‘ஈகோ மோதலால் வார் ரூம் முடக்கமா?’ – சர்ச்சையில் சத்தியமூர்த்தி பவன்

சமீபத்தில் காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை இந்தியாவிலேயே முதன்மையானதாக உருவாக்க வேண்டுமென ராகுல் காந்தி 24 மணிநேரமும் உழைத்துக் கொண்டு இருக்கிறார். நாம் பிறரைச் சார்ந்து இருக்கப் போகிறோமா.. அல்லது சுயமாக இருக்கப் போகிறோமா.. என்கிற கேள்விக்கான விடையை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்” எனத் தொண்டர்களிடையே உற்சாகம் பொங்கப் பேசியிருந்தார். ஆனால் அடுத்த வாரமே ஈகோவின் உச்சத்துக்குச் சென்ற பெருந்தகை கட்சியின் இதயமாகக் கருதப்படும் ‘வார் ரூம்’யே முடக்கி இருப்பதாக வெளியாகும் தகவல் சத்தியமூர்த்திபவனில் அனல் தகிக்கச் செய்திருக்கிறது.

செல்வப்பெருந்தகை – காங்கிரஸ்

இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் சிலர், “கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டார். அப்போது துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வார் ரூம் அமைக்கப்பட்டது. அவர்கள்தான் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்கான வியூகங்களை வகுத்துச் செயல்பட்டனர். இந்த சூழலில்தான் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார்.

தான் பதவிக்கு வந்த உடனேயே கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர் என்பதால் பொன்.கிருஷ்ணமூர்த்திக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டார். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி தனது பணியில் சுணக்கம் காட்டத் தொடங்கினார். இந்த சூழலில்தான் டெல்லி லாபி மூலமாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ‘வார் ரூம்’ தலைவர் பொறுப்பைத் தனதாக்கிக் கொண்டார், வசந்தராஜ். ஆனால் இதில் பெருந்தகைக்கு ஏக வருத்தம். அதற்குத் தனது ஆதரவாளரை வார் ரூம் தலைவர் பதவிக்குக் கொண்டுவர வேண்டும் பெருந்தகை நினைத்திருந்ததுதான் காரணம்.

சசிகாந்த் செந்தில்!

பிறகு வசந்தராஜூக்கு நெருக்கடி கொடுப்பதற்காக அவரது அனுமதி இல்லாமலேயே சுமதி அன்பரசு, கிருத்திகா பாலகிருஷ்ணன், சிவக்குமார் ஆகியோர் வார் ரூம் துணைத் தலைவர்களாகப் பெருந்தகை நியமித்தார். இதில் இரண்டு பேருக்குமான மோதல் மேலும் கூர்மையடைந்தது. நிலைமையைப் புரிந்துகொண்ட சசிகாந்த் செந்தில், ‘நாம் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும்.

மீண்டும் பா.ஜ.க வெற்றி பெற்றுவிட்டால் பெரும் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்’ என வார் ரூம் நிர்வாகிகளை அழைத்துப் பேசினாராம். அதன் பிறகு வார் ரூம் இயங்கி வந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவடைந்ததும் வார் ரூம் செயல்பாட்டை முற்றிலும் முடக்கி விட்டார், பெருந்தகை. ஆனால் கட்சி கூட்டங்களில் மட்டும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும் எனப் பேசி வருகிறார். இது எந்த விதத்தில் நியாயம்?. எனவே, இதில் டெல்லி உடனடியாக தலையிட வேண்டும்” எனக் கொதித்தனர்.

சத்தியமூர்த்தி பவன்

இதையடுத்து காங்கிரஸ் வார் ரூமில் பணியாற்றிய சிலரிடம் பேசினோம், “தேர்தல் வெற்றிக்கும், கட்சியை வளர்ப்பதற்கும் வார் ரூம்தான் முக்கியமான ஒன்று. அதன்படி சத்தியமூர்த்தி பவனில் இயங்கி வந்த வார் ரூமில் 10 பேர் பணியாற்றி வந்தோம். காங்கிரஸ் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கார்கேவின் கருத்துக்களை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சென்றோம். இது மக்களிடம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. மேலும் நடந்து முடிந்த உள்ளாட்சி, சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களின்போது தெரு வாரியாக மக்களின் மன நிலையைச் சேகரித்து அதற்கு ஏற்றார் போல வியூகங்களை வகுத்தோம். எங்களது செயல்பாடுகளைப் பார்த்து வியந்து போன டி.ஆர்.பி.ராஜா சத்தியமூர்த்தி பவனுக்கே நேரில் வந்து பாராட்டினார். அவருடன் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டோம். பிறகு தி.மு.க-வுடன் இணைந்து பணியாற்றும்படி கேட்டுக் கொண்டார்.

அதன் அடிப்படையில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்காகக் கடுமையாக உழைத்தோம். தேர்தல் முடிவில் அதற்கு ஏற்ற பலனும் கிடைத்தது. ஆனால் ஈகோ காரணமாக வார் ரூம் செயல்பாட்டையே முடக்கிவிட்டார், பெருந்தகை. தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் அதற்கான வியூகங்களை தற்போதே வகுக்க வேண்டும். ஆனால் தலைகீழாக வார் ரூம் முடக்கப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தரவுப்படி தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தானில் வார் ரூமில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு மாவட்ட தலைவர், மாநிலச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை ஊக்கத்தொகையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அங்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. ஆனால் இங்குக் கோஷ்டி அரசியலைத்தான் செய்து வருகிறார்கள். எப்போது மாறப்போகிறார்கள் எனத் தெரியவில்லை” என்றனர் வேதனையாக.

செல்வப்பெருந்தகை

இதுகுறித்து வார் ரூம் தலைவர் வசந்தராஜிடம் விளக்கம் கேட்டோம், ” ‘வார் ரூமில் பணியாற்றுவோருக்கு ஊதியம் வழங்க வேண்டியது இல்லை. கட்சிக்கு உண்மையாக உழைப்பவர்களாக இருந்தால் இலவசமாக வேலை செய்ய வேண்டும் என செல்வப்பெருந்தகையிடம் அவரது ஆதரவாளர் செல்வம் சொல்லியிருக்கிறார். இதையடுத்து கலைக்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்கள். என்னிடம் கேட்டபோது, ‘குடும்பத்தை விட்டு விட்டு வந்து உழைக்கிறார்கள். எனவே அவர்களுக்கு ஊதியமே வழங்க வேண்டும். மாதம் ரூ.2 லட்சம் செலவாகும்’ என, தெரிவித்தேன். அதன்பிறகு அவர் எதுவும் சொல்லவில்லை. ஆனால் டெல்லி 2026 தேர்தல் வரை வார் ரூம் மிகவும் தீவிரமாக இயங்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறது. எனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார்.

இறுதியாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் விளக்கம் கேட்டோம், “வார் ரூம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் தவறானது. சில மாற்றங்களை மட்டுமே செய்துள்ளோம். எந்த பிரச்சினையும் இல்லை” என்று முடித்துக்கொண்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88