`அனுசுயா டு அனுகதிர் சூர்யா’ – பாலினத்தையும், பெயரையும் மாற்றிக்கொண்ட மத்திய வருவாய்த்துறை அதிகாரி

இந்தியாவின் சிவில் சர்வீசஸ் வரலாற்றில் முதன்முறையாக பெண் மத்திய கலால்வரித் துறை அதிகாரி தன் பாலினத்தையும், பெயரையும் மாற்றியிருக்கிறார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள, மத்திய கலால் வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (செஸ்டாட்) மாநில இணை ஆணையராக நியமிக்கப்பட்டவர் பெண் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அனுசுயா. 2013-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ் அதிகாரியான எம்.எஸ்.எம்.அனுசுயா, தன் பெயரையும், பாலினத்தையும் மாற்றக் கோரி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய வருவாய்த் துறையிடம் மனு அளித்திருக்கிறார்.

பாலினம்

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவில்,“ ஹைதராபாத்தில் உள்ள செஸ்டாட் தலைமை ஆணையர் (ஏஆர்) அலுவலகத்தில் தற்போது இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஆர்.எஸ் அதிகாரியான எம்.எஸ்.எம்.அனுசுயா, தனது பெயரை திருமதி எம்.அனுசுயா என்பதிலிருந்து திரு எம்.அனுகதிர் சூர்யா என்றும் பெண்ணிலிருந்து ஆண் பாலினமாக மாற்றக் கோரியிருக்கிறார். எம்.அனுசுயாவின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அனுசுயாவின் பாலினம் மற்றும் பெயரை மாற்றி திருமதி எம்.எஸ்.எம்.அனுசுயா என்பதிலிருந்து, திரு எம்.அனுகதிர் சூர்யா என அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இனி அவர் அதிகாரப்பூர்வமாக ஆண் சிவில் அதிகாரியாக கருதப்படுவார்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் 15, 2014 அன்று NALSA வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில், ‘மூன்றாம் பாலினத்தவர் மற்றும் பாலின அடையாளம் என்பது தனிப்பட்ட விருப்பம். பாலியல் தேர்வு நோக்குநிலை என்பது ஒரு தனிநபரின் நீடித்த உடல், காதல் /அல்லது உணர்ச்சிப்பூர்வமான ஈர்ப்பைக் குறிக்கிறது. பாலியல் நோக்குநிலையில் திருநங்கைகள் மற்றும் பாலின-மாறுபட்ட நபர்களும் அடங்குவர்.

உச்ச நீதிமன்றம்

ஒருவர் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை (SRS) க்கு உட்படுத்தப்படுகிறாரா இல்லையா என்பதை அவர்தான் முடிவு செய்யவேண்டும்” எனத் தீர்ப்பளித்தது. அதன் அடிப்படையில் அனுசுயாவின் மனு பரிசீலிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கு முன்னர் ஒடிசாவின் வணிக வரி அதிகாரி, ஐந்து ஆண்டு பணி செய்தபிறகு 2015-ம் ஆண்டு தனது பாலினத்தை பெண்ணாக மாற்றி ஐஸ்வர்யா ரிதுபர்ண பிரதான் எனப் பெயரிட்டுக்கொண்டார். அதுவும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88