Modi – Putin: நெருக்கம் காட்டும் மோடி – புதின்… கடுகடுக்கும் மேற்குலக நாடுகள் – பின்னணி என்ன?!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதித்திருப்பதோடு ரஷ்யாவை உலக அரங்கிலிருந்து தனிமைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன. இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்ற இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் ஒட்டி உறவாடியதோடு, பல்வேறு ஓப்பந்தங்களிலும் கையெழுத்திட்டிருப்பது மேற்குலக நாடுகளை அதிருப்தியிலும் ஆத்திரத்திலும் ஆழ்த்தியிருக்கின்றன.

இந்திய பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின்

கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்தது. இரண்டாண்டுகளாக போர் நீடித்துவரும் நிலையில், அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடனாக வர்த்தக உறவை முற்றிலும் துண்டித்திருக்கின்றன. பொருளாதாரத் தடை விதித்ததன் மூலம் ஏற்றுமதி இறக்குமதி இல்லாமல் போயிருக்கின்றன. மேலும், உக்ரைன் – ரஷ்ய போரில் உக்ரைனுக்கு ஆதரவாகவும் ரஷ்யாவுக்கு எதிராகவும் ஆயுத உதவிகளை வழங்கிவருகின்றன. அதேநேரம் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவுடனா உறவை பேணிக்காத்து வருகிறது. அமெரிக்கா கண்டனம் தெரிவித்தபோதும், ரஷ்யாவுடனான கோதுமை மற்றும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா கைவிடவில்லை. குறிப்பாக போர்க்காலத்தில்தான், ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்த கச்சா பொருட்களின் மதிப்பு 13% அதிகரித்தது. 2023-24 ஆண்டுகளில் மட்டும் ரஷ்யா- இந்தியா இடையே சுமார் 5.3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் அதிகரித்திருக்கிறது.

இந்தநிலையில்தான், கடந்த ஜூலை 8-ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பின் பேரில் 22-வது இந்திய-ரஷ்ய வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். தலைநகர் மாஸ்கோவில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதையடுத்து தனது அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வந்த பிரதமர் மோடியை கட்டியணைத்து ஆரத்தழுவி வரவேற்றார் ரஷ்ய அதிபர் புதின். மேலும், தனது பண்ணை வீட்டுக்கு மோடியை காரில் அழைத்துச்சென்ற புதின் அவருக்கு பிரத்யேக விருந்துவைத்து உபசரித்தார். பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புகழ்ந்து பேசி உரையாடிக்கொண்டனர். இந்த காட்சிகளெல்லாம் ஊடகங்களில் வெளியாக, அமெரிக்க – ஐரோப்ப மேற்குலக நாடுகள் எதிர்ப்பை வெளிக்காட்டுக்கொள்ளாமல் பல்லைக்கடித்துக்கொண்டு தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக்கொண்டன.

இந்திய பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின்

ஆனால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “இன்று உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதில் மூன்று குழந்தைகளும் அடக்கம். மேலும், 170 பேர் காயமடைந்திருக்கின்றனர். தவிர, உக்ரைனில் அமைந்திருக்கும் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தியிருக்கிறது. பலர் இடிபாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். இளம் புற்றுநோயாளிகள் தான் அவர்களின் இலக்காக இருக்கிறது. இதேநாளில், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் (மோடி), உலகின் மிகப்பெரிய கொடுங்கோன்மை குற்றவாளியை(புதின்) மாஸ்கோவில் கட்டி அணைப்பதை பார்க்கும் போது, அமைதி முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுப்பதைப்போல அமைந்திருக்கிறது!” என தனது எக்ஸ் வலைதளத்தில் புகைப்படங்களுடன் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

அதேசமயம் ஐரோப்பிய நாடுகளின் சில தலைவர்கள் மோடி – புதினின் சந்திப்பை மறைமுகமாக விமர்சித்துப் பேசியிருக்கின்றனர். இதற்கிடையில், இந்திய பிரதமர் மோடிக்கு, ரஷ்யாவின் மிக உயரிய விருதான `ஆர்டர் ஆஃப் செயின்ட் அண்ட்ரூ தி அப்போஸ்தலர்’ விருதை வழங்கி கௌரவித்திருக்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட மோடி, “இந்த விருது 140 கோடி இந்தியர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இது அவர்களுக்கான கௌரவம்!” என்று பேசினார்.

இந்திய பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின்

இதையடுத்து, ரஷ்யா – இந்தியா இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மாஸ்கோவில் கையெழுத்தாகியிருக்கின்றன. இதுகுறித்து இந்திய பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரைவுபடுத்தவும், வளர்ச்சியை நிலைநிறுத்தவும் 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் இருதரப்பு வர்த்தக இலக்கை நிர்ணயிக்க இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். 2030-ஆம் ஆண்டு வரை ரஷ்ய-இந்திய பொருளாதார ஒத்துழைப்பின் நம்பிக்கைக்குரிய பகுதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை தயாரிப்பது, இந்தியாவுக்கு நீடித்த உரங்களை வழங்குவதற்கான ஒத்துழைப்பைத் தொடர்வது, இந்தியாவுக்கு கோக்கிங் நிலக்கரி விநியோகத்தை மேலும் அதிகரிப்பது, ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு ஆந்த்ரசைட் நிலக்கரியை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளைக் கண்டறிவது, தொலைத்தொடர்புகள், செயற்கைக்கோள் தகவல்தொடர்புகள், பொது நிர்வாகம் மற்றும் நகர்ப்புற சுற்றுச்சூழலை டிஜிட்டல்மயமாக்குதல், செல்பேசி தகவல் தொடர்புகள், தகவல் பாதுகாப்பு உள்ளிட்ட தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது என பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது, ரஷ்யா ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட இந்தியர்களை மீட்பது, இந்தியா – ரஷ்யா இடையே மின்னணு விசாவை அறிமுகப்படுத்துவது உட்பட விசா நடைமுறைகளை எளிமைப்படுத்துவது, கூடங்குளத்தில் மீதமுள்ள அணுமின் நிலைய கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இருதரப்பும் வரவேற்றதுடன், பொருட்களை வழங்குவதற்கான காலக்கெடு உட்பட கால அட்டவணையைப் பின்பற்றவும் ஒப்புக் கொண்டன. விண்வெளித் துறையில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு மற்றும் ரஷ்ய அரசு விண்வெளிக் கழகம் இடையேயான மேம்பட்ட ஒத்துழைப்பை உருவாக்குவது, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ், ரஷ்ய தயாரிப்புக்கான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புத் தளவாடங்களைப் பராமரிப்பதற்காக உதிரி பாகங்களை இந்தியாவில் கூட்டாக உற்பத்தி செய்வது என பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கும் பரஸ்பரம் ஒப்புதல் வழங்கப்பட்டன. மேலும், இந்திய அரசின் தொழில் வழித்தடத் திட்டத்தின்கீழ், பசுமை தொழில் நகரங்களில் உற்பத்தி வசதிகளை அமைக்குமாறு ரஷ்ய தொழிலதிபர்களுக்கு இந்திய தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின்

இறுதியாக பிரதமர் மோடி, 2025-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள இந்திய-ரஷ்ய வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்வுகளை மேற்குலக நாடுகள் துளியும் ரசிக்கவில்லை. அதேநேரம் இந்தியாவுடனான நட்பை கருத்தில்கொண்டு ஆத்திரத்தை அடக்கி வைத்திருக்கின்றன. இந்த நேரத்தில் ரஷ்யாவுடன் இந்தியா கைகுலுக்குவது அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு எரிச்சலைத் தரும் என்பதை பிரதமர் மோடி நன்கு அறிந்துவைத்திருந்தாலும், இந்தியாவின் தனிப்பட்ட அரசியல் நலன்கள் மற்றும் இறையாண்மையை விட்டுக்கொடுக்காமல், பாரம்பர்யமான இந்திய – ரஷ்ய உறவை தொடர்ந்து நீட்டித்துவருவதில் கடந்த பிரதமர்களைப்போலவே உறுதியாக செயல்பட்டுவருவதாக உலக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். உலக நாடுகளே எதிர்த்தாலும் ரஷ்யா உடனான உறவை துண்டித்துக்கொள்ளாமல் மேலும் இணக்கமாக செல்வதற்கு இந்தியாவிடம் நிறைய காரணங்கள் இருக்கின்றன.

ரஷ்யா – இந்தியா 22-வது உச்சி மாநாடு

இந்தியா – ரஷ்யா இடையேயான நட்பு இன்று நேற்று தொடங்கியது அல்ல. சுதந்தர இந்தியாவின் தொடக்க காலம் தொட்டே ரஷ்யா பல்வேறு வகைகளில் இந்தியாவுக்கு உறுதுணையாக இருந்து வந்திருக்கிறது. பிரதமர் நேருவின் ஆட்சிக்காலத்தில் ரஷ்யாவின் துணையோடு பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டன. குறிப்பாக, இந்தியாவின் விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு அமெரிக்கா உதவ மறுத்தபோது ஓடிவந்து உதவியது ரஷ்யாவான சோவியத் யூனியன்தான். அதேபோல, இந்தியாவில் மிகப்பெரிய எஃகு உற்பத்தி ஆலைகளைத் தொடங்கியது, ஏராளமான அணுமின் நிலையங்களைத் திறந்தது அனைத்தும் ரஷ்யாவின் உதவியுடன்தான் சாத்தியமானது. தொடர்ந்து சீனா – இந்தியா போரின் போதும், பாகிஸ்தான் – இந்தியா போரின்போதும் பல்வேறு வகைகளில் இந்தியா பக்கம் ரஷ்யா நின்றது.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் அமைதி உடன்படிக்கையான தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின் பின்னணியிலும் ரஷ்யா இருந்தது. இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் பஞ்சம் நிலவியபோது ரஷ்யா கோதுமைகளை கொடுத்து உதவியது. அனைத்துவகையான அதிநவீன ராணுவ ஆயுதங்கள், போர்க்கப்பல்கள் ரஷ்யாவிடமிருந்தே இந்தியா இறக்குமதி செய்தது. இதேபோல தொடர்ந்து, தொலைத்தொடர்பு, பாதுகாப்பு, ராணுவம், விண்வெளி, பொருளாதாரம் என பல்வேறு துறைகளிலும் இருநாடுகளும் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தங்களுக்கிடையில் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன.

இந்திய பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின்

தற்போது, உக்ரைன் – ரஷ்யா போரின் போது, உலகின் பல்வேறு நாடுகளும் ரஷ்யாமீது பொருளாதாரத் தடை விதித்து, ரஷ்யப் பொருட்களை புறக்கணத்து, ரஷ்யாவுடனான வர்த்தக உறவை முறித்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியா மட்டும் தொடர்ந்து ரஷ்யாவுடன் சுமூகமான உறவை தொடர்து தக்கவைத்துக்கொண்டே இருக்கிறது. அமெரிக்காவின் நட்பு நாடுகள் எத்தனை அழுத்தம் கொடுத்தாலும் அணிசேராக் கொள்கையைப் பின்பற்றிவரும் இந்தியா, ரஷ்யாவுடன் தனது உறவை எப்போதும்போல பேணிக்காத்துவரும் என்கிறார்கள் உலக அரசியல் நோக்கர்கள்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88