“தொகுதி மக்கள் என்னை காணவேண்டுமென்றால் ஆதார் அவசியம்” – கங்கனா ரனாவத் பேச்சும் விளக்கமும்

பாலிவுட் நடிகையும், பா.ஜ.க-வின் இமாச்சல் பிரதேச மாண்டி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், தனது தொகுதி மக்கள் தன்னை சந்திக்க வந்தால் ஆதார் கார்டுடன் தான் வரவேண்டும் எனக் கூறியது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் மாண்டி தொகுதிக்கு சென்ற கங்கனா ரனாவத்,“நான் என் அலுவலகத்தில் எப்போதும் இருப்பேன். எனவே, மாண்டி தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்னை சந்திக்க வந்தால் கட்டாயம் ஆதார் கார்டுடன் வரவேண்டும்.

கங்கனா ரனாவத்

நீங்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க, தொகுதி தொடர்பான உங்கள் வேலைகளையும், நீங்கள் என்னக் கோரிக்கையை கொண்டுவந்திருக்கிறீர்கள் என்பதையும் கடிதத்தில் எழுதி கொடுக்க வேண்டும். உள்ளூர் பஞ்சாயத்து அல்லது சட்டசபை பிரச்னைகளைவிட, தேசிய அளவிலான பிரச்னைகளைத் தீர்ப்பதே எம்.பி.யாக எனது பொறுப்பு. ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக எனது எல்லைக்குள் வரும் பிரச்னைகளை மட்டுமே என்னிடம் கொண்டு வருமாறு வலியுறுத்துகிறேன். அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்னைகளை நோக்கி செயல்படுவதையே விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டார்.

கங்கனா ரனாவத்தின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இமாச்சல் காங்கிரஸ் தலைவர் விக்ரமாதித்ய சிங், “ஒரு பொதுப் பிரதிநிதி தனது நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த மக்களிடம் தன்னைச் சந்திக்க விரும்பினால், ஆதார் அட்டையைக் கொண்டு வர வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது சரியான அணுகுமுறையுமல்ல, ஏற்புடையதுமல்ல” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கங்கனா ரனாவத்தின் பேச்சு வைரலானதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,“சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதால், சாமானியர்கள் நிறையச் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

கங்கனா ரனாவத்

இமாச்சலின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்னைச் சந்திக்க விரும்பினால், மணாலியில் உள்ள எனது வீட்டிற்கு நேரடியாக வரலாம். மண்டியில் உள்ளவர்கள் அங்குள்ள எனது எம்.பி அலுவலகத்திற்கு வரலாம். இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகிறார்கள். இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்கூடாது என்பதற்காகவே ஆதார் எடுத்து வர சொல்கிறேன். மேலும், உங்கள் கோரிக்கை குறித்துத் தனிப்பட்ட முறையில் என்னைச் சந்திப்பதும் நல்லதுதான்” என விளக்கமளித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88