தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போடியிட்டு எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கபட்ட முரசொலி, சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். கடந்த மூன்று தினங்களாக மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தி.மு.க நிர்வாகிகளுடன் சென்று நன்றி தெரிவித்து வருகிறார். இந்நிகழ்ச்சியில் எம்.பி சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற பொதுக்குழு உறுப்பினரான காஞ்சிதுரையின் ஆதரவாளர்கள் பத்துக்கும் மேற்பட்ட கார்களில் அரிவாள், உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். இதையறிந்த மன்னார்குடி டி.எஸ்.பி அஸ்வத் ஆண்டோ, கார்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தியிருக்கும் சம்பவம், மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தி.மு.க தரப்பில் சிலரிடம் பேசினோம். “தேர்தலுக்கு முன்பு முரசொலி மன்னார்குடியில் பிரசாரம் செய்தபோது ராஜகோபாலபுரத்தை சேர்ந்த மாவட்ட பிரதிநிதியான பாசறை ராஜேந்திரன், முரசொலிக்கு பிரசாரத்திற்கான சுர்றுப்பயணத்திட்டத்தை போட்டுக்கொடுத்தார். மன்னார்குடி மத்திய ஒன்றிய செயலாளரான சித்தேரி சிவா, ராஜேந்திரன் திட்மிட்ட பயணத்திட்டத்தை மாற்றினார். சித்தேரி சிவாவின் நெருங்கிய உறவினரான பொதுக்குழு உறுப்பினர் காஞ்சிதுரை. இவருக்கும், ராஜேந்திரனுக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது.
அதனால் சித்தேரி சிவா மூலம் காஞ்சிதுரை பயணத்திட்டத்தை மாற்றிவிட்டதாக ராஜேந்திரன் கருதினார். அந்த ஆத்திரத்தில் காஞ்சிதுரை மீது ராஜேந்திரன் தரப்பு தாக்குதல் நடத்தினர். இப்பிரச்னையில் முக்கிய நிர்வாகிகள் தலையிட்டு அப்போதைக்கு சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் எம்.பி-யான பிறகு முரசொலி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். மன்னார்குடியில் மத்திய ஒன்றிய பகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிர்வாகிகளுடன் நன்றி சொல்லி வந்தார். இதே போல் ராஜகோபாலபுரத்திற்கு சென்றார். அப்போது மீண்டும் ராஜேந்திரன் தரப்பு தன்னை தாக்குவார்கள் என்பதால் எம்.பி முரசொலி கார் பின்னால் அணிவகுத்து சென்ற காஞ்சிதுரை தன் ஆதரவாளர்களுடன் அரிவாள், உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் பதிலுக்கு தாக்குவதற்காக எடுத்து சென்றுள்ளார்.
இதையறிந்த ராஜேந்திரன், டி.ஆர்.பாலு உறவினரான இளவரசனிடம் காஞ்சிதுரை ஆயுதங்களுடன் வரும் தகவலை சொல்லியுள்ளார். இளவரசன் இதை மன்னார்குடி டி.எஸ்.பி. அஸ்வத் ஆண்டோவிடம் தெரிவித்துள்ளார். உடனே போலீஸாருடன் சென்ற டி.எஸ்.பி வடபாதியில் முரசொலி பின்னால் சென்ற கார்களை மறித்து, சோதனை செய்ததில் ஆயுதங்கள் இருந்தது தெரிந்தது. இது குறித்து தி.மு.க-வினரிடம் கேட்டுள்ளார். அப்போது முரசொலி எம்.பி, இது உள்கட்சி பிரச்னை நாங்கள் பார்த்து கொள்கிறோம் பெரிதாக்க வேண்டாம் என டி.எஸ்.யிடம் வலியுறுத்தியதாக சொல்லபடுகிறது.
ஆனாலும் காரில் வந்தவர்களையும், கார்களையும் பறிமுதல் செய்து தலையாமங்கலம் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார். பறிமுதல் செய்த கார்களை ஸ்டேஷனிலேயே நிறுத்தி வைத்துள்ளார். கார்கள் யாருடையது, முறையான ஆவணங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்த பிறகு கார்களை விடுவிப்பதாக தி.மு.க நிர்வாகிகளிடம் டி.எஸ்.பி தெரிவித்துள்ளார்” என்றனர். இந்த சம்பவம் மன்னார்குடி அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஒன்றிய செயலாளர் சித்தேரி சிவாவிடம் பேசினோம். “தேர்தல் பிரசாரத்தின்போது ராஜேந்திரன் தரப்புக்கும், காஞ்சிதுரை தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. தற்போதும் ராஜேந்திரன் தாக்குவார் என கருதியதால் தன் ஆரவாளர்களுடன் ஆயுதங்களை எடுத்து வந்துள்ளார். போலீஸ் வந்து காரில் வந்தவர்களை அழைத்து சென்றனர். கார்களையும் பறிமுதல் செய்தனர். நாங்களும் இது குறித்து பேசிவிட்டோம். மற்றபடி பிரச்னை ஒன்றும் இல்லை” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb