வருடத்துக்கு இனி 272 நாள்கள் சம்மர்தான்! வட இந்தியாவைவிட இங்கு அடிக்கும் வெயில் ஆபத்தானது! ஏன்?

முன்பெல்லாம் மழைக்கு விடுமுறை வாங்குகிற காலம் போய் இப்போது வெயிலுக்கு விடுமுறை வாங்கும் நாள்கள் வந்துவிட்டன. வழக்கமாக மார்ச் இறுதியில் தொடங்கும் கோடை வெயில் இம்முறை ஜனவரியின் இறுதியிலே சுட்டெரிக்கத் தொடங்கியது நினைவிருக்கலாம்.

வெயில்தான் இவ்வளவு தீவிரம் என்றால் மழையும் ஒரு வருடத்து மலையினை ஒரே நாளில் கொட்டித் தீர்த்து நம்மைச் சோதிக்கிறது. இந்த ஜூன், ஜூலையை மறக்க முடியுமா?

இந்த வருடம் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40.4°C ஆகப் பதிவாகியிருக்கிறது. இது  இயல்பைவிட 2.3°C அதிகம். கரூர் பரமத்தியில் அதிகபட்ச வெப்பநிலை 40.2°C ஆகப் பதிவானது, இது இயல்பைவிட 3.1°C அதிகமாகும். வெப்பத்திலிருந்து தப்பிக்க மலைப்பிரதேசங்களுக்கு ஓடினால் “ஏல… தப்பிக்கவா பாக்க” என்று அங்கும் மண்டைக் காய வைக்கிறது வானிலை. ஆம், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஊட்டியில் வெப்ப நிலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. 

வெற்றிச்செல்வன்

இந்தச் சூழலில் மிகப் பிரபலமான ஆங்கில ஊடகங்களில் இந்திய வெப்பநிலையைப் பதிவு செய்யும்போது எப்போதும் தமிழக வெப்பநிலையைப் பெரிதாகக் கண்டுகொள்வது கிடையாது. வட இந்தியாவைவிடத் தென் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் வெயில் குறைவு என்கிற எண்ணத்திலிருந்துதான் இந்த முடிவுக்கு வருகிறார்கள். ஆனால் இந்த எண்ணமே ஒரு கற்பிதம்தான் என்று “தென் இந்தியாவில் வெப்ப அலைத் தாக்கம்” என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. பூவுலகின் நண்பர்களின் சார்பாக இணைய வழியில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் தலைப்பில் நீங்கள் பார்ப்பது போல அதிர்ச்சிகரமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார் வெற்றிச்செல்வன்.

“கடந்த வாரத்தில் அதிக வெப்பநிலை கொண்ட நகரத்தில் இந்தியாவில் முதல் 10 இடங்களுக்குள் ஈரோடும் சேர்ந்து எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வெயிலின் தாக்கத்தை விட வெக்கை உணர்வைத்தான் இப்போது பெரிய பிரச்னையாகப் பார்க்கிறேன். தமிழ்நாட்டில் சமீபமாகப் பல மாவட்டங்களில் இயல்பு வெப்பநிலை இயல்பைவிட 2°C முதல் 4°C வரை அதிகமாகப் பதிவாகிவருகிறது. ஆனால் இங்கே 34 – 36 டிகிரி செல்சியசில் வெயில் அடித்தாலும் அது வட இந்தியாவில் அடிக்கும் 40 டிகிரிக்குச் சமம் என்றே நான் கூறுவேன். ஏனெனில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் கடலோரத்தை ஒட்டியிருக்கின்றன. இதனால் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். ஆகையால் அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் சேர்ந்து வெக்கையான உஷ்ண உணர்வை நமக்குக் கடத்துகின்றன.

வெயில்

இது நமது உடலில் அசௌகரியத்தை உண்டாக்கி, நமது உடலின் சூட்டினைக் குறைக்கும். வேர்வையையும் வர விடாமல் தடுக்கிறது. அதே வேளையில் வட இந்தியாவைப் பொறுத்தவரை நிலப்பரப்பின் நடுவில் இருப்பதால் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கிறது. அதனால் உடலினைத் தணிக்கும் வேர்வை இயல்பாகவே வருவதால் அதிக வெப்பத்தினைத் தாங்கும் வாய்ப்பு அவர்களுக்கு நம்மைவிட அதிகமாகிறது. இதனால் நாம் புரிந்துகொள்வது என்னவென்றால் இங்கே சராசரியாக அடிக்கும் 32 டிகிரி வெயிலின் தாக்கம் வட இந்தியாவில் அடிக்கக்கூடிய 40 டிகிரி வெயிலுக்குச் சமம் என்பதே” என்கிறார் வெற்றிச்செல்வன்.

ஒரு சில விஷயங்களை எத்தனை முறை திருப்பிக் கூறினாலும் மீண்டும் மீண்டும் சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. அதில் காலநிலை மாற்றம், கரிம வாயு உமிழ்வு, கடல் மட்டம் உயர்வு என்று பெயர்களை மீண்டும் மீண்டும் நீங்கள் பார்க்கலாம், கேட்கலாம். நாம் பள்ளியில் படித்த நாள்களிலிருந்து கேட்டோம், கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஏனெனில் இவை இயற்கை மாற்றங்கள் அல்ல, அனைத்தும் செயற்கையான மனிதர்களின் தவறுகளிலிருந்தே பிறந்துள்ளன.

1800களிலிருந்து, மனித செயல்பாடுகளே காலநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணமாக இருந்துவருகின்றன. இதில் முதன்மையாக நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிபொருள்களை எரிப்பதால் ஏற்படுகிறது. எரிபொருள்களை எரிப்பது பூமியைச் சுற்றிப் போர்த்தப்பட்ட போர்வை போன்ற கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகளை உருவாக்குகிறது, இது சூரிய ஒளியைச் சூடுபடுத்தி வெப்பநிலையை உயர்த்துகிறது. இதுவே கிளோபல் வார்மிங் என்று சொல்லப்படுகிறது.

கொளுத்தும் வெயில், அசராத மக்கள்

“ஆம், பூமி அடுப்பைப் போல மெல்லச் சூடாகிக் கொண்டிருக்கிறது. சென்னையின் சராசரி வெப்பநிலை 5 வருடங்களுக்கு முன்பு 32 டிகிரி செல்ஸியஸ். ஆனால் இப்போது 36, 37 டிகிரி வரை செல்கிறது. IMD இப்போது மழைக்குப் பதிலாக வெப்ப அலைக்கு எச்சரிக்கை விடத் தொடங்கியுள்ளார்கள். கடந்த கோடைக் காலத்தில் மட்டும் 220 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பாலியா என்கிற உத்தரப்பிரதேச நகரத்தில் ஒரே வாரத்தில் 97 நபர்கள் மரணித்திருக்கிறார்கள். காலநிலை மாற்றம் கோடைக்காலத்தின் நேரத்தை நீடித்துள்ளது. நாம் இந்தந்த மாதங்களில் இது நடக்கும் என்று உருவாக்கி வைத்திருக்கும் அமைப்பை இது சிதறடித்துக் கொண்டிருக்கிறது. இனிவரும் காலங்களில் 10 மாதங்களை வெயிலில்தான் நாம் கழிக்கப் போகிறோம். ஜனவரி மாதம் ஆரம்பித்த வெயில் செப்டம்பரில் குறைகிற போக்கு விரைவில் நடக்கும். அதாவது வருடத்துக்கு இனி 272 நாள்கள் சம்மர் என்கிற நிலை ஏற்படும்” என்று அதிர்ச்சி அளிக்கும் தரவுகளைச் சுட்டிக்காட்டுகிறார் வெற்றிச்செல்வன்.

“இது நமக்கு மட்டும் இருக்கும் பிரச்னை கிடையாது. உலகமே இதைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 16 துபாயில் நடைபெற்ற தொடர் மழை எதிர்பார்க்க முடியாத காலநிலை மாற்றம்தான். அதேவேளையில் துபாய்க்கு நேரெதிராக பூமிப் பந்தின் மறுபக்கம் இருக்கும் மும்பையில் வெப்ப அலைகள் கொடூரமாக வீசுகின்றன. இது Wet temperature மற்றும் Dry temperature சமநிலையை அடையும் போக்கைக் காட்டுகிறது. இதே நிலைமை தொடர்ந்தால் மன அழுத்தம், கருக்கலைவு, கொள்ளை நோய் பரவுவது போன்ற போக்கினைப் பார்க்க முடியும். கொள்ளை நோய் என்று சொல்வதற்குக் காரணம் இப்போது ஆப்பிரிக்கக் கொசுக்கள் இங்கே வருவதை நாம் பார்க்க முடிகிறது. இதற்குக் காரணம் அங்கிருக்கும் அதே வெப்பநிலைக்கு நமது நிலப்பரப்பு மாறுவதும் ஒரு காரணமாகப் பார்க்க முடிகிறது. 

வெயில்

பூமி சூடாகச் சூடாக அதன் வெப்பத்தைக் கடல் உள்வாங்கிக் கொள்ளும். கடலின் சராசரி ஆழம் 4 கிலோமீட்டர்கள். 1970 – 2020 வரை எடுக்கப்பட்ட ஆய்வில் தற்போது அதில் 2 கிலோமீட்டர்கள் வரை வெப்பம் பரவியிருக்கிறது என்கிறது. அதாவது கடலுக்குள் 2,500 கோடி குண்டுகளைப் போட்டால் எவ்வளவு வெப்பம் வருமோ அவ்வளவு வெப்பம் வீசிக்கொண்டிருக்கிறது. இது உலக அளவில் பெரும் பாதிப்புகளை உருவாக்கும் என்பது நிச்சயம். அதேநேரத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்கள் பெரிதும் பாதிப்படைய வாய்ப்பிருக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் கடல் நீரினால் நாகப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களும், நிலத்தடி பற்றாக்குறையினால் தருமபுரியும் அடிவாங்கும் வாய்ப்புகள் அதிகம்” என்கிறார் வெற்றிச்செல்வன்.