“இந்தியாவைவிட அமெரிக்காவே சௌகரியமான நாடு!” – பெண்ணின் வைரல் போஸ்ட்டும் நெட்டிசன்ஸ் கருத்தும்!

இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தான் வாழ்ந்த வாழ்க்கை அனுபவத்தை வைத்து “எது ஆடம்பரமான வாழ்க்கை?” எனக் கேள்வி கேட்டிருக்கும் பெண்ணின் சமூக வலைத்தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிஹாரிகா கவுர் சோதி என்கிற இளம்பெண் தனது எக்ஸ் தளத்தில், “அமெரிக்காவில் இன்று எனது 11வது நாள். நேற்று மாலை எனக்கொரு யோசனை தோன்றியது. அதை நான் இங்கே சொல்லும்போது ஒரு சிலருக்குக் கோபம் வரலாம். ஆனால் இணையத்தில் யாரோ ஒருவரின் கருத்தைப் படித்துக் கோபப்பட்டு ஆற்றலை இழக்கிறீர்கள் என்றால், உங்கள் மன ஆரோக்கியத்தை நீங்கள் நிச்சயமாகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்பதை உணரவேண்டும்” என்று ஆரம்பித்தவர் தனது சிந்தனைகளைக் கூறியுள்ளார்.

அமெரிக்கா

அதில் இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் வேகமாக உணவு டெலிவரி, 10 நிமிடங்களில் மளிகைப் பொருள்கள் டெலிவரி, மலிவான வீட்டு வேலைக்கான மனித வளம் ஆகியவற்றையே ஆடம்பர வாழ்க்கைக்கான அடித்தளம் என்று நினைத்ததாகவும், ஆனால் உண்மையான வாழ்க்கைத் தரம் என்பது அடிப்படையான விஷயங்களான சுத்தமான காற்று, தடையில்லா மின்சாரம், தண்ணீர், பசுமையான நிலங்கள், தரமான சாலைகள் ஆகியவற்றில் இருப்பது அமெரிக்கா சென்ற பிறகே புரிந்ததாகக் கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்தவர், “சுத்தமான காற்று, நடந்து செல்ல சரியான உட்கட்டமைப்பு வசதி, தெரு நாய்கள் கடி தொல்லை இல்லாத வீதி, தாறுமாறாக எல்லா திசைகளிலிருந்து ஓடுகிற விபத்தை ஏற்படுத்துகிற வாகனமில்லாத சாலை ஆகியவை இங்கிருப்பதால் மளிகை பொருள் டெலிவரிக்கு ஆட்கள் தேவைப்படுவதில்லை. ஏனெனில் நிம்மதியாக இங்கே நாமே நடந்து சென்று பொருள்களை வாங்கிவிடலாம். அதேபோல உண்மையான ஆடம்பரம் என்னவென்றால், இங்கே மின்சாரம் இல்லாமல் 45 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சாகாமல் இருக்க உதவும் சென்ட்ரல் ஏர் கண்டிஷனிங் வசதியும், ஆண்கள் உங்களை வெறித்துப் பார்ப்பதற்குப் பதிலாக, நம் வசதிக்கு ஏற்ப விரும்பி ஆடைகளை அணியும் சுதந்திரமும்தான்” என்கிறார்.

மேலும், “காலை நேரத்து நடைப்பயிற்சி, நல்ல காற்று, பச்சை பசுமையான மேய்ச்சல் நிலங்கள், சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், ஹாரன் சத்தமில்லாத பறவைகளின் ஓசை ஆகியவை என்னுடைய வாழ்க்கைத் தரம் மற்றும் ஆடம்பரம் பற்றிய முந்தைய வரையறைகளை மாற்றியிருக்கின்றன. இதை நான் தொடர்ந்து பெறுவேனா என்பது தெரியவில்லை. ஆனால் இப்போது தோன்றிய யோசனைகள் இதுதான்” என்று பகிர்த்திருக்குகிறார்.

சுமார் ஏழு லட்சம் பார்வைகளைச் சென்றடைந்திருக்கும் இந்தப் பதிவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல கருத்துகளை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

அதில் ஒருவர் ஆதரவாக, “100 சதவிகிதம் இது உண்மை. இந்தக் கருத்தை வெளிப்படுத்தத் தைரியம் தேவை. குடிமை உணர்வு என்பது நம்நாட்டில் மிகவும் குறைவாக மதிப்பிடப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

மற்றொருவர் கருத்து தெரிவிக்கையில், “மெல்பேர்னில் 15 ஆண்டுகள் வசித்து வரும் நான், தற்காலிகமாக மும்பைக்குக் குடிபெயர்ந்துள்ளேன். எனக்கு இதில் வித்தியாசத்தைத் தெளிவாகக் காண முடிகிறது. நீங்கள் சொல்வது 100% சரிதான். மெல்பேர்னில் நாங்கள் அரிதாகவே உணவு ஆர்டர் செய்வோம். ஆனால் மும்பையில் மாசுபாடு, போக்குவரத்து நெரிசல் போன்றவற்றின் காரணமாக ஒவ்வொரு நாளும் செய்யவேண்டியிருக்கிறது” என்றார்.

இந்தியா

இதற்கு எதிராக ஒரு சிலர், “இந்தியாவின் கிராமங்களுக்குச் சென்றாலே இதுபோன்ற அமைதியான, ஆரோக்கியமான சூழல் உங்களுக்குக் கிடைக்கும். இந்திய விவசாயிகள் அமெரிக்கா, மெல்பேர்னில் இருக்கும் விவசாயிகளை விடக் குறைவானவர்களில்லை. என்ன, உங்களால் இணையத்தில் உணவை வாங்கிட முடியாது. அதே போலப் பெரிய ஐ.டி நிறுவனத்தில் கிடைக்கும் சம்பளத்தைப் பெற்றிட முடியாது” எனவும், “இந்தியாவின் எந்த நகரத்திலிருந்தும் 50 கிலோமீட்டர் தொலைவில் சென்றால் நீங்கள் இத்தகைய வாழ்க்கையை வாழலாம்” எனவும், “இரண்டு நாடுகளுக்கும் பிளஸ், மைனஸ்கள் உள்ளன. நீங்கள் பொதுவாக எல்லாவற்றையும் ஒரே இடத்தில் வைத்திருக்க முடியாது” எனவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

வாழ்க்கைத் தரம் என்பதும் ஆடம்பரம் என்பதும் தனிநபரின் வாழ்வியலைப் பொறுத்தது எனவும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.