`உக்ரைன் மீது படையெடுத்தால், NATO உடைந்துவிடும் என புதின் எதிர்ப்பார்த்தார் ஆனால்…’- பைடன் காட்டம்

கடந்த திங்கள்கிழமை பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக ரஷ்யா சென்றிருந்தார். அதே தினம் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. அதில், குழந்தைகள் மருத்துவமனை, உள்ளிட்ட கட்டடங்கள் சேதமானது. குறிப்பாக புற்றுநோய்க்காக சிகிச்சைப்பெற்றுவந்த குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சுமார் 40 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

மோடி – புதின்

வருடக்கணக்கில் தொடரும் உக்ரைன் – ரஷ்யா போரில், குழந்தைகள் மருத்துவமனை தாக்கப்பட்டதற்கு உலக நாடுகளுக்கு மத்தியில், ரஷ்யா மீது கடும் கண்டனங்கள் எழுந்தன. இதற்கிடையில், அமெரிக்காவில் அடுத்த மாதம் 5-ம் தேதி அதிபா் தோ்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்துவரும் நிலையில், ஜோ பைடன் – டொனால்ட் ட்ரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் இரு தலைவர்களுக்கும் நடந்த விவாத நிகழ்ச்சியில், ஜோ பைடன் தடுமாறி பேசியதும், ட்ரம்ப்பின் குரல் ஓங்கியிருந்ததும், ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடுவதற்கான உடல் தகுதி குறித்து சா்ச்சை எழுந்தது. அதிபா் போட்டியிலிருந்து பைடன் விலக வேண்டுமென அவரது ஜனநாயகக் கட்சியிலிருந்தே குரல்கள் எழுந்தன. இந்த நிலையில்தான், நேட்டோ அமைப்பின் தலைவர்கள் அமெரிக்காவின் வாஷிங்டனில் உச்சி மாநாட்டை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

ஜெலன்ஸ்கி – ஜோ பைடன்

நேட்டோ அமைப்புக்கான அமெரிக்க தலைமையை மீண்டும் நிறுவும் வகையிலும், அதிபராகும் தகுதி தனக்கு இருப்பதை உறுதிபடுத்தும் வகையிலும், நேட்டோ அமைப்பின் மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் 5 வான்பாதுகாப்புத் தளவாடங்களை வழங்கும். அடுத்த ஆண்டில் கூடுதலாக நூற்றுக்கணக்கான ஏவுகணைத் தளவாடங்கள் உக்ரைனுக்குக் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து உக்ரைன் நகரங்களையும், உக்ரைன் வீரா்களையும் பாதுகாப்பதற்காக இந்தத் ஆயுதங்கள் அனுப்பப்படவுள்ளன. உக்ரைன் மீது படையெடுத்தால் இந்த நேட்டோ அமைப்பு உடைந்துவிடும் என ரஷ்யா அதிபர் புதின் எதிர்ப்பார்த்தார். ஆனால், இந்த நேட்டோ அமைப்பு முன்பைவிட பலம்வாய்ந்ததாக மாறியிருக்கிறது. போா் தொடங்குவதற்கு முன்பும், இப்போதும் சுந்ததிர நாடாக இருக்கும் உக்ரைன் இனியும் அப்படியே தொடரும்.” எனக் காட்டமாக தெரிவித்தார்.

நேட்டோ உச்சி மாநாடு – அமெரிக்கா – 2024

அதைத் தொடர்ந்து பேசிய உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கி, “அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலின் முடிவுகள் வெளியானதற்குப் பிறகு உக்ரைனுக்கு உதவியளிப்பது குறித்து முடிவடுக்கலாம் என அனைத்து நாடுகளும் கருதுகின்றன. உண்மையில் புதினும் அமெரிக்க அதிபா் தோ்தல் முடிவுத் தேதியை எதிா்பாா்த்துக் காத்திருக்கிறாா். எனவே, அனைத்து நாடுகளும், அமெரிக்க தேர்தல் முடிவுகள் குறித்து சிந்திக்காமல் உறுதியான முடிவுகளை இப்போதே எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

உண்மையில் நேட்டோ உச்சி மாநாட்டை தேர்தல் பிரசார களமாக பயன்படுத்தி, தன் அதிகாரத்தை தக்கவைத்துகொள்ளவே அமெரிக்காவின் தற்போதைய அதிபரும், அதிபர் தேர்தல் வேட்பாளருமான ஜோ பைடன் விரும்புகிறார் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.