கோவை, நெல்லையைத் தொடர்ந்து காஞ்சி மேயருக்கும் சிக்கலா… பின்னணி என்ன?!

புதிய மாநகராட்சி, பஞ்சாயத்துகளோ ஏராளம்!

புதிதாக தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் பதவி, பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. நடந்து முடிந்த தேர்தலில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் தி.மு.க. 32, அ.தி.மு.க 9, பா.ம.க 2, காங்கிரஸ், பா.ஜ.க தலா ஒரு இடங்களிலும் சுயேச்சை 6 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர். பெரும்பான்மையான இடங்களை தி.மு.க கைப்பற்றிய நிலையில், தி.மு.க தலைமை காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளரின் ஆதரவாளரும் தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளருமான யுவராஜின் மனைவி மகாலட்சுமி யுவராஜ் என்பவரை மேயர் வேட்பாளராக அறிவித்தது.

காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி

தலைமையே ஒரு வேட்பாளரை அறிவித்திருந்த போதிலும், தலைமை அறிவித்ததைத் தாண்டி தி.மு.க-வை சேர்ந்த சூர்யா என்பவரும் மேயர் தேர்தலில் போட்டியிட்டார். தி.மு.க-வினர் மகாலட்சுமிக்கு வாக்குகளைச் செலுத்த, எதிரணியிலிருந்தவர்கள் சூர்யாவுக்கு வாக்களித்தனர். ஆனாலும், கடைசியில் மகாலட்சுமி கூடுதல் வாக்குகளைப் பெற்று மேயராகப் பதவியேற்றார். கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரகுருபரன் துணை மேயராக அறிவிக்கப்பட்டார். காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேயர் தேர்தலில் தொடங்கிய சர்ச்சையும் சலசலப்பும் தற்போதுவரை அடங்கவே இல்லை.

வெடித்த சர்ச்சை – தலையிட்ட தலைமை…

மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட கண்ணன் என்பவருக்கும் மேயர் தரப்புக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்துவந்தது. ஒருகட்டத்தில் மோதல் போக்கு அதிகரிக்கக் கண்ணன் என்பவர் மாற்றப்பட்டு, செந்தில் குமார் என்பவர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். அடுத்ததாகப் புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையர் மேயருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் கவுன்சிலர்களை மதிக்கவில்லை என்றும் புதிய பிரச்னை வெடித்தது. அவரை பணியிடமாற்றம் செய்யவேண்டும் என்று தி.மு.க கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்திலிருந்து வெளியேறிய சம்பவமும் நிகழ்ந்தது.

புகார் கொடுத்த கவுன்சிலர்கள்

மாநகராட்சி ஆணையருக்கு ஆதரவாக மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம் நடத்திய சம்பவமும் நடந்துமுடிந்தது. இந்நிலையில், `மாநகராட்சி செயல்பாடுகளில் மேயரின் கணவரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. மேயரும் இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை. இதனால் எங்கள் வார்டு பணிகளை மேற்கொள்ளமுடியவில்லை’ என்று சொல்லி மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று தி.மு.க உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 30 கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் சுந்தர் கவுன்சிலர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இருந்தபோதிலும் யாரும் சமாதானமடையும் எண்ணத்தில் இல்லை. கடைசியில் தி.மு.க தலைமை இந்த பிரச்னையில் தலையிட்டது. அமைச்சர் கே.என்.நேரு புகார் தெரிவித்த கவுன்சிலர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேயர் தரப்பிலும் விளக்கம் கேட்கப்பட்டது. அனைவரிடமும் பேசி ஒற்றுமையுடன் பணியாற்றவேண்டும் என்று சொல்லி கவுன்சிலர்களும் அமைதியாகச் சென்றிருக்கிறார்கள்.

அமைச்சர் பேச்சுவார்த்தை

அமைச்சர் அழைத்து சமாதானம் செய்து அனுப்பியிருந்த நிலையில், தி.மு.க கவுன்சிலர்கள் 20 பேர் மேயரை மாற்றவில்லையென்றால் நாங்கள் ராஜினாமா செய்கிறோம் என்று மாவட்டச் செயலாளரிடம் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக பத்து கவுன்சிலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலைக்குழு உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்வதாக ஆணையரிடம் கடிதம் வழங்கியிருக்கிறார்கள். கவுன்சிலர்கள் பஞ்சாயத்தில் மாமன்ற கூட்டம் நடத்தமுடியாமல் மாநகராட்சி பணிகள் அனைத்தும் அப்படியே தேங்கியிருக்கிறது.

குப்பைமேடான காஞ்சி மாநகர்!

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் காஞ்சி தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம். “மாவட்டச் செயலாளர் சுந்தரின் ஆதரவாளரான தமிழ்செல்வன் என்பவர் மாநகர செயலாளராக நியமிக்கப்பட்டார். நடக்கும் பாதி பிரச்னைக்கு காரணம் இவர்தான். ஒவ்வொரு பணிகள் வரும்போதும் மேயர் தரப்பு இதைச் செய்தது, அதைச் செய்ததென்று மாவட்டச் செயலாளரிடமும், கவுன்சிலர்களிடம் ஏற்றிவிடும் வேலையைச் செய்கிறார். நமக்குக் குறைவாகக் கிடைக்கிறதே என்று கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள். தலைமை அழைத்துப் பேசியும் அவர்கள் சமாதானம் அடையாமல் இருப்பதற்கு தமிழ்செல்வன்தான் முக்கிய காரணம். அமைச்சர் நேரு பேசும்போது ‘தற்போதைக்கு தலைமை உங்களை மாற்றும் எண்ணத்தில் இல்லை. இப்படியே தொடர்ந்து பிரச்னை வந்தால் மாற்றவும் வாய்ப்பிருக்கிறது’ என்று மேயர் தரப்பைப் பார்த்துச் சொன்னார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி

அமைச்சர் சொன்னதைத் தொடர்ந்து பிரச்னையை கிளப்பினால் மேயரை மாற்ற வாய்ப்பிருக்கிறது என்று திட்டமிட்டே இப்படிச் செய்கிறார்கள். இந்த கவுன்சிலர்கள் பஞ்சாயத்தில் ஒரு மாதமாகியும் இதுவரை மாமன்ற கூட்டம் நடைபெறவில்லை. காஞ்சிபுரத்தில் குப்பை அகற்றுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. 800 தூய்மை பணியாளர்கள் பணியாற்றவேண்டிய இடத்தில் பாதிக்குப் பாதி பேர் கூட பணியில் இல்லை. அதேபோல, 200 குப்பை அள்ளும் வாகனங்கள் பயன்படுத்தவேண்டிய இடத்தில் பாதிக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அழகான காஞ்சி மாநகரம் தற்போது குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது. இவர்கள் சண்டையில் கடைசியில் பாதிக்கப்படுவது மக்கள் மட்டுமே” என்றார்கள் விரிவாக.

நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

ஏற்கெனவே தி.மு.க கவுன்சிலர்கள் உட்பட எதிர்க்கட்சி கவுன்சிலர்களும் இணைந்து மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்திருந்தார்கள். அமைச்சர் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த சுமுக நிலையும் ஏற்படவில்லை. இந்த சூழலில் மீண்டும் மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்றும், கோரிக்கையைத் தவிர்க்கும் வகையில் செயல்படும் ஆணையரையும் மாற்றவேண்டும் என கவுன்சிலர்கள் சிலர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த சூழலில், வரும் 29-ம்தேதி காலை 10 மணிக்கு மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் என்று அனைத்து கவுன்சிலர்களுக்கும் ஆணையர் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

மாநகராட்சி ஆணையர் கடிதம்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் கவுன்சிலர்கள் சிலரிடம் பேசினோம். “மொத்தமுள்ள 51 கவுன்சிலர்களில் 41 பேர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தால் மட்டுமே மேயர் பதவியை நீக்கம் செய்ய முடியும். தற்போதைய நிலையில், தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 33 கவுன்சிலர்கள் மேயருக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். அதேபோல, 13 பேர் மேயருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தீர்மானம் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு வாரம் காலம் இருக்கிறது. எதிர் மனநிலையில் இருக்கும் கவுன்சிலர்களை மேயர் தரப்பு தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. அதே நேரத்தில் தி.மு.க தலைமையிலிருந்தும் பேச்சுவார்த்தை நடக்கிறது. காஞ்சிபுரத்தின் முதல் மேயர் பதவியைத் தக்கவைக்க மகாலட்சுமி தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறார்” என்றார்கள் விரிவாக.

வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் கலந்து கொள்வார்களா… கலந்து கொண்டாலும் எதிராக வாக்களிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து 29-ம் தேதிதான் பார்க்கவேண்டும்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb