Nitish: `காலில்கூட விழுகிறேன்’- சாலை பணி தொடர்பாக தனியார் அதிகாரியிடம் நிதிஷ்; விமர்சிக்கும் தேஜஸ்வி

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவாக அடித்தளமிட்டு, கூட்டணி உருவான பிறகு அதிலிருந்து பாதியிலேயே வெளியேறி, பின்னர் செத்தாலும் கூட்டணி கிடையாது என்று கூறிய பா.ஜ.க-விடமே மீண்டும் கூட்டணியமைத்து, இறுதியில் தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை இழந்தபோதும் கூட்டணியாட்சி அமைக்க உதவியதன் மூலம் ஊடக வெளிச்சம் பெற்றார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். அதைத் தொடர்ந்து, பீகாரில் மூன்று வாரங்களில் 13 பாலங்கள் இடிந்துவிழுந்ததன் காரணமாக கடந்த சில நாள்களாக மீண்டும் கவனம் பெற்றிருக்கிறார். இந்த நிலையில், சாலைத் திட்டத்தைக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்குமாறு, தனியார் நிறுவன அதிகாரியிடம் காலில்கூட விழுகிறேன் என கோபமாக நிதிஷ் குமார் கூறியிருப்பது, எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து விமர்சனத்தைப் பெற்றிருக்கிறது.

நிதிஷ் குமார்

முன்னதாக, ஜே.பி கங்கா பாதை சாலைத் திட்டப்பணி தொடர்பாக பாட்னாவில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர்கள் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா ​​மற்றும் உள்ளூர் எம்.பி ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் நிதிஷ் குமாரிடம், ஜே.பி கங்கா பாதையை பாட்னாவிலுள்ள கங்கன் காட் வரை விரிவுபடுத்துவதை விரைவுபடுத்துமாறு கூறினார்.

அப்போது, “உங்கள் காலில்கூட விழுகிறேன், தயவுசெய்து குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடியுங்கள்” என நிதிஷ் குமார் தனியார் நிறுவன அதிகாரியிடம் கோபமாகக் கூறி அவரை நோக்கிச் சென்றார். இதனால் பதறிய அந்த அதிகாரி, `ஐயா, தயவுசெய்து இப்படியெல்லாம் செய்யாதீர்கள்’ என்றார்.

நிதிஷ் குமார் கடந்த நாள்களுக்கு முன்பும் இதேபோல, நில பிரச்னைகளில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு விரைவாகத் தீர்க்க வேண்டும் என ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் கூறி அவரின் பாதங்களைத் தொட முயன்றார்.

இவ்வாறிருக்க நிதிஷ் குமாரின் இத்தகைய செயல்களைத் தொடர்ந்து மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், “முதல்வர் பலமற்றவராக இருக்கிறார். ஏனென்றால், அரசு அதிகாரியாக இருந்தாலும், தனியார் நிறுவன அதிகாரியாக இருந்தாலும் அனைவரின் காலிலும் விழ எப்போதும் தயாராக இருக்கிறார்” என்று விமர்சித்திருக்கிறார்.