`5 ஆண்டுகளில் 60 லட்சம் மரங்கள் மாயம்’ என்ன காரணம்? சாட்டையை எடுத்த பசுமைத் தீர்ப்பாயம்!

மரங்களையும் இந்த உலகையும் ஒருபோதும் பிரித்துப் பார்க்க முடியாது. சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணும் மரங்கள் இல்லாமல், இப்புவியில் உயிரினங்கள் இல்லை. மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள் உணவாகப் பயன்படுகின்றன. வெப்பம் போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாப்பதும் மரங்கள்தான். எண்ணற்ற பறவைகளுக்கு அடைக்கலம் கொடுப்பவை மரங்கள்தான். மரங்கள் காய்ந்த பிறகும் நமக்கு பயன்படுகின்றன. 

மரங்கள்

இந்நிலையில் ஏறத்தாழ 60 லட்சம் மரங்கள் காணாமல்  போயிருப்பதாக வெளியான செய்தி அடிப்படையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளது. தெலங்கானா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் மட்டுமே இந்தளவுக்கு மரங்கள் காணாமல் போயிருக்கின்றன. சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், வனத்துறை மற்றும் மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். டெல்லியிலுள்ள பசுமைத் தீர்ப்பாய நீதிபதிகள் பிரகாஷ் ஶ்ரீவத்சவா, அருண்குமார் தியாகி, முனைவர் செந்தில்வேல் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

சாலை விரிவாக்கம், இயற்கை பேரிடர், மனிதர்கள் தங்களின் தேவைக்காக வெட்டுதல் போன்ற பல காரணங்களால் அண்மைக்காலங்களில் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது, இயற்கை ஆர்வலர்களை மிகுந்த கவலையடையச் செய்துள்ளது.

மரம் வளர்ப்பு

இந்நிலையில் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் மட்டும் சுமார் 50 சதவிகித  மரங்கள் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது.  இந்த மூன்று மாநிலங்களில் உள்ள விவசாய நிலங்களில் 2018 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சுமார் 60 லட்சம் மரங்கள் மாயமாகி இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள பெரிய விவசாய நிலங்களில், ஏராளமான மரங்கள் காணாமல் போயுள்ளன. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக 22 மரங்கள் காணாமல் போயிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. அதேபோல், மத்தியப் பிரதேசத்தில் இந்தூர் நகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான மரங்களை காணவில்லை. 

பசுமை தீர்ப்பாயம்!

இது தொடர்பாக கடந்த மே மாதம் தகவல்கள் வெளியாகின. அந்தச் செய்தியின் அடிப்படையில், தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் வழக்கு பதிவு செய்துள்ளது.  சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் பதிலளிக்கவும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இது தொடர்பான வழக்கு, வரும் ஜூலை 31ஆம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.