`மாயாவதி அவரது ஆட்சிக் காலத்தை மறந்துவிட்டார்..!’ – அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை ரோஜா இல்லம் என்ற விருந்துநர் மாளிகையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டபோது, ‘சி.பி.ஐ விசாரிக்க கூடாது’ என்று உச்ச நீதிமன்றத்திற்கு சென்றவர் அவர். அவர் ஆட்சியில் இருந்தால் சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது. அவர் ஆட்சியில் இல்லை என்றால் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். இப்படிப்பட்ட நிலைப்பாடு எடுக்கின்ற எடப்பாடி பழனிசாமிக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் காவல்துறை இதில் நியாயமாக செயல்படும் என்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நம்புகிறார்கள். அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களும் நம்புகிறார்கள். இதில் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. தமிழ்நாடு முதலமைச்சருக்கும் கிடையாது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வாங்கி தருகின்ற அளவிற்கு நமது அரசு செயல்படும். இயக்குநர் ரஞ்சித் பதிவு பற்றி கேட்கிறீர்கள். சமூகநீதியை கட்டிக் காப்பதில் இந்தியாவிலேயே தி.மு.க-வுக்கும், இந்தியா கூட்டணிக்கும் இணையாக வேறு எந்த கட்சிகளும் கிடையாது. வேறு யாரையும் சொல்ல முடியாது.

ஆம்ஸ்ட்ராங் – பா.ரஞ்சித்

சமூகநீதியை பாதுகாக்க வேண்டும்… சமூகநீதியை போற்ற வேண்டும் என்பதோடு, சமூகநீதியை பாதுகாப்பதில் யாருக்கும் விட்டுக் கொடுக்கும் அவசியம் கிடையாது. ஏனென்றால், ஒடுக்கப்பட்டவர்களுக்காக நடக்கின்ற இயக்கம்தான் தி.மு.க. ஒடுக்கப்பட்டவர்களை தூக்கி விட வேண்டும்.. முன்னேற்றமடைய வைக்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம் தி.மு.க. இது, ஏழை மக்களுடைய இயக்கம். அப்படிப்பட்ட இந்த இயக்கத்தில் தனிப்பட்ட எந்த மனிதர்களுக்காகவும் வேண்டி பணிந்து போக வேண்டிய அவசியமும், அவர்களை விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமும் கிடையாது. அவர் எப்படிப்பட்ட மனிதனாக இருந்தாலும் அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டால் குற்றவாளி கூண்டில் ஏற்றுவதற்கு தமிழ்நாட்டின் காவல்துறை என்றைக்குமே தயங்காது. ஓ.பி.எஸ் அவரது காலத்தை மறந்து விட்டார். எடப்பாடி பழனிசாமியும் அவரது காலத்தை மறந்து விட்டார்.

அமைச்சர் ரகுபதி

ஒவ்வொரு ஆட்சியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும். அப்படி நடக்கின்ற சம்பவங்கள் அது ஆட்சியாளர்களாலா இல்லையா என்பதை தான் பார்க்க வேண்டும். நாங்கள் நடைபெறக்கூடிய சம்பவங்களை தடுத்திருக்கிறோம். முன்கூட்டியே தடுக்க முயற்சி செய்திருக்கிறோம். அதை தூண்டி விடுவது நாங்கள் கிடையாது. நாங்கள் எடுத்திருக்கும் கடுமையான நடவடிக்கையைப்போல் எந்த அரசும் நிச்சயம் எடுக்க முடியாது.

யாரும் எங்களுக்கு வேண்டியவர்கள் அல்ல… எங்களது கட்சிக்காரர்களும் அல்ல. அதே நேரத்தில், கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பொள்ளாச்சி சம்பவங்கள் எல்லாம் பார்த்தால் யார் சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என்பதெல்லாம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட சூழ்நிலை தற்போது கிடையாது. அந்த நிலையும் கிடையாது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதால் தான் நாம் சுதந்திரமாக நடந்து வருகின்றோம். தமிழ்நாட்டில் இருக்கும் சுதந்திரத்தை போல் இந்த அளவிற்கு வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. அதற்காக மற்ற மாநிலத்தை நாங்கள் குறை சொல்லவில்லை. ஆனால், முழு உரிமை.. முழு சுதந்திரம் என்று தமிழ்நாட்டில் தான் உள்ளது. ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் அவர்களை நேரில் சந்தித்து பேசி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று சொல்லி வருகின்ற ஆட்சிதான் தற்போதைய ஆட்சி. யாரையும் சந்திக்க அஞ்சுகின்ற ஆட்சி மு.க.ஸ்டாலின் நடத்தும் ஆட்சி அல்ல. யாராக இருந்தாலும் அவர்களை நேரடியாக சந்தித்து அதை கையாளுகின்ற திறமை உடைய முதலமைச்சர் தான் தமிழ்நாடு முதலமைச்சர்.

மாயாவதி

நிச்சயம் இரும்பு கரம் கொண்டு இப்படிப்பட்டவர்களை அடக்குவார். இதனால், தி.மு.க-வுக்கு எந்த விதத்திலும் பாதகமாகாது. தேர்தலுக்கும், இதற்கும் சம்பந்தம் கிடையாது. மீண்டும் தி.மு.க தான் தொடர்ந்து ஆட்சிக்கு வரும். அதை தடுக்க இங்கு எந்த சக்தியும் வரவில்லை. மாயாவதி அவரது ஆட்சி காலத்தை மறந்து விட்டார். உத்தரப்பிரதேசத்தில் அப்போது எப்படி எல்லாம் ஆட்சி செய்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியிலிருந்து அவர் ஒதுக்கப்பட்ட அளவிற்கு இருக்கிறார். அவ்வாறு இருந்தாலும் நாங்கள் அவரையும் மதிக்க கூடியவர்கள். அவர்களை நாங்கள் வெறுக்கவில்லை. அவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று அவரது கருத்தை சொல்லி இருக்கிறார். ஆனால், மற்றவர்கள் எல்லோரும் தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இருக்கிறது என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதில், காவல்துறை சிறப்பாக செயல்பட்டு தங்களது திறமையை வெளிப்படுத்தும்” என்றார்.