Ladakh: `லடாக் பகுதியில் அத்துமீறும் சீனா’ – கார்கேவின் விமர்சனமும், லடாக் எம்.பி விளக்கமும்!

இந்தியா சீனா எல்லையான லடாக் பகுதியில் சீனா தொடர்ந்து ஆக்கிமிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றன. இந்த நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில், சீனாவின் ராணுவம் நீண்ட தூரம் ஆயுதங்கள் மற்றும் எரிபொருளை சேமித்து வைப்பதற்காக நிலத்தடி பதுங்கு குழிகள் மற்றும் கடினமான தங்குமிடங்களைக் கட்டியிருப்பதாக செயற்கைக்கோள் படங்களுடன் தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

மோடி

அந்த செய்தியின் பக்கத்தை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,“கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பாங்காங் ஏரிக்கரையின் அருகே ராணுவ தளங்களை சீனா அமைத்தது எப்படி? கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தில் நமது ராணுவ வீரா்கள் உயிரிழந்த நிலையில் அங்கு எந்த நிலமும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகவில்லை என பிரதமா் மோடி 5 ஆண்டுகளாக கூறி வருகிறாா். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி சீனாவுடனான எல்லை பிரச்னை குறித்த இந்தியாவின் வலுவான நிலைப்பாட்டை வெளிநாட்டு ஊடகங்கள் முன் பிரதமா் மோடி தெரிவிக்க முடியாமல் தோல்வியடைந்தாா்.

அதைத் தொடா்ந்து, இந்திய பகுதிகள் ஏதும் சீனாவால் ஆக்கிரமிக்கப்படவில்லை என கடந்த ஏப்ரல் 13-ம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அண்மையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பின்போது எல்லை விவகாரத்தில் அமைதி திரும்ப வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் தெரிவித்தாா். ஆனாலும் சிரிஜாப் பகுதியில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை சீனா தொடா்ந்து ஆக்கிரமித்து வருகிறது.

மல்லிகார்ஜுன கார்கே

இதுவே மோடி அரசின் கொள்கைகள் தோல்விக்கு சான்றாகும். எனவே, சீனாவுடனான எல்லை விவகாரத்தில் நிலவும் உண்மையான சூழலை வெளிப்படையாக தெரிவித்து, நாட்டு மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என மீண்டும் ஒருமுறை மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் கருத்து குறித்து லடாக் எம்.பி முகமது ஹனீபா, “கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக எல்.ஏ.சி மற்றும் பாங்காங் ஏரியில், பல ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன. சீனா நமது எல்லைக்குள் ஊடுருவியுள்ளது. எல்லையில் வசிக்கும் மக்கள் தங்கள் நிலத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.

முகமது ஹனீபா

ஆனால் அதே நேரத்தில், சுரங்கப்பாதைகள், சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்த அம்சங்களில் அரசாங்கம் ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது, மேலும் இப்பகுதியில் ஒரு சிறந்த உள்கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.