Kerala பத்மநாப சாமி கோயில் அலுவலகத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஊழியர்; சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்

பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்மநாபாசுவாமி கோயில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் படுத்த நிலையில் அனந்தபத்மநாபனாக சுவாமி காட்சிதருகிறார். மூன்று வாசல்கள் வழியாக சுவாமியை தரிசிக்கும் வகையில் கருவறை அமைந்துள்ளது. இந்த கோயிலின் ரகசிய அறையில் பொக்கிஷங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, உலக பிரசித்தி பெற்றது. மேலும் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள் மொபைல் போன், டிஜிட்டல் வாட்ச் உள்ளிட்டவை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. திருவிதாங்கூர் மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய ஸ்ரீபத்மநாப சுவாமிக்கு ஆசார முறையில் பூஜைகள் நடத்தப்பட்டுவருகின்றன. பக்தர்கள் பாரம்பர்ய உடை அணிந்துதான் கோயில் வளாகத்துக்குள் செல்லமுடியும்.

திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமி கோயில்

கோயிலை ஒட்டி வெளிப்புறம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோயில் அலுவலக வளாகத்தில் அதிகாரி ஒருவர் அசைவ உணவு சாப்பிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது குறித்து விசாரித்ததில் டிரைவர் பணியில் உள்ள ஊழியர் ஒருவர் மற்ற ஊழியர்களுடன் அமர்ந்து சிக்கன் பிரியாணி சாப்பிட்டது தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக தெளிவற்ற வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியானது. கோயில் சம்பந்தப்பட்ட எந்த இடங்களிலும் அசைவ உணவுகள் பயன்படுத்தக் கூடாது என ஏற்கெனவே தந்திரி அறிவித்திருந்தார். இந்த நிலையில் கோயில் மதிலகம் அலுவலக வளாகத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் கோயில் தந்திரி தரணநல்லூர் நம்பூதிரிப்பாடு மற்றும் கவடியார் கொட்டார அதிகாரிகளும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமி கோயில்

விஸ்வ இந்து பரிஷத் மற்றும் இந்து ஐக்கியவேதி அமைப்புகளும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆட்சிமன்றக் குழு முடிவு எடுக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கோயிலில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரும் நிர்வாகக் குழுவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb