ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைப் பின்பற்றும் பா.ஜ.க, பட்டியல், பழங்குடியின மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரானது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சாடிவருகின்றன. சமீபத்தில், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு மக்களவையின் தற்காலிக சபாநாயகர் நியமன விவகாரத்தில் 8-வது முறையாக வெற்றிபெற்றிருக்கும் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி சுரேஷை தவிர்த்துவிட்டு, 7-வது முறையாக வெற்றிபெற்றிருக்கும் பர்த்ருஹரி மஹ்தாப் என்பவரை பா.ஜ.க கூட்டணி அரசு நியமித்தது.
அப்போது, சுரேஷ் தலித் என்பதால், அதிக முறை வெற்றிபெற்ற எம்.பி-யாக இருந்தும் தற்காலிக சபாநாயகர் பதவிக்கு பா.ஜ.க அவரை புறக்கணித்தது என காங்கிரஸ் சாடியது. இந்த நிலையில், கர்நாடகாவிலிருந்து ஏழாவது முறையாக மக்களவைக்குச் சென்றிருக்கும் பா.ஜ.க எம்.பி ரமேஷ் ஜிகஜினகி, தான் தலித் என்பதால் கேபினட் அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லையா என பா.ஜ.க தலைமையை நோக்கி வேதனை தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் பா.ஜ.க எம்.பி ரமேஷ் ஜிகஜினகி, “தென்னிந்தியாவிலிருந்து 7 முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தலித் எம்.பி நான்தான். ஆனால், என் அதிர்ஷ்டத்தைப் பாருங்கள் மாற்றுச் சமூகத்தினர் அனைவரும் கேபினட் அமைச்சர்கள் ஆகிவிட்டார்கள். தலித்துகள் பா.ஜ.க-வை ஆதரிக்கவில்லையா… நான் மிகவும் வேதனையடைந்திருக்கிறேன்.
நான் எனக்காக அமைச்சரவைப் பதவியைத் தேடவில்லை. ஆனால், நான் எனது தொகுதிக்குத் திரும்பியபோது பலரும் என்னை விமர்சித்தனர். பா.ஜ.க தலித்களுக்கு எதிரானது என்று பல பேர் என்னை முன்பே எச்சரித்திருக்கின்றனர். மத்திய அரசில் நான் அமைச்சராக வேண்டும் என்று மக்களிடமிருந்து அழுத்தம் வருகிறது. இது நியாயமா, அநியாயமா…” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.
ரமேஷ் ஜிகஜினகி, கர்நாடகாவின் சிக்கோடி தொகுதியிலிருந்து மூன்று முறை, பிஜப்பூர் தொகுதியிலிருந்து நான்கு முறை என மொத்தம் ஏழு முறை எம்.பி-யாக வெற்றிபெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.