (Maine) சென்றார். அதோடு, தாங்கள் சிறைபிடிக்கப்படவில்லை என அந்த பெண்களையே வீடியோவும் பதிவிட வைத்தார். இவ்வாறான சூழலுக்கிடையில், கடந்த நவம்பரில் கேட் டோரஸ் ஒருவழியாக கைதுசெய்யப்பட்டார். தற்போது, இதில் FBI-ன் விசாரணை முடிவில் கேட் டோரஸுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இன்னொருபக்கம், கேட் டோரஸால் தாங்களும் பாதிக்கப்பட்டதாக தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைத் தெரிவிக்கும் வகையில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் தாமாக முன்வந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும், தங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களிலிருந்து மீள மனநல சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.