Modi: `அப்பாவி குழந்தைகள் கொல்லப்படும்போது..!’ – உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் குறித்து பிரதமர் மோடி

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக கடந்த திங்கள் கிழமை ரஷ்யா சென்றிருந்தார். பிரதமர் ரஷ்யாவில் இறங்கிய அன்றும், ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைன் நகரங்களைத் தாக்கியிருக்கிறது. இந்த தாக்குதலில், உக்ரைனின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட கட்டடங்கள் சேதமாகின. சிகிச்சையில் இருந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், இந்த தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மோடி – புதின்

இந்த தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் மோடியின் ரஷ்யப் பயணம் குறித்து, உக்ரைன் பிரதமர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தன் எக்ஸ் பக்கத்தில், “ உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், உலகின் மிக ரத்தம் தோய்ந்த குற்றவாளியை மாஸ்கோவில் கட்டிப்பிடித்ததைப் பார்ப்பது, அமைதி முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றமும் பேரழிவு தரும் அடியுமாகும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், பயணத்தின் இறுதிநாளான நேற்று பிரதமர் மோடி பிரதமர் புதினுடன் சந்திப்பை நடத்தினார். அப்போது,“போர், மோதல், பயங்கரவாத செயல்களால் மக்கள் கொல்லப்படும்போது, மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட எவரும் வலியை உணர்வார்கள். குறிப்பாக அப்பாவி குழந்தைகள் கொல்லப்படும்போது அந்த வலியால் இதயம் வெடித்து விடும். ஜம்மு காஷ்மீரில் இந்தியா தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்களை சந்தித்து வரும் நிலையில், கடந்த 40 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் சவாலை இந்தியா எதிர்கொண்டுள்ளது. போர்க்களத்தில் தீர்வு சாத்தியமில்லை.

மோடி – புதின்

அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் நான் கண்டிக்கிறேன். அமைதியை நிலைநாட்ட அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்க இந்தியா தயாராக உள்ளது. இந்தியா அமைதியின் பக்கம் இருக்கிறது என உங்களுக்கும் உலக சமூகத்திற்கும் உறுதியளிக்கிறேன். திங்கள் கிழமை நீங்கள் கூறியதைக் கேட்டது எனக்கு நம்பிக்கையளித்துள்ளது. புதிய தலைமுறையினருக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க அமைதிப் பேச்சுவார்த்தைதான் பயன்தரும். வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுக்கு மத்தியில் அமைதி வெற்றியடையாது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா, “ரஷ்யாவின் மருத்துவமனை தாக்குதலில் அப்பாவிகளின் மரணம் குறித்து கவலையும் வருத்தமும் தெரிவிப்பதில் பிரதமர் மோடி மிகவும் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் இருந்தார். இந்த மோதலுக்கான தீர்வை போர்க்களத்தில் காண முடியாது என்றும் அது உரையாடல் மற்றும் இராஜதந்திரத்தின் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என்றும் தெளிவாகச் சொன்னார்.

மோடி – புதின்

சந்திப்பின் நிகழ்ச்சி நிரலில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, குறிப்பாக எரிசக்தி, வர்த்தகம், உற்பத்தி மற்றும் உரங்கள் ஆகிய துறைகள் குறித்து பேசியது முக்கிய அம்சமாக இருந்தது. மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதில் இந்தியா ஒரு முக்கிய நாடாக மாறியுள்ளது. இந்தியா – ரஷ்யா உறவுகள் மேலும் வலுவடையும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர், எரிசக்தி துறையில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு உலகிற்கும் உதவியது எனத் தெரிவித்திருக்கிறார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88